ஜனநாயகன் சென்சார் சான்றிதழ் வழக்கில் உத்தரவு ஒத்திவைப்பு
சென்னை : நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் மற்றும் சிக்கல்கள் குறித்து தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (20.01.2026) விசாரணை நடைபெற்றது. இதில் தணிக்கை வாரியம் (CBFC), படத் தயாரிப்பு நிறுவனம் மற்றும் தலைமை நீதிபதி தரப்பில் முன்வைக்கப்பட்ட முக்கிய வாதங்கள் வருமாறு:
தலைமை நீதிபதியின் கேள்விகள் மற்றும் கருத்துக்கள்:
மண்டல தணிக்கை வாரியத்தில் யார் படத்தைப் பார்த்தார்கள்? சட்டப்படி படத்தை ஆய்வு செய்ய யாருக்கு அதிகாரம் உள்ளது? என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.தணிக்கை வாரியம் பதிலளிக்க போதிய அவகாசம் வழங்காமல், தனி நீதிபதி ஒரே நாளில் இந்த வழக்கில் முடிவெடுத்து உத்தரவிட்டுள்ளதாக தலைமை நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.படத்திற்கு எதிராக புகார் கொடுத்தது யார்? அந்தப் புகார் யாரிடம் கிடைத்தது? என்பது குறித்தும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
தணிக்கை வாரியத்தின் (CBFC) வாதம்:
படத்தை ஆய்வு செய்து ஆலோசனை வழங்க ஒரு குழு உள்ளது. அக்குழுவே படத்தைப் பார்த்தது. மண்டல தணிக்கை அதிகாரி மட்டும் தனியாகப் பார்க்கவில்லை.படத்திற்குச் சான்றிதழ் வழங்குவது குறித்து தணிக்கை வாரியம் இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை. மும்பையில் உள்ள தணிக்கை வாரியத் தலைவரிடம் இருந்து புகார் கிடைத்தது. தணிக்கைச் சான்று கொடுக்கும் வரை புகார் அளித்தவர் பற்றி தெரிவிக்க முடியாது. மறு ஆய்வுக்குழு அமைக்க 20 நாட்கள் அவகாசம் தேவை. வழக்குத் தொடரப்படாமல் இருந்திருந்தால் இந்நேரம் மறு ஆய்வு முடிந்திருக்கும். ஒருவேளை மறு ஆய்வுக்குச் சென்றால் படம் வெளியாவது மேலும் ஒரு மாதம் தள்ளிப்போக வாய்ப்புள்ளது.
தயாரிப்பு நிறுவனத்தின் வாதம்:
படத்தை ஜனவரி 9-ம் தேதியே வெளியிடத் திட்டமிட்டிருந்தோம். தணிக்கை நடைமுறைகளால் கடும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது மற்றும் பெரும் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது.படத்தை மறு ஆய்வுக்கு அனுப்புவதாகத் தகவல் மட்டுமே சொன்னார்கள், ஆனால் படத்திற்கு எதிரான புகார் என்ன என்பதைத் தெரிவிக்கவில்லை. டிசம்பர் 29-ம் தேதிக்கு பிறகு அனைத்தும் மறைக்கப்பட்டது. தணிக்கை குறித்த விவரங்கள் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்ற விதி மீறப்பட்டுள்ளது. தனி நீதிபதி அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்து தான் உத்தரவிட்டார், அதில் எந்தத் தவறும் இல்லை.
ஒரே நாளில் நடைமுறைகளை முடித்து உத்தரவு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நீதிபதிகள் ஏற்க மறுத்துவிட்டனர். மறு ஆய்வுக்குழு எத்தனை நாட்களில் முடிவெடுக்க வேண்டும் என தலைமை நீதிபதி கேட்டதற்கு, 20 நாட்களில் குழு அமைக்கப்பட வேண்டும் என தணிக்கை வாரியம் தெரிவித்துள்ளது. இவ்வாறு ஜனநாயகன் பட தயாரிப்பு நிறுவனம் மற்றும் தணிக்கை வாரியம் சார்பில் தொடர்ந்து காரசாரமான வாதங்கள் முன் வைக்கப்பட்டு வருவதால் கிட்டதட்ட 5 மணி நேரத்திற்கும் மேலாக இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்று வழங்குவது தொடர்பான வழக்கில் உத்தரவை ஒத்திவைப்பதாக தெரிவித்துள்ளனர். இதனால் ஜனநாயகன் படம் ஜனவரி மாதத்தில் வெளியாவதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவே என்றே சொல்லப்படுகிறது.