பெரம்பூர் தொகுதியில் விஜய்க்கு செக்? 'விஜய்', 'ஜோசப்' பெயர்களில் 4 சுயேட்சைகள் போட்டி
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பெரம்பூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் போட்டியிடுவதை ஒட்டி, அங்கு பல சுவாரஸ்யமான மற்றும் சவாலான நகர்வுகள் அரங்கேறி வருகின்றன.
குறிப்பாக, நடிகர் விஜய்யின் பெயரை ஒத்த பெயருடைய நபர்கள் சுயேட்சையாக களம் இறங்கியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் சி.ஜோசப் விஜய், இந்தத் தேர்தலில் சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து தி.மு.க, பா.ம.க, மற்றும் நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். பெரம்பூர் தொகுதியில் மட்டும் சுமார் 40 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.
குழப்பத்தை ஏற்படுத்தும் 'பெயர்' அரசியல் :
தேர்தல் அரசியலில் முக்கிய தலைவர்களின் வாக்குகளைப் பிரிப்பதற்காக, அதே பெயருடைய நபர்களை சுயேட்சையாக நிறுத்துவது ஒரு பழைய யுக்தியாகும். அந்த வகையில், பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய்க்கு போட்டியாக 'விஜய்' என்ற பெயரில் இரண்டு பேரும், 'ஜோசப்' என்ற பெயரில் இரண்டு பேரும் சுயேட்சையாக வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.
வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள நபர்களின் விவரம்:
கே. விஜய் (K. Vijay): அகில இந்திய ஜனநாய மக்கள் கட்சி சார்பில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
விஜய் ஜி (Vijay G): சுயேட்சையாகப் போட்டியிடுகிறார்.
எம். ஜோசப் (M. Joseph): சுயேட்சையாக மனுத் தாக்கல் செய்துள்ளார்.
எஸ். ஜோசப் (S. Joseph): சுயேட்சையாகப் போட்டியிடுகிறார்.
ஏன் இந்த பெயர் போட்டி?
ஒரே பெயரில் பல வேட்பாளர்கள் இருக்கும் போது, குறிப்பாகப் படிப்பறிவு குறைந்த வாக்காளர்கள் அல்லது அவசரத்தில் வாக்களிக்கும் மக்கள் மத்தியில் இது குழப்பத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. விஜய்யின் முழுப் பெயரான சி. ஜோசப் விஜய் என்பதில் உள்ள 'ஜோசப்' மற்றும் 'விஜய்' ஆகிய பெயர்களைக் கொண்ட நான்கு பேர் களத்தில் இருப்பது, தவெக-வின் வாக்கு வங்கியில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இப்படித்தான் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டார். அப்போது அவருக்கு எதிராக பன்னீர்செல்வம் என்ற பெயரில் பலர் போட்டியிட்டார்கள் என்பது நினைவிருக்கலாம்.
பெரம்பூர் தொகுதியில் ஏற்கனவே தி.மு.க, பா.ம.க மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்த 40 வேட்பாளர்களின் வருகை தொகுதியை நட்சத்திர அந்தஸ்துள்ள தொகுதியாக மாற்றியுள்ளது. தனது அரசியல் பயணத்தின் முதல் தேர்தலைச் சந்திக்கும் நடிகர் விஜய்க்கு, இந்த 'பெயர்' அரசியல் சவால்களை முறியடித்து வெற்றி பெறுவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.