கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
கோவை: கோவையில் இன்று நடைபெறும் தவெக பூத் கமிட்டி கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக கோவை வந்த விஜய்க்கு தவெக தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு அளித்துள்ளனர்.
கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய விஜய், கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டத்தை கடந்த மாதம் சிறப்பாக நடத்தியிருந்தார். இந்த பொதுக்குழு கூட்டத்தில் தான் எதிர்க்கும் கட்சித் தலைவர்களின் பெயர்களை கூறி அனல் பறக்க பேசியிருந்தார். தவெக கட்சி மாநாடு முதல் சென்னையில் நடந்த பொதுக்குழு கூட்டம் வரை விஜய்யின் பேச்சில் அனல் பறந்தது. இது கட்சி தொண்டர்களின் எதிர்பார்ப்பையும் மீறி இருந்தது என்றே சொல்லலாம்.
பொதுக்குழு கூட்டத்தில் பேசிய விஜய் விரைவில் பூத் கமிட்டி மாநாடு நடைபெறும் என்றும் தெரிவித்திருந்தார். அதன்படி பூத் கமிட்டி மாநாட்டிற்கு கோவை தேர்வு செய்யப்பட்டது. கோவையில் நடக்கும் இந்த நிகழ்ச்சிக்காக பல நாட்களாக ஏற்பாடுகளும் தீவிரமாக செய்யப்பட்டு வந்தது. இதற்கிடையே அக்கட்சி பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இந்த மாநாட்டில் தவெக தலைவர் விஜய் கலந்து கொள்வார் எனவும் கூறி இருந்தார். இந்தக் கருத்தரங்கில், நம் வெற்றித் தலைவர் அவர்கள் கலந்துகொண்டு. தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கான செயல்பாடுகள் குறித்தும், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களப்பணிகள் குறித்தும், அது தொடர்பாகக் கழகம் சார்ந்து நாம் மேற்கொள்ள வேண்டிய கடமைகள் குறித்தும் விளக்கவுரை ஆற்ற உள்ளார் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்திருந்தார்.
தமிழக வெற்றிக் கழகத்தை பொறுத்தவரை, 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பூத் கமிட்டி கருத்தரங்கம் இன்றும், நாளையும் நடத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி, கோவையில் உள்ள குரும்பாளையம் பகுதியில் அமைந்துள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பூத் கமிட்டி கருத்தரங்கு இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது. இதன் முதற்கட்டமாக சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர், கரூர், மாவட்ட பூத்கமிட்டி முகவர்கள் பங்கேற்கின்றனர். இங்கு விஜயை வரவேற்க வழி நெடுகிலும் விஜயின் புகைப்படம் பொறிக்கப்பட்ட வரவேற்பு பதாகைகள் வைக்கப்பட்டிருந்தது. மேலும் மிக பிரம்மாண்ட அரங்கங்கள் அமைக்கப்பட்டு, 8000 பேர் அமரும் வகையில் இருக்கைகளும் போடப்பட்டுள்ளன.
இந்த நிலையில், கோவை வந்த விஜய்க்கு கட்சி தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் பிரம்மாண்ட வரவேற்பு அளித்துள்ளனர். விஜய்யின் வருகைக்காக இன்று காலை 8 மணி முதல் தொண்டர்கள் கோவை விமான நிலையத்தில் குவிந்திருந்தனர். ஆண்கள் மட்டுமின்றி பெண்கள் மற்றும் குழந்தைகளும் விமான நிலையத்தில் காத்திருந்தனர். கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்டமாக ஆரவாரத்துடன் வரவேற்பு அளித்தனர். அதுமட்டும் இன்றி விஜய் பங்கேற்ற ரோடு சோவிலும் தொண்டகள் பங்கேற்று விஜய்க்கு மேளதாளங்களுடன் கும்ப மரியாதையும் செய்து வரவேற்பு அளித்தனர்.