பிறவா வரம் அளிக்கும் பேரூர் பட்டீஸ்வரர்.. இன்றும் நடக்கும் 5 அதிசயங்கள்!

Su.tha Arivalagan
Dec 24, 2025,02:56 PM IST

- J லீலாவதி


மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் பேரூர் பட்டீஸ்வரர் ஆலயம் மிகச் சிறப்பானது. ஐந்து அதிசயங்களை தன்னுள் தாங்கிய ஆயிரம் ஆண்டு ஆலயம் இது. கோயமுத்தூரில் இருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 


மேல சிதம்பரம் என்று அழைக்கப்படும் பேரூர் பட்டீஸ்வரர் ஆலயம். இங்கு நடராஜப் பெருமான் ஆனந்த தாண்டவம் ஆடிய போது அவர் காலில் அணிந்திருந்த சிலம்பு தெறித்து சிதம்பரத்தில் விழுந்ததாக செவி வழி செய்தியும் உண்டு.


இங்கு ஐந்து விஷயங்கள் இன்றும் தொடர்கிறது. அது என்னவென்றால்..


இறவாத பனை, புழுக்காத சாணம், எலும்பு கல்லாவது, வலது காது மேல் நோக்கி மரணிப்பது, மீண்டும் முளைக்காத புளியமரம்.. இதுதான் அந்த ஐந்து அதிசயங்கள்.

 

அதன் விளக்கங்கள்...




இளமையாகவே இருக்கும் பனைமரம் இன்றும் நின்று கொண்டிருக்கிறது. இந்த மரத்திற்கு இறப்பு எப்போதும் கிடையாது. இப் பேரூர் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆடு மாடு போன்ற கால்நடைகளில் சாணம் எத்தனை நாட்கள் ஆனாலும் அவற்றிலிருந்து புழுக்கள் உண்டாவது இல்லை. இந்த எல்லைக்குட்பட்ட இறந்த மனித உடலை எரித்து பிறகு மிச்சமாகும் எலும்புகளை இங்குள்ள நொய்யல் ஆற்றில் விடுவார்கள். விடப்படுகின்ற எலும்புகள் சிறிது காலத்திற்குள் கற்களாக உருமாறி கண்டெடுக்கப்படுகிறது.


பேரூரில் மரணம் அடையும் மனிதன் முதல் அனைத்து உயிரினங்களும் இறக்கும் தருவாயில் தனது வலது காதை மேல் நோக்கி வைத்தபடி மரணம் அடையும் அதிசயத்தை இன்றும் நடத்திக் கொண்டிருக்கிறார் பிறவா வரமளிக்கும் பட்டீஸ்வரர்( சிவன்).


இங்குள்ள புளிய மரத்தின் கொட்டைகள் மீண்டும் முளைப்பதில்லை. விதைகளை முளைக்க வைப்பதற்காக வெளிநாட்டில் இருந்து விஞ்ஞானிகள் பலரும் முயற்சி செய்தும் முடியவில்லை. இதுதான் ஈசனின் சிறப்பு.


பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு ஒருமுறை சென்று வாருங்கள். மீண்டும் மீண்டும் ஈசனை சந்திக்கும் ஆசை உங்களுக்குக் கூடிக் கொண்டே இருக்கும்.


(J.லீலாவதி, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)