Short Story: கல்லான மனம்!

Su.tha Arivalagan
Jul 04, 2026,10:56 AM IST

- விஜயலக்ஷ்மி கண்ணன் 


" அம்மா !அம்மா!" என்று அலறி அடித்துக் கொண்டு வந்து கொண்டு இருந்த சேகரை முன் கதவைத் தாண்டி உள்ளே வர அனுமதிக்கவில்லை அவன் தந்தை வேலாயுதம்.


வேலாயுதம், வேலம்மாள் தம்பதிகளுக்குப் பிறந்த ஒரே மகன் சேகர்.பள்ளிப்படிப்பு காலத்திலிருந்து சேகர் கட்சி கூட்டங்களில் பங்கேற்று, வீட்டுக்கு அடங்காத பிள்ளையாக வளர்ந்தான்.


எத்தனையோ விதம் சொல்லியும் அவன் திருந்த வில்லை.வேலாயுதம் சிறந்த உயர் நிலைப் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இந்த மகனால் அவருக்கு தலைகுனிவு.


"வாத்தியார் வீட்டுப் பிள்ளை இப்படி விளங்காமல் போய் விட்டானே " என்று  ஆதங்கப் பட்டனர் ஊர் மக்கள்.


இப்பொழுது வேலம்மாள்  அதே புன் முறுவலுடன் கண்மூடி ,விரித்த பாய் மீது படுத்துக் கிடந்தாள்.உயிர் இல்லை அசை வதற்கு.




காலையில் எழுந்தது முதல் வேலம்மாள் உடல் ஒரு நிலையில் இருக்கவில்லை. மயங்கிக் கிடந்தாள்.


சேகரிடம் வெளிய  போக வேண்டாம், அம்மா உடல் நலமில்லை என்று சொல்லிய அப்பாவை அவன் எங்கே மதித்தான்?ஒரே மிதி, சைக்கிளில் கட்சிக் கொடியோடு பறந்தான் சேகர்.


பக்கத்து வீட்டு அஞ்சுகம் தான் கொஞ்சம் கஞ்சி குடிக்க வைத்தாள்.பிறகு அவள் நிரந்தரமாக உறங்கிவிட்டாள். பாவம்.வேலாயுதம் வேதனையில் திக்குமுக்காடினார். இந்த நேரத்தில் சேகரை கண்டவுடன் அவர் உள்மனதிலிருந்து பொங்கி எழுந்த ஆவேசம் வைராக்கியமாக மாறி சேகரை பெற்ற தாயின் அருகில் நெருங்க விடவில்லை.


"அவனை இங்கிருந்து போக சொல்லுங்கள்" என்று இரைந்தார் வேலாயுதம்.


"அப்பா, என்னை மன்னித்து விடுங்கள்.இப்படி ஆகும் என்று நான் நினைக்கவே இல்லையே. அம்மா,அம்மா," என்று கதறி  ,விக்கி அழுதான் சேகர்.


பெற்றவரின் மனம் இறுகி கல்லாகிவிட்டிருந்தது.


"என் மனைவியை நான் கரை ஏற்றிக் கொள்கிறேன். எங்களுக்கு இப்படி ஒரு மகன் இல்லை, வேண்டாம்."திடமாக இருந்தார்.


காரியங்கள் மள மள என்று நடக்க சேகர் தெருக்கோடியில் நின்று கொண்டு இருந்தவன் தாயின் இறுதி ஊர்வலத்தின் பின்னே நடந்தான்.


(விஜயலக்ஷ்மி கண்ணன் வழக்கறிஞர், கவிஞர், எழுத்தாளர்,பட்டிமன்றப் பேச்சாளர் என பன்முகம் கொண்டவர். வசிப்பது சென்னை அருகே கூடுவாஞ்சேரி)