பொய்யான மெய்யவள்

Su.tha Arivalagan
Nov 28, 2026,11:02 AM IST

- "சொல்லம்புச் சிற்பி" விமலா கோவிந்த ராஜு


ஆண் மகவென

அன்னையோ

தந்தையோ

தாங்கித் தாங்கி

ஈன்றெடுக்கையில்

பிறந்திட்ட அவள் - 

பொய்.....


ஆசை தீர 

ஆடை கட்டிட

எண்ணுகையில்

அடக்குமுறை 

ஆடையிலே

அவள் பொய்....




பேச நினைப்பதற்கெல்லாம்

பெண்ணென்று

பெருந் தடை

விழுகையிலே

பேசா மடந்தையவள்

பொய்....


கற்கை நன்றென

கற்கப்போக

கல்வியும் பிறர் 

கட்டுப்பாட்டிற்குள்

வந்துவிட

கல்வி தொலைத்த

காதலவள்

பொய்.....


பள்ளிப் பை சுமந்தவளை

அள்ளியெடுத்துக்

கொஞ்ச 

மாற்றான்

கை சேர்க்க

அவளுடலும்

அவளுக்குப் 

பொய்.....


கனவுக் கோப்பைகள்

நிரம்ப

கரம் பட்டும்

சில நேரம் 

சினம் பட்டும்

சிதற - அவள் 

கற்பனைகளும்

பொய்யே..


எழுதி முடித்த

இறுதிச் சொல்லுக்குப்

பின் வரும் 

முற்றுப்புள்ளி தொட்டு 

முத்தமிட்டுக்

கொண்டிருக்கும்

அவள் முழுப்பெயர்

மட்டுமே

மெய்.....


(எழுத்தாளர் விமலா கோவிந்தராஜு, மேட்டூர் அணை. மேட்டாங்காடு என்ற பெயரில் கவிதை நூல் வெளியிட்டுள்ளார். காவிரிப் பிள்ளைகள் அறக்கட்டளை என்றொரு அறக்கட்டளையை நிறுவி இதுவரை 25000 மரக்கன்றுகள் நடவு செய்துள்ளார். கவிஞர், எழுத்தாளர், புரட்சிகர சிந்தனையாளர், பட்டிமன்றப் பேச்சாளர் என பன்முகம் கொண்ட படைப்பாளர்)