'ஜனநாயகன்' படத்திற்கு அடுத்தடுத்த சிக்கல்: உச்ச நீதிமன்றத்தில் தணிக்கை வாரியம் புதிய மனு
டில்லி : நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்தை வெளியிடுவதில் தொடர்ந்து முட்டுக்கட்டைகள் நீடித்து வரும் நிலையில், தற்போது இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தை எட்டியுள்ளது. படத்தின் தணிக்கைச் சான்றிதழ் தொடர்பாக நிலவி வரும் சட்டப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, இந்தியத் தணிக்கை வாரியம் (CBFC) உச்ச நீதிமன்றத்தில் கேவியட் (Caveat) மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.
'ஜனநாயகன்' திரைப்படத்தின் காட்சிகளுக்குத் தணிக்கை வாரியம் சில ஆட்சேபனைகளைத் தெரிவித்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் படத்திற்கு சென்சார் சான்று வழங்க தணிக்கை வாரியம் மறுத்து வருகிறது. இது தொடர்பாக படக்குழு சார்பில் முதலில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. பிறகு தணிக்கை வாரியமும் படத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுத்து வந்தது. இதற்கிடையில் படக்குழு சார்பில் சுப்ரீம் கோர்ட்டிற்கு சென்ற போது, இந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டே விசாரிக்கும் எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து விட்டனர். இது தொடர்பான வழக்கை ஏற்கனவே விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு, படத்தின் தணிக்கைச் சான்றிதழ் தொடர்பான வழக்கை ஒரு தனி நீதிபதியே விசாரித்து முடிவெடுக்கலாம் என்று உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கை சமீபத்தில் விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக கூறியது. இதனால் ஜனநாயகன் படம் வருமா? வராதா? என்ற கேள்வி எழ துவங்கி விட்டது. இதற்கிடையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் முடிவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டை மீண்டும் படக்குழு அனுக வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது. இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் தணிக்கை வாரியம் சென்று புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
அந்த மனுவில், சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராகத் திரைப்படத் தரப்பிலோ அல்லது வேறு தரப்பினரோ உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. அவ்வாறு மேல்முறையீடு செய்யப்படும் பட்சத்தில், தங்கள் தரப்பு வாதத்தைக் கேட்காமல் எந்த விதமான இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது என்பதற்காகவே தணிக்கை வாரியம் இந்த 'கேவியட்' மனுவைத் தாக்கல் செய்துள்ளது. இதன் மூலம், இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் ஏதேனும் உத்தரவு பிறப்பிக்கும் முன் தணிக்கை வாரியத்தின் விளக்கத்தையும் கட்டாயம் கேட்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு, இந்தச் சட்ட ரீதியான நகர்வுகள் சற்றே ஏமாற்றத்தை அளித்துள்ளன. தணிக்கைச் சான்றிதழ் கிடைப்பதில் ஏற்படும் தாமதம் படத்தின் வருமானத்தை மேலும் பாதிக்கக்கூடும் என்பதால், 'ஜனநாயகன்' குழுவினருக்கு இது ஒரு கூடுதல் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்த சிக்கல்கள் ஜனநாயகன் படத்திற்கு எழுந்து வருவதால் படக்குழு மிகப் பெரிய நஷ்டத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.