விழுப்புரம் ஸ்டைல்.. பசலை கீரை பொரியல்.. செம டேஸ்ட்டிங்க.. சாப்பிட்டுப் பாருங்க!
க. யாஸ்மின் சிராஜூதீன்
என் அன்பான சகோதர சகோதரிகளுக்கு வணக்கம். நாம் எத்தனையோ வகையான கீரைகளை சமைத்து சாப்பிடுகிறோம். அதன் நன்மைகளை அறிந்து வைத்துள்ளோம். ஆனால், இன்று நாம் பார்க்க இருப்பது பசலை கீரை இதை சக்கரைக் கீரை எனவும் அழைப்பர். ஏனெனில் இது சக்கரை நோயை குறைக்கும் வல்லமை கொண்டது. இதை வாரம் இருமுறை சாப்பிடலாம்.
பசலை கீரை பொரியல் செய்வது மிகவும் எளிது மற்றும் ஆரோக்கியமானது. விழுப்புரத்தில் செய்வது போல வித்தியாசமா செய்யலாம்.. வாங்க எப்படி செய்வது என பார்ப்போம்:
தேவையான பொருட்கள்:
பசலை கீரை – 2 கட்டு
வெங்காயம் – 1 (நறுக்கியது)
பூண்டு – 4 பற்கள் (நறுக்கியது)
பச்சை மிளகாய் – 2 (நீளமாக வெட்டியது)
கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1/2 டீஸ்பூன் (விருப்பம்)
உப்பு – தேவைக்கு
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
1. முதலில் நல்லா சுத்தம் செஞ்சுக்கணும். பசலை கீரையை நன்றாக கழுவி நறுக்கிக் கொள்ளவும்.
2. பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்து தாளிக்கவும்.
3. அதன் பிறகு அதில் வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
4. இப்போது நறுக்கிய கீரையை சேர்த்து கிளறவும். அது தண்ணீர் விடும், கவலைப்பட வேண்டாம்.
5. தேவையான அளவுக்கு, உப்பு மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்.
6. மூடி வைத்து 5–7 நிமிடம் வேகவிடவும்.
7. எல்லாம் முடிந்த பிறகு, கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கவும்.
சூப்பரான சுவையான பசலைக் கீரைப் பொறியல் சாப்பிடத் தயார்!
சூடான சாதத்துடன் பசலை கீரை பொறியல் ரொம்ப சுவையாக இருக்கும் . இந்த கீரைக்கு தண்ணீர்சேர்க்க வேண்டாம், அதுவே தண்ணீர் விடும். அந்த நீரே போதுமானது.
இன்று சமைத்தேன் ருசித்தேன் . நன்றாக இருந்தது. நீங்களும் சமைச்சுச் சாப்பிட்டுப் பாருங்க.. ருசியில் சொக்கிப் போய்ருவீங்க!
பசலை கீரை (Spinach) மிகவும் சத்தான கீரை. இதை சாப்பிட்டால் என்னெல்லாம் நன்மை இருக்கு தெரியுமா..
1. இரத்தச்சோகை குறையும் - பசலை கீரையில் இரும்புச்சத்து (Iron) அதிகம் உள்ளது. இது ஹீமோகுளோபின் அளவை உயர்த்தி, அனீமியா (Anemia) குறைக்க உதவும்.
2. கண் ஆரோக்கியம் - Vitamin A மற்றும் Lutein உள்ளது. இது கண் பார்வையை பாதுகாக்கும்.
3. எலும்பு பலம் - Calcium மற்றும் Vitamin K உள்ளது. இது எலும்புகளை வலுப்படுத்தும்.
4. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் - Vitamin C, antioxidants அதிகம். உடல் எதிர்ப்பு சக்தி மேம்படும்.
5. செரிமானத்திற்கு ரொம்ப நல்லது. நார்ச்சத்து அதிகம். மலச்சிக்கல் பிரச்சினை குறையும்.
6. குறைந்த கலோரி, அதிக சத்து இருப்பதால் உடல் எடையைக் குறைக்க விரும்புவோருக்கு இது பெரும் துணை.
7. சரும வளர்ச்சிக்கும், தலைமுடி நல்லா கருகருன்னு இருக்கவும் கூட இது உதவுகிறதம்.
பிறகு முக்கியான விஷயம்.. இதை அதிகமாக சாப்பிடக் கூடாது. குறிப்பாக சிறுநீரகத்தில் கல் இருப்போர் சாப்பிடுவதத் தவிர்க்க வேண்டும். எந்த சாப்பாடுமே அளவோடு தான் இருக்க வேண்டும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு இல்லையா!
அதேபோல இந்தக் கீரையை நன்றாக கழுவி சமைத்து சாப்பிட வேண்டும். அதையும் மறந்துடாதீங்க.
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)