செங்கிப்பட்டியில் மார்ச் 4ம் தேதி தவெக பரப்புரை: அனுமதி கோரி மனு

Meenakshi
Feb 28, 2026,01:13 PM IST

சென்னை: தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் பரப்புரை நடத்த அனுமதி கோரி தவெக சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வரும் 1ஆம் தேதி (01.03.2026) ஞாயிற்றுக்கிழமையன்று காலை 10.00 மணி முதல், 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் கழகச் செயல் வீரர்கள் கூட்டம் முழுநாள் நிகழ்வாக நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், தேர்தல் பரப்புரைப் பணிகள், வாக்குச் சாவடி முகவர்களின் பணிகள் உள்ளிட்ட கழகத்தின் அடுத்த கட்டச் செயல்பாடுகளை முன்னெடுப்பது குறித்து, கழகத் தலைவர் அவர்கள் ஏற்கெனவே அறிவித்தது போல, கலந்தாலோசிக்கப்பட உள்ளது. 


தேர்தல் கண்காணிப்பாளர்கள், இணைக் கண்காணிப்பாளர்களுடன் இணைந்து மாவட்டக் கழக நிர்வாகிகள் பங்கேற்பில், அந்தந்த மாவட்டங்களைச் சார்ந்த தொகுதிகளில் இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது. மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஏற்பாட்டில் நடைபெற உள்ள இக்கூட்டங்களில் அந்தந்தச் சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த பல்வேறு அணியினர் உள்ளிட்ட கழகத்தின் அனைத்து நிர்வாகிகள் மற்றும் கழகச் செயல்வீரர்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்று நேற்று தவெக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. 




இந்நிலையில், திருச்சியில் நடைபெற்ற பிரம்மாண்ட மாநாட்டைத் தொடர்ந்து, தஞ்சை மாவட்டத்தின் எல்லைப்பகுதியான செங்கிப்பட்டியில் இந்த கூட்டம் நடைபெறுவது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெறுகிறது. டெல்டா மாவட்டங்களில் கட்சியின் செல்வாக்கை நிரூபிக்க இந்த பரப்புரை திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) உட்கட்டமைப்பு மற்றும் உறுப்பினர் சேர்க்கை பணிகள் தீவிரமடைந்து வரும் நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய் தமிழகம் தழுவிய அளவில் முக்கிய நகரங்களில் பரப்புரை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். 


தஞ்சாவூர் காவல்துறையினரின் அனுமதி கிடைத்தவுடன், மேடை அமைக்கும் பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.