கடுக்காய் ஜோதிடர்

Su.tha Arivalagan
Nov 27, 2026,02:57 PM IST

- ராஜஸ்ரீ


ஒரு சிறிய ஊர். அந்த ஊர் வழியே ஒரு பிராமணர் சென்று கொண்டிருந்தார். அவரது பெயர் சாமிநாதன்.


பின்னாடியிருந்து ஜோசியரே என்று யாரோ அழைக்கும் குரல் கேட்டது. சாமிநாதன் திரும்பிப் பார்த்தார். ஒருவன் ஜோசியர் ஐயா, கொஞ்சம் நில்லுங்க என்றவாறு  அவரை நோக்கி வந்தான்.


இவர் அவனிடம் நான் ஜோசியர் இல்லை என்றார்.


அவன் விடமல் இல்லையில்லை, நீங்க ஜோசியர்தான் என்றான்.


அவர் வேட்டி மேல் துண்டு இவற்றை அணிந்து கொண்டு கையில் சில புத்தங்களை வைத்துக் கொண்டிருந்ததால் அவரை ஜோசியர் என முடிவு செய்து விட்டான். 


சரி, என்ன விஷயம்? என்று கேட்டார் சாமிநாதன். அவனும் என் மாடு காணாமல் போய்விட்டது. எப்பொழுது கிடைக்கும்? என்று கேட்டான்.




இவர்  இது என்னடா வம்பா போச்சு என்று நினைத்தார். பிறகு அவனிடம் இன்று இரவு ஒரு கடுக்காயை அரைத்து சாப்பிடு. காலையில் மாடு கிடைத்து விடும். சரி, நான் வருகிறேன் என்றார்.


உடனே அவன் சாமி, நீங்க இப்ப போகக் கூடாது. காலையில் என் மாடு கிடைத்ததும் நீங்க போங்க. ராத்திரி நீங்க தங்கறதுக்கு ஏற்பாடு பண்றேன் என்றான்.


அவரும் வேறு வழியின்றி ஒத்துக் கொண்டார். மாடு கிடைக்காவிடில் நம்மை ஒரு கை பாத்துவிடுவான் போலிருக்கிறது என்று பயந்து கொண்டேயிருந்தார்.


இவர் சொன்னபடியே அவன் கடுக்காயை அரைத்து சாப்பிட அது வயிற்றை கலக்க ஆரம்பித்தது. விடியற்காலையிலேயே இயற்கை உபாதையை கழிக்க சொம்பில் தண்ணீர் எடுத்துக் கொண்டு தொலைவில் உள்ள திறந்தவெளிக்கு சென்றான். அங்கே அவன் மாடு இருந்தது. உடனே அவன் மகிழ்ச்சியுடன் அதை ஓட்டிக் கொண்டு வந்தான். 


பிறகு சாமிநாதனிடம் ஐயா, நீங்க சொன்னபடியே கடுக்காயை அரைச்சு சாப்பிட்டேன். மாடு கிடைத்து விட்டது என்றான்.


அதைக் கேட்ட அவர் சரி, நான் கிளம்புகிறேன் என்றார். ஆனால் இவன் விட வில்லை. நீங்க இங்கேயே தங்கி எங்களுக் கெல்லாம் வழி காட்ட வேண்டும்  என்றான்.


இவரது புகழ் ஊர் முழுவதும் பரவியது. 


ஏதாவது ஒரு கஷ்டம்   என்று யார் வந்தாலும் கடுக்காயை அரைத்து சாப்பிடச் சொல்வார். அது எப்படியோ சரியாகி விடும். அதனால் மக்கள் அவரை கடுக்காய் ஜோசியர் என அழைக்கலாயினர். ஆனால் என்றைக்கு மாட்டப்போகிறோமோ என்று பயந்து கொண்டேயிருந்தார்.


அந்த நாட்டின் மீது எதிரி நாட்டு அரசன் படையெடுத்து வந்து ஊரின் எல்லையியில் போர் தொடுக்க தயாராக இருந்தான். அதை அறிந்த இந்த நாட்டு  அரசன் கீர்த்திவர்மன்  கலங்கி போய் தளபதியிடம் ஆலோசனை கேட்டான். தளபதி அரசரிடம் கடுக்காய் ஜோசியர் பற்றி கூறி அவரை கேட்கலாம் என்றான். 


கீர்த்தி வர்மனும்  அதை ஏற்றுக் கொண்டு தளபதியுடன் ஜோசியரை காணச் சென்றான். அவரும் எல்லோருக்கும் கூறுவதுபோல்  அனைத்து வீரர்களும் கடுக்காயை அரைத்து சாப்பிட்டால் வெற்றி பெறலாம் என்றார்.  அரசன் கீர்த்திவர்மனும்  அவ்வாறே சாப்பிடச் சொல்கிறேன்என்று கூறிவிட்டு கிளம்பி சென்று விட்டார். 


ஒருக்கால்  தோற்று விட்டால் அரசன் நம் தலையை சீவி விடுவாரோ என்று பயந்து அவர் வெற்றி பெற வேண்டும் என கடவுளை வேண்டிக் கொண்டார்.


அரசன் கீர்த்தி வர்மன் தமது  படைகளை  எதிரி நாட்டு படைகளுக்கு  எதிராக தைரியமாக  நிறுத்தினான். இருந்தாலும் வீரர்கள் கடுக்காயை அரைத்து சாப்பிட்டதால் வயிறுப் போக்கால் அவதிப்பட்டு ஒவ்வொருவரும் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சொம்பில் தண்ணீர் எடுத்துக் கொண்டு இயற்கை உபாதையை கழிக்க இங்கும் அங்கும் சென்று சென்று கொண்டிருந்தனர்.


எதிரி நாட்டு அரசன் தன்  தளபதியிடம் என்ன தளபதி, நாம் போரை துவக்கலாமா? என்று கேட்டான்.


அதற்கு தளபதி வேண்டாம் மன்னா, அந்த நாட்டு வீரர்களுக்கு ஏதோ வியாதி  வந்திருக்கிறது போலிருக்கிறது. ஏனென்றால்  ஒவ்வொருவரும் வயிற்றை பிடித்துக் கொண்டு அலைகிறார்கள்.  இப்பொழுது நாம் போர் புரிந்தால் நமது வீரர்களுக்கும் அந்த வியாதி தொற்றுக் கொண்டு விடும். அதனால் இப்பொழுது திரும்பச் சென்று விடுவோம். சில மாதங்கள் கழித்து மீண்டும் போர் புரிவோம் என்றான்.


அதை அரசரும் ஏற்றுக் கொள்ள அனைவரும் தங்கள் நாட்டிற்கு திரும்பி விட்டனர்.


இதை அறிந்த அரசன் கீர்த்திவர்மன்  மிகவும் மகிழ்ச்சியுற்றான். நேராக ஜோசியர் வீட்டுக்குச் சென்று பொன்னும் பொருளும் கொடுத்து கௌரவித்தான்.


அன்று இரவு சாமிநாதன் இனி கடுக்காய் ஜோதிடத்தை வைத்து காலத்தை ஓட்ட முடியாது. இந்த ஊரை விட்டு ஓடி விட வேண்டியதுதான் என முடிவு செய்தார். உடனே அனைத்து பொருள்களையும் எடுத்துக் கொண்டு குடிசையை கொளுத்தி விட்டு தப்பிச் சென்று விட்டார்.


குடிசை எரிந்து சாம்பலானது. ஊர் மக்கள் வந்து பார்த்து திடுகிட்டனர்.


ஐயோ, ஜோசியர் தீயில் மாட்டிக் கொண்டு இறந்து விட்டாரே. இனி நமக்கு யார் வழி காட்டுவார்கள் என மிகவும் வருத்தமடைந்தனர்


(ராஜஸ்ரீ என்கிற வி.பி.ஸ்ரீநிவாசன். சென்னை அம்பத்தூரில் வசிக்கிறார். ஓய்வு பெற்ற மத்திய அரசு அலுவலர்)