தவெக உறுப்பினர் சேர்க்கை செயலியை நாளை வெளியிடுகிறார் விஜய்
சென்னை: பனையூரில் நாளை தவெக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தவெக உறுப்பினர் சேர்க்கை செயலியை அக்கட்சி தலைவர் விஜய் வெளியிடுகிறார்.
தமிழ்நாட்டில் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தான் கடந்த ஆண்டும் கட்சி ஆரம்பித்த விஜய் முதல்முறையாக போட்டி போட உள்ளார். இந்த தேர்தலை நோக்கி கட்சியின் அனைத்து பணிகளையும் கட்சியின் தலைவர் விறுவிறுப்பாக செய்து வருகிறார். அத்துடன், கூட்டணி என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்றும், தனித்தே போட்டியிட உள்ளதாகவும் தவெக தலைவர் தெரிவித்துள்ளார்.
தவெக கட்சியின் முதல் மாநில மாநாட்டை விக்கிரவாண்டி வி சாலையில் பிரம்மாண்டமாக நடத்தினார் விஜய். இந்த மாநாடு அரசியல் கட்சியிடையே பேசு பொருளாகவும் மாறியது. இதனையடுத்து தவெக கட்சியின் 2வது மாநாட்டை விஜய் மதுரையில் நடத்த திட்டமிட்டுள்ளார். இந்த மாநாடு ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கான பணிகளையும் அக்கட்சி தலைவர் விஜய் தற்போது முடுக்கிவிட்டுள்ளார்.
இந்தநிலையில் தமிழகவெற்றிக்கழகத்தின் இணைய உறுப்பினர் சேர்க்கைக்காக புதிய செயலியை தலைவர் விஜய் நாளை அறிமுகம் செய்ய உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் இருந்தே கூறப்பட்டு வருகிறது. இதனையடுத்து நாளை பனையூரில் உள்ள தவெக கட்சி தலைமை அலுவலகத்தில் தவெக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் செயலியை விஜய் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.