"ஜெயா, நீ இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ".. மறக்க முடியுமா? (2)
- விஜயா
9 வயது ஆன ஜெயா... என்ன செய்ய முடியும்? வருமானம் இல்லை, அப்பாவின் அன்பு, பாசம் இல்லை; வயதான தாத்தா, பாட்டி, தம்பி, தங்கை, அம்மா... நாங்கள் பெரியப்பாவிடம் உதவிக்குப்போனோம். எங்களைச் சேர்த்துக்கொள்ளவே இல்லை, விரட்டிவிட்டார்.
அதற்கு ஒரு காரணமும் உண்டு: ஊரில் கொஞ்சம் நிலம் இருந்தது, அதில் பங்கு கேட்க வந்துவிடுவோமோ என்ற பயம். அதனால்... எங்கள் அம்மாவுக்குப் படிப்பில்லை, நான் மட்டும்தான் 6-ஆம் வகுப்பு படிக்கிறேன்.
இப்படியாக ஒரு வருடம் போய்விட்டது. தாத்தாவும் பாட்டியும் தென்னையோலை பின்னி விற்க ஆரம்பித்தார்கள். நானும் அவர்களோடு பின்ன ஆரம்பித்தேன், அதில் கொஞ்சம் வருமானம் வந்தது. இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன, எனக்கு 11 வயது ஆனது. என் அம்மாவுக்கு, அப்பா வேலை செய்த கம்பெனியில் ஒருவர் இரக்கப்பட்டு (எங்களை நினைத்து) வேலை தர ஒப்புக்கொண்டார்கள்.
அம்மாவுக்குப் படிப்பில்லாத காரணத்தால்... கேண்டீனில் அரிசி புடைக்கிற வேலை கிடைத்தது. அங்குள்ள மீதமான சாப்பாடு, பல வகை ஃபேன்சி திண்பண்டங்களை எடுத்து வருவார்கள். இப்படியாக ஒரு அளவுக்கு நாங்கள் நிம்மதியாக இருந்தோம். இந்த நிலையில், தாத்தா திடீரென்று காலமாகிவிட்டார். அதே கவலையில் பாட்டியும் இறந்துவிட்டார்கள். அதற்கு கொஞ்சம் பணம் செலவானது, கடனாகிவிட்டது. எனக்கு 12 வயது ஆகிவிட்டது. என் அத்தைமார்கள் எங்கள் வீட்டில் "எங்களுக்கும் உரிமை உள்ளது" என்று சண்டை போட ஆரம்பித்துவிட்டார்கள்.
அம்மாவுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. எனக்கு 13 வயது ஆகிவிட்டது, நான் பெரிய மனுஷியாகி விட்டேன். "என்ன செய்வது?" என்று அம்மா அழுதார்கள். "உங்க அப்பா இருந்தால் நல்லபடியாகச் செய்திருப்பார், நான் என்ன செய்வது?" என்று அத்தைமார்களுக்குத் தெரியப்படுத்தி, ஒரு அளவுக்குச் சடங்கை முடித்தார்கள். ஜெயா ஆகிய நான் வளர்ந்து, பருவமங்கையாக உயர்ந்து நின்றேன். எங்க அம்மா... இப்படியாக இருக்கும் நேரத்தில்தான் ஒரு பூகம்பம் என் குடும்பத்தில்... நடந்தது. இதை நானும் என் குடும்பத்தில் யாரும் எதிர்பார்க்கவில்லை. சாமிக்கு எங்கள் மீது என்ன கோபம் என்று தெரியவில்லை. சின்ன கிராமம், மக்கள் ஒரு அளவுக்குத்தான் உதவி செய்வார்கள். குறைந்த வருமானத்திலும் அரை வயிறு சாப்பாடு சந்தோஷமாக (சாப்பிட்டோம்) என் அம்மா, நான், என் தம்பிகள்...
நான் அழகாக இருந்தேன். என் கண்கள் நீல நிறமாக இருக்கும், சிவந்த மேனி. முடி பிரவுன் (பழுப்பு) கலரில் இருக்கும். அந்த ஊரில் நான் மட்டும்தான் மிகவும் சிவப்பாக இருந்தேன். அங்குள்ள மக்கள் என்னைப் பார்த்து ஒரு வார்த்தை சொல்வார்கள்: "ஜெயா, நீ இல்லாத ஊருக்கு, இலுப்பைப் பூ மாஎன்று. (இலுப்பை பூ எப்படி இருக்கும் என்று தெரியாது, ஆனால் அப்படி ஒரு அழகான தோற்றத்தைச் சாமி எனக்குக் கொடுத்திருந்தார்).
அப்படி ஒரு அழகு. என்னை அந்த ஊர் மக்களும் ஆசையாகப் பார்ப்பார்கள். என்னைக் கிள்ளி முத்தமிடுவார்கள். என் தம்பிகள் இருவரும் கவர்ன்மென்ட் பள்ளியில் படிக்கிறார்கள். என் தங்கையும் பள்ளிக்குப் போகவில்லை. இப்படியாக இருந்த எங்களின் குடும்பத்தில் தலை தடுமாறியது. என் வாழ்க்கையில் இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. என் அப்பா செய்த நன்மைகள் பல. அந்த நன்மைகள் தான் எங்களை அந்த ஊர் மக்கள் பார்த்துக் கொண்டார்கள். ஆனால் சாமிதான் எங்களைக் கைவிட்டது. ஒரு நாள் எங்க அம்மா வேலைக்குச் சென்றார்கள்.
(தொடரும்)