திமுக-தேமுதிக கூட்டணி.. கேப்டனின் ஆன்மா மன்னிக்காது: தமிழக பாஜக எக்ஸ் தள பதிவு!

Meenakshi
Feb 19, 2026,05:07 PM IST

சென்னை: திமுகவுடன் கேப்டன் உருவாக்கிய தேமுதிக இணைந்ததை ஒருபோதும் கேப்டன் விஜயகாந்த் ஆன்மா மன்னிக்காது என்று தமிழக பாஜக விமர்சனம் செய்துள்ளது.


சட்டசபை தேர்தல்  நெருங்கி வரும் இந்த நேரத்தில் நேற்று வரை கூட்டணி குறித்து எந்த முடிவும் கூறாமல் இருந்து வந்தார் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த். செய்தியாளர்கள் சந்திப்பில் கூட கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடுவோம் என்று மட்டுமே தெரிவித்து வந்தார். இந்நிலையில், இன்று திடீர் என திமுக கூட்டணியில் தேமுதிகவை இணைத்து கொண்டார் பிரேமலதா விஜயகாந்த். இதுவே திமுகவுடன் தேமுதிக இணையும் முதல் கூட்டணியாகும். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




தேமுதிக கட்சி திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள முடிவை விமர்சித்து, தமிழக பாரதிய ஜனதா கட்சி இன்று அதிரடியான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், மறைந்த தலைவர் விஜயகாந்தின் கொள்கைகளுக்கு மாறாக தேமுதிக செயல்படுவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


இது குறித்து பாஜக வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், 'தன் வாழ்நாள் முழுவதும் தீய சக்தி திமுகவை எதிர்த்து மக்கள் பணியாற்றியவர் விஜயகாந்த். அதனால், விஜயகாந்த் அவர்களுக்கும், அவர் உருவாக்கிய தேமுதிக-விற்கும் கொடுமைகளையும், அவமானங்களையும் மட்டுமே வழங்கியது திமுக. அத்தகைய மக்கள் விரோத திமுகவுடன் இன்று கேப்டன் உருவாக்கிய இயக்கம் இணைந்ததை, ஒருபோதும் கேப்டனின் ஆன்மா மன்னிக்காது' என்ற பதிவை வெளியிட்டுள்ளது.


திமுக மற்றும் தேமுதிக இடையிலான இந்தக் கூட்டணி, தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாஜகவின் இந்த விமர்சனம் அரசியல் வட்டாரத்தில் மேலும் சூட்டைக் கிளப்பியுள்ளது.