விஜய் தலைமையில்.. பிரமாண்ட தவெக போராட்டம்.. ஆயிரக்கணக்கில் திரண்ட தொண்டர்கள்!
Jul 13, 2025,04:09 PM IST
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் திருப்புவனம் அஜீத் குமார் மரணத்தைக் கண்டித்து சென்னை சிவானந்தா சாலையில் இன்று நடைபெற்ற போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். கட்சித் தலைவர் விஜய் இந்தப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கினார். அவர் கலந்து கொண்ட முதல் அரசியல் போராட்டம் இது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் காளியம்மன் கோவிலில் காவலாளியாக வேலை பார்த்து வந்தவர் அஜீத் குமார். அவர் மீது நிகிதா என்ற பெண் நகைத் திருட்டுப் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரை போலீஸார் விசாரித்தபோது போலீஸார் சரமாரியாக அடித்ததில் அஜீத் குமார் மரணமடைந்ததாக பெரும் சர்ச்சை எழுந்தது. இந்த விவகாரத்தில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையும் கடுமையான கண்டனத்தையும், கருத்தையும் தெரிவித்தது.
இந்த நிலையில் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். சம்பந்தப்பட்ட காவலர்கள் கைது செய்யப்பட்டனர். டிஎஸ்பி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தை அனைத்து அரசியல் கட்சிகளும் கடுமையாக கண்டித்திருந்தன. நாம் தமிழர் கட்சி சார்பில் அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திருப்புவனத்தில் பிரமாண்ட போராட்டத்தையும் நடத்தியிருந்தார். இந்தப் பின்னணியில், இன்று தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
விஜய்யே இதற்குத் தலைமை தாங்கினார். அவர் கலந்து கொள்ளும் முதல் அரசியல் போராட்டம் இது என்பதால் தொண்டர்கள் பெரும் உற்சாகமடைந்தனர். ஆயிரக்கணக்கில் தொண்டர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
சுவாமி சிவானந்தா சாலையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் கட்சிக் கொடிகளுடன் ஆண்களும் பெண்களுமாக தவெகவினர் பெரும் திரளாக கலந்து கொண்டனர். விஜய் மேடைக்கு வந்ததும் போராட்டம் தொடங்கியது.
கருப்பு நிற உடையுடன் விஜய்
போராட்டத்தில் விஜய் கருப்பு நிற உடை அணிந்து, இறுக்கமான முகத்துடன் கலந்து கொண்டார். கையில் சாரி வேண்டாம் நீதி வேண்டும் என்று எழுதப்பட்டிருந்த பதாகையை ஏந்தியிருந்தார். கட்சி பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முழக்கங்களை எழுப்ப கூட்டத்தினர் அதைத் திருப்பிச் சொன்னார்கள்.