I am Coming.. திரும்பி போற ஐடியாவே இல்ல.. விஜய்யின் ஜனநாயகன் பட டிரைலர் எப்படி இருக்கு?
சென்னை : விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகி, சமூக வலைதளங்களில் பெரும் எதிர்பார்ப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இது அவரது ரசிகர்களிடமும், தொண்டர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு விஜய் ஒரு முழுமையான அரசியல் பாணி படத்தில் நடித்திருப்பது பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி உள்ளது. அதை விட முக்கியமாக படத்தில் வசனம் பயங்கரமாக இருக்கும் என்பதையும் இந்த டிரெய்லர் உணர்த்துவதாக உள்ளது.
இது அவரது கடைசி படம் என சொல்லப்படுவதால் அந்த எதிர்பார்ப்பு பல மடங்காக அதிகரித்து உள்ளது. ஜனநாயகன் பட டிரைலர் எப்படி இருக்கு என விரிவாக அலசலாம்.
அரசியலும் ஆக்ஷனும் கலந்த அதிரடி :
டிரைலரின் ஆரம்பமே மிகவும் கம்பீரமாகத் தொடங்குகிறது. "தளபதி வெற்றி கொண்டான்" என்ற பெயருடன் விஜய் அடையாளப்படுத்தப்படுகிறார். "அவரை தொட்டவர்கள் பீஸ் பீஸ் ஆகிடுவாங்க...சம்பவம் பண்ணுறவன பார்த்திருப்போம்; ஆனால் சம்பவம் பண்ணுறதுல ரெக்கார்டு படைக்கிறவனை பார்த்திருக்க மாட்டோம்" என விஜய் பற்றி கூறு டயலாக்குகள் மாஸ் காட்டுகின்றன.
ஒரு சாதாரண மனிதன் எப்படி சிஸ்டத்திற்கு எதிராகக் குரல் கொடுக்கிறான் என்பதும், அது எப்படி ஒரு மக்கள் இயக்கமாக மாறுகிறது என்பதுமே படத்தின் மையக்கருவாகத் தெரிகிறது. வழக்கமான விஜய் படங்களில் இருக்கும் மசாலா அம்சங்கள் இருந்தாலும், இந்தப் படத்தில் அரசியல் வசனங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது தெரிகிறது.
விஜய்யின் தோற்றம் :
டிரைலரில் விஜய்யின் தோற்றம் இளமை மற்றும் வயதானவர் என இரு வேறு கெட்டப்களில் காட்டப்படுகிறது. குறிப்பாக மகளை ராணுவ தளபதி ஆக்க வேண்டும் என்ற லட்சியத்தில் இருக்கும் ஒரு அப்பாவாக அவர் காட்டப்படுவதும், அதிரடி ஆக்ஷன்களில் கலக்குவதும் அவரது ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. அனிருத்தின் பின்னணி இசை டிரைலருக்குப் பெரும் பலத்தைச் சேர்த்துள்ளது.
ஒவ்வொரு காட்சியிலும் உள்ள எனர்ஜியை அந்த இசை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறது. கூட்ட நெரிசல் மிக்க போராட்டக் காட்சிகள் மற்றும் விஜய்யின் குளோஸ்-அப் காட்சிகளில் ஒளிப்பதிவு மிகவும் நேர்த்தியாக உள்ளது. நிற அமைப்பு (Color Palette) படத்திற்கு ஒரு தீவிரமான தன்மையைக் கொடுக்கிறது.
வசனங்கள் :
"ஓட்டு போடுறவன் தான் உண்மையான எஜமான்", "மக்களுக்கு நல்லது பண்ண அரசியல் பண்ணுகடான்னு சொன்னா கொள்ளை அடிக்கவும் கொலை பண்ணவும் அரசியல் பண்ணுறீங்க", "என்னை அசிங்கப்படுத்தணும் ஒதுங்கி போக வைக்கணும் நினைச்சா...திரும்பி போற ஐடியாவே இல்ல" என்பது போன்ற வசனங்கள் தியேட்டரில் விசில் சத்தத்தைப் பறக்கவிடும் என்பதில் சந்தேகமில்லை.
இது வெறும் சினிமா வசனமாக மட்டும் இல்லாமல் விஜய்யின் நிஜ அரசியல் பஞ்ச் டயலாக்குகளாகவே மக்களாலும், ரசிகர்களாலும் கொண்டாடப்படும் என்பது உறுதியாகி உள்ளது.
எதிர்பார்ப்புகளும் தாக்கமும் :
டிரைலரைப் பார்க்கும் போது, இது வெறும் பொழுதுபோக்குத் திரைப்படம் மட்டுமல்லாமல், சமூகத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த விரும்பும் படமாகத் தெரிகிறது. அதிகார வர்க்கத்திற்கும் சாதாரண மக்களுக்கும் இடையிலான போராட்டத்தை இயக்குநர் மிகவும் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார்.
ஒரு சில இடங்களில் முந்தைய அரசியல் படங்களின் சாயல் தெரிந்தாலும், விஜய்யின் மாஸ் அந்தச் சிறு குறையை மறைத்து விடுகிறது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், 'ஜனநாயகன்' டிரைலர் ஒரு பக்காவான கமர்ஷியல் மற்றும் அரசியல் பேக்கேஜ். இது விஜய்யின் சினிமா பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் மீதான எதிர்பார்ப்பை இந்த டிரைலர் பல மடங்கு அதிகரித்துள்ளது.
வழக்கமாக விஜய் ஐ அம் வெயிட்டிங் என்று சொல்வார்.. இந்தப் படத்தில் ஐ அம் கமிங் என்று கூறியுள்ளார்.. அரசியலுக்கும், தமிழ்நாட்டு மக்கள் களத்திற்கும் தான் வருவதைத்தான் இப்படி படத்தில் வசனமாகவே வைத்து விட்டார்கள் போல.
டிரெய்லர் ஸ்கோர் செய்து விட்டது.. முழுப் படம் வந்த பிறகுதான் விஜய்யின் கடைசிப் படம் எப்படி இருக்கும் என்பதை முடிவு செய்ய முடியும். பார்ப்போம்.