மீண்டும் மீண்டும் தள்ளிப் போகும் தெறி ரீ ரிலீஸ்...காரணம் இது தானா?

Su.tha Arivalagan
Jan 19, 2026,10:00 AM IST

சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய்யின் ஜனநாயகன் படம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்டது.  ஆனால் சென்சார் பிரச்சனை காரணமாக ஜனநாயகன் படம் இதுவரை ரிலீசாகவில்லை. இதனால் பொங்கல் பண்டிகைக்கு விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்த அவரின் சூப்பர் ஹிட் படமான தெறி படத்தை ரீ ரிலீஸ் செய்ய அப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு முடிவு செய்தார்.


ஆனால் தெறி படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டால் பொங்கலுக்கு வரும் பராசக்தி உள்ளிட்ட மற்ற படங்களின் வசூல் பாதிக்கப்படலாம் என தியேட்டர் உரிமையாளர்களும், தயாரிப்பாளர்கள் சிலரும் கோரிக்கை வைத்ததால் தெறி படத்தின் ரீ ரிலீசை ஜனவரி 23ம் தேதி, அதாவது பொங்கல் விடுமுறைக்கு பிறகு தள்ளி வைப்பதாக தாணு அறிவித்தார். இதனால் ஜனவரி 23ம் தேதியன்று தெறி ரீ ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் ஆவலாக காத்திருந்தனர்.




இந்நிலையில் கலைப்புலி தாணு தனது எக்ஸ் தள பதிவில், புதிய இயக்குனர்கள், நல்ல படைப்புகள் மற்றும் வளரும் தயாரிப்பாளர்களை ஊக்குவிப்பதே வி கிரியேசன்ஸ் நிறுவனத்தின் தலையாய பொறுப்பு. அந்த நோக்கத்தை முன்னிட்டு தெறி திரைப்படத்தின் வெளியீட்டின் முடிவு நாளை (ஜனவரி 19 இன்று) அறிவிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். 


டைரக்டர் மோகன் ஜி, தெறி படத்தை ரீ ரிலீசை தள்ளி வைக்க வேண்டும் என எக்ஸ் தள பக்கத்தில் கலைப்புலி தாணுவிற்கு கோரிக்கை வைத்திருந்தார். இதை ஏற்று தான் தெறி ரீ ரிலீசை மீண்டும் தள்ளி வைக்க கலைப்புலி தாணு முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. புதிய தேதியை அவர் இன்று அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.