Heart Breaking News: விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து திடீர் ஓய்வு!
மும்பை: இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி திடீரென ஓய்வை அறிவித்துள்ளார். இது பெரும் ஆச்சரியத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இது கடினமான முடிவுதான், ஆனால் சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்று விராட் கோலி கூறியுள்ளார்.
ஜூன் 20-ம் தேதி இங்கிலாந்தில் தொடங்கும் ஐந்து போட்டிகள் கொண்ட தொடருக்கு முன்னதாக அவர் இந்த முடிவை எடுக்க விரும்பி எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. விராட் கோலியின் இந்த முடிவு குறித்து கடந்த சில நாட்களாக கிசுகிசுப்பு இருந்து வந்தது. பலரும் கோலியை சமாதானப்படுத்தி தொடர்ந்து ஆட வைக்க முயற்சித்து வந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் தற்போது தனது முடிவை அறிவித்து விட்டார் கோலி.
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்து வந்த ரோகித் சர்மா ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், கோலியும் ஓய்வு பெற்றுள்ளது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சிச் செய்தியாக வந்துள்ளது.
கோலி இதுவரை 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 9230 ரன்கள் எடுத்துள்ளார். அவரது சராசரி 46.85 ஆகும். சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், சுனில் கவாஸ்கர் ஆகியோருக்கு அடுத்து அதிக டெஸ்ட் ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற பெருமையை அவர் வைத்துள்ளார்.
விராட் கோலி 2011-ல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் 10,000 ரன்களுக்கு மேல் எடுத்த ஏழு வீரர்களில் கோலியும் ஒருவர் ஆவார்.
விராட் கோலி ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரில் சரியாக விளையாடவில்லை. ஒன்பது இன்னிங்ஸ்களில் 190 ரன்கள் மட்டுமே எடுத்தார். பெர்த்தில் அவர் அடித்த சதம் மட்டுமே குறிப்பிடத்தக்கது. இது சலசலப்பை ஏற்படுத்தியது.
முன்னதாக, 2013-ல் ஆஜ் தக் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் விராட் கோலி சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறும்போது, நான் ரெக்கார்டுகளை பற்றி கவலைப்படுவதில்லை. நான் ஒரு போட்டியில் சதம் அடித்தால், அது எத்தனையாவது சதம் என்று போட்டி முடிந்த பிறகுதான் தெரிந்து கொள்வேன். போட்டிக்கு முன்பு, நான் இத்தனை இன்னிங்ஸ்களில் இவ்வளவு சதங்கள் அடித்தால் ரெக்கார்ட் படைக்கலாம் என்று நினைப்பதில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்கள் அடிக்க வேண்டும் என்பதே என் ஆசை" என்று கூறியிருந்தார்.
விராட் கோலிக்கு பெரும் ரசிகர் கூட்டம் உண்டு. அவரது அதிரடியான ஆட்டமும், ரன் குவிப்பும் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக இருந்து வந்தது. தற்போது அந்த விருந்து முடிவுக்கு வந்துள்ளது. ஏற்கனவே டி20 போட்டிகளிலிருந்தும் விராட் கோலி ஓய்வு பெற்று விட்டார். ஒரு நாள் போட்டிகளில் மட்டும் இனி விராட் கோலி விளையாடுவார். ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவார்.
விராட் கோலி இந்திய அணியின் மிக முக்கியமான வீரர்களில் ஒருவர். அவர் தனது திறமையால் பல வெற்றிகளை பெற்று தந்துள்ளார். அவரது ஓய்வு இந்திய அணிக்கு அது பெரிய இழப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.