ஜனநாயகக் கடமையாற்ற வேண்டிய நாள்.. உங்கள் வாக்கை தவறாமல் பதிவு செய்யுங்கள்!
- அ.சீ.லாவண்யா
சென்னை: தமிழ்நாடு சட்டசபைக்கு நாளை பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. மிகப் பெரிய ஜனநாயகத் திருவிழாவாக கருதப்படும் சட்டசபைத் தேர்தலில் வாக்களிக்க மக்கள் பெரும் ஆவலோடு காத்துள்ளனர்.
நாளை நடைபெற உள்ள தேர்தலை முன்னிட்டு, பொதுமக்கள் அனைவரும் தங்களின் வாக்குரிமையை தவறாமல் பயன்படுத்த வேண்டும் என தேர்தல் ஆணைய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
வாக்குச்சாவடிகளின் நேரம் மற்றும் இட விவரங்களை முன்கூட்டியே சரிபார்த்து, அடையாள அட்டையுடன் நேரத்திற்கு முன்பாக வருமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. வாக்களிக்கும் போது பணம், பரிசு அல்லது எந்தவொரு அழுத்தத்திற்கும் இடம் கொடுக்காமல், தங்களின் சுய சிந்தனை மற்றும் நாட்டின் நலனை கருத்தில் கொண்டு சரியான வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
மேலும், வாக்குச்சாவடிகளில் ஒழுங்கை பேணியும், அதிகாரிகளின் வழிகாட்டுதல்களை பின்பற்றியும் செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தகுதி பெற்ற ஒவ்வொரு குடிமகனும் ஆர்வத்துடனும் பொறுப்புடனும் வாக்களிக்க முன்வர வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
பலர் “Voter ID இல்லையெனில் வாக்களிக்க முடியுமா?” என்ற சந்தேகத்தில் இருப்பார்கள். ஆனால், வாக்காளர் அட்டை இல்லாவிட்டாலும் கவலைப்பட தேவையில்லை. தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ள பிற அடையாள ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
அவற்றில் ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், கடவுச்சீட்டு போன்றவை முக்கியமானவை. இதற்கு கூடுதலாக, மருத்துவ காப்பீட்டு, ஸ்மார்ட் கார்டு, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், அரசு ஊழியர் அடையாள அட்டை போன்ற ஆவணங்களும் செல்லுபடியாகும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆதார் அட்டையையும் கூட காட்டி வாக்களிக்கலாம்.
மேலும், மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற உறுப்பினர்களின் அடையாள அட்டை, தியாகிகள் அடையாள அட்டை, தேசிய மக்கள் அடையாள அட்டை, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஸ்மார்ட் கார்டு போன்ற பல்வேறு ஆவணங்களும் வாக்களிக்க பயன்படுத்தலாம்.
இதனால், எந்த காரணத்தாலும் வாக்களிப்பதை தவிர்க்காமல், உரிய அடையாள ஆவணங்களுடன் வாக்குச்சாவடிக்கு சென்று உங்கள் வாக்கை பதிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு வாக்கும் நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் முக்கியமான கருவி என்பதால், அனைவரும் தங்களின் கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும்.
இறுதியாக, வாக்களிப்பது ஒரு உரிமை மட்டுமல்ல, அது நம் நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் பொறுப்பும் ஆகும். நாம் அளிக்கும் ஒரு வாக்கு நல்லாட்சிக்கும் முன்னேற்றத்திற்கும் வழி வகுக்கும் சக்தி கொண்டது. ஆகையால், யாருடைய தாக்கத்திற்கும் இடமளிக்காமல், சிந்தித்து சரியான நபரைத் தேர்வு செய்வது அவசியம்.
“உங்கள் வாக்கு உங்கள் குரல்; சரியான நபரைத் தேர்வு செய்தால், உங்கள் எதிர்காலம் சரியான பாதையில் கொண்டு செல்லும்.”