பேனாவால் பிரச்சனை தீர்ந்தது.. விஷாலின் விளையாட்டுக்கள் (17)

Su.tha Arivalagan
May 12, 2026,04:04 PM IST

- பா. பானுமதி


பள்ளியில் பாடம் படிப்பதற்காக சில நேரம் பாம்புகள் கூட வருவது உண்டு. படம் எடுக்கும் பாம்பை தான் மற்றவர்கள் பார்த்திருப்பார்கள். பாடம் கேட்க வரும் பாம்புகளை கிராமத்து ஆசிரியர்கள் மட்டுமே பார்த்திருப்பார்கள். 


அன்றொரு நாள் என்னுடைய வகுப்பறையில் நான் மாணவர்களுடன் கீழே அமர்ந்து அவர்களுடன் பேசிக் கொண்டும் அவர்களுடைய நோட்டுப் புத்தகங்களை பார்த்துக் கொண்டும் இருந்தேன் .


என் வகுப்பறையை ஒட்டிய சமையல் கூடம் இருக்கும். அந்த சமையலறையை ஒட்டி ஒரு பாம்பு ஒன்று வகுப்பறையில் நுழைந்து இருக்கிறது. சமையல்கார பெண் அதை பார்த்துவிட்டு கத்திருக்கிறார். எனக்கு ஒன்றும் கேட்கவில்லை. நான் ஒரு மாணவன் நோட்டு ஒன்றை பார்த்துக் கொண்டிருந்தேன்.




பாம்பானது தாவித்தாவி எகிறி குதித்து என் பக்கத்து பையின் மேல் வந்துவிட்டது. நிமிர்ந்து பார்த்தால் பாம்பு .வகுப்பறையில் இருந்த 50 மாணவர்களும் அரை வினாடியில் காலியாகி விட்டார்கள். பாம்பை பக்கத்தில் பார்த்தவுடன் எனக்கு வாயிலிருந்து பயத்தில் ஒரு வார்த்தையும் வரவில்லை. அரை அடி தூரம் கூட இருக்காது. அவ்வளவு நெருக்கத்தில் சமையல்கார பெண், பின் வாசலில் இருந்து என்னை அழைக்க நான் அசையவே இல்லை.


அப்போது விஷால் என்னுடைய நாற்காலியில் அமர்ந்திருந்தான். உடனே அந்தப் பெண் விஷாலை அழைக்க, சமயத்தில் நான் கீழே அமர்ந்திருக்கும் போது விஷாலை அழைத்தால் மேசை மேல இருக்கும் சிவப்பு பேனாவை எடுத்து கொடுத்து விடுவான். அதுபோல அவனும் நினைத்து சிவப்பு பேனாவை எடுத்து வீச, அது சரியாக அந்த பாம்பு இருக்கும் பையின் மீது பட, பாம்பு பயந்து சற்று தள்ளி போக, சமையற்காரபெண் உடனே ஓடி வந்து என்னையும் விஷாலையும் கைப்பிடித்து அழைத்து வெளியில் சென்று விட்டார். 


பேனாவினால் அந்த பிரச்சனை தீர்ந்தது. விஷால் தன்னை அறியாமல் செய்த ஒரு செயல் பாம்பிடமிருந்து என்னை காப்பாற்றியது.


விஷாலின் விளையாட்டு தொடரும்


(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)