விஜய் பிரசாரம்... ஈரோட்டில் தனியார் பள்ளிக்கு நாளை விடுமுறை
ஈரோடு: ஈரோட்டில் நாளை தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு நாளை ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கரூர் சம்பவத்திற்கு பின்னர் தவெக தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு கூட்டத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. நாளை ஈரோடு மாவட்டம், விஜயமங்கலம் சரளையில் உள்ள சுங்கச்சாவடி அருகே தவெக சார்பில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் விஜய் கலந்து கொண்டு பேச உள்ளார். விஜய் பொதுக்கூட்டம் நடத்த காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கூட்டம் நடக்கும் இடத்தில் ஆம்புலன்ஸ் வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பெண்கள் பாதுகாப்பாக அமர்ந்து கட்சித்தலைவர் விஜய் பேசுவதை அருகில் இருந்து காணும் வகையில் மைதானத்தில் பெண்களுக்கான தனி இடவசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விஜய் மக்கள் சந்திப்பு நாளை நடைபெறவுள்ள நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா ஆய்வு மேற்கொண்டார். பிரசாரம் நடைபெறும் இடத்தில் ஆம்புலன்ஸ் வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா என்பது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு நடத்தினார். மேலும் நாளை பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு அருகில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அரையாண்டு தேர்வு நடந்து வருவதால், நாளை நடக்க இருந்த தேர்வு 26ம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளையும் மாலை 4 மணி வரை மூட மாவட்ட டாஸ்மாக் மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.