திருச்சியில் எம்ஜிஆர்.. நாகையில் அண்ணா.. திராவிட சென்டிமென்டை கையில் எடுக்கும் விஜய்!
நாகப்பட்டனம் எம்ஜிஆர், அறிஞர் அண்ணா ஆகிய திராட தலைவர்களை முன்னிலைப்படுத்தி தான் மதுரை மாநாட்டிலேயே தவெக தலைவர் விஜய் பேசினார். இதை அதிமுக, திமுக போன்ற கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. ஆனால் இப்போது அந்தத் தலைவர்களின் சிலைகளையே தனது கூட்ட இடமாக மாற்றி வருகிறார் விஜய்.
விஜய் தொடர்ந்து தனது பேச்சுக்களில் எம்ஜிஆர், அண்ணாவின் பெயரை பயன்படுத்தி பேசி வருகிறார். திருச்சியில் விஜய் பேசுவதற்காக தேர்வு செய்த இடமே மரக்கடை மார்கெட், எம்ஜிஆர் சிலை முன்பு உள்ள பகுதி தான். சரி அது எதேச்சையாக அமைந்தது. போலீசார் தேர்வு செய்து அனுமதி அளித்த இடம் தானே என அனைவரும் நினைத்தார்கள்.
திருச்சியில் எம்ஜிஆர் சிலை முன்பு தனது பிரச்சார பயணத்தை, பேச்சுக்களை துவக்கிய விஜய், தனது இரண்டாவது கட்ட பிரச்சார பயணத்தில் பேச துவங்கியதும் நாகப்பட்டனம் புத்தூர் ரவுண்டானா பகுதியில் உள்ள அறிஞர் அண்ணா சிலை முன்பு தான்.
இப்படி எம்ஜிஆர், அண்ணா என திராவிட கட்சி தலைவர்களின் சிலைகள் முன்பு தான் பேச வேண்டும் என விஜய் திட்டமிடுகிறாரா? அல்லது போலீசார் இப்படிப்பட்ட இடங்களை தேர்வு செய்து விஜய்க்கு கொடுக்கிறார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த திராவிட சென்டிமென்ட்டை விஜய் கையில் எடுத்துள்ளது, அண்ணாவின் பெயரை வைத்து கட்சி நடத்தும் அதிமுக, திமுக கட்சிகளுக்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது.
அதை விட முக்கியமாக இன்று ஒரு சம்பவம் நடந்தது. அதாவது அடுக்குமொழிப் பேச்சுக்கு மிகவும் திறமையானவர், பிரபலமானவர் அண்ணாதான். அவரைப் பின்பற்றித்தான் பலரும் அடுக்கு மொழியில் பேசிப் பிரபலமானார்கள். ஆனால் இன்றைய தனது நாகைப் பேச்சில் அடுக்கு மொழி பேசியே ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். கேட்டுக் கேட்டு காதிலிருந்து ரத்தம்தான் வருகிறது என்று விஜய் கேலியாக பேசியது முரண்பாடாக அமைந்தது.