தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
சென்னை: கோவையில் இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் தவெக பூத் கமிட்டி கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து புறப்பட்டார் தவெக தலைவர் விஜய்.
நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றி கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. வழக்கம் போல இந்த மாநாட்டில் விஜயின் பேச்சு அனல் பறக்க இருந்தது. இதில் திமுகவையும், பாஜகவையும், கடுமையாக விமர்சித்து பேசினார். அதிலும் முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் மு.க ஸ்டாலின் பெயர்களை குறிப்பிட்டு பேசியிருந்தார். அப்போது தமிழக வெற்றி கழகத்தின் முதல் பூத் கமிட்டி மாநாடு விரைவில் நடைபெறும். இந்த மாநாட்டின் மூலம் மிகப்பெரிய தாக்கம் ஏற்படும் எனவும் அறிவித்திருந்தார்.
இதனை அடுத்து பூத் கமிட்டி மாநாடு நடைபெறுவதற்கான இடம் தேர்வு செய்யும் பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. பின்னர் மாநாட்டிற்காக கோவை மாவட்டம் தேர்வு செய்யப்பட்டு தேதியும் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பூத் கமிட்டி நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. இதற்கிடையே அக்கட்சி பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இந்த மாநாட்டில் தவெக தலைவர் விஜய் கலந்து கொள்வார் எனவும் கூறி இருந்தார். இதனையடுத்து இந்த பூத் கமிட்டி மாநாட்டில் கலந்து கொள்ளும் விஜய்யின் அனல் பறக்கும் பேச்சிற்கு மீண்டும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதே சமயத்தில் ஒவ்வொரு கட்சியின் பூத் கமிட்டி மாநாடு என்பது மிக முக்கியமான ஒன்றாகும். இதனால் தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டி கருத்தரங்கம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தை பொறுத்தவரை, 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பூத் கமிட்டி கருத்தரங்கம் இன்றும், நாளையும் நடத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி, கோவையில் உள்ள குரும்பாளையம் பகுதியில் அமைந்துள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பூத் கமிட்டி கருத்தரங்கு இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது. இதன் முதற்கட்டமாக சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர், கரூர், மாவட்ட பூத்கமிட்டி முகவர்கள் பங்கேற்கின்றனர்.
இங்கு விஜயை வரவேற்க வழி நெடுகிலும் விஜயின் புகைப்படம் பொறிக்கப்பட்ட வரவேற்பு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் மிக பிரம்மாண்ட அரங்கங்கள் அமைக்கப்பட்டு, 8000 பேர் அமரும் வகையில் இருக்கைகளும் போடப்பட்டுள்ளன.
இந்த கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக இன்று காலை 10 மணிக்கு சென்னையிலிருந்து தனி விமானத்தில் கோவை புறப்படுகிறார் தவெக தலைவர் விஜய். அங்கு கோவை விமான நிலையத்திற்கு காலை 11:00 மணிக்கு வரும் விஜயை வரவேற்க தொண்டர்களும், ரசிகர்களும், ஏராளமானோர் திரண்டு எதிர்பார்த்து காத்து வருகின்றனர். மேலும் ஏராளமான தொண்டர்கள் கோவை விமான நிலையம் நோக்கி திரள்வதால் ஆங்காங்கே போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகம் தொடங்கிய நாள் முதல், விஜயின் நகர்வுகள் ஒவ்வொன்றையும் தமிழக மக்களால் உற்று நோக்கி பார்க்கப்பட்டு வரும் நிலையில், முதல் முறையாக தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டிற்கும் எதிர்பார்ப்பு வலுத்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் மாநாட்டில் விஜய் என்ன பேசுவார்? யாரை தாக்கி பேசுவார் அல்லது பஹல்காம் தாக்குதல் குறித்து பேசுவாரா என்று..!