அவார்டுகளைக் குறி வைக்கும் சூப்பர் மேன்.. தீவிரப் பிரச்சாரத்தில் குதித்த வார்னர் பிரதர்ஸ்
ஹாலிவுட்: சூப்பர்மேன் படம் விருதுகளைக் குறி வைத்துள்ளது. வார்னர் பிரதர்ஸ் நிறுவனம், ஜேம்ஸ் கன்னும் டேவிட் கோரன்ஸ்வெட்டும் இணைந்து உருவாக்கிய இந்தப் படத்திற்காக ஒரு பெரிய விருது பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.
திரையரங்குகளில் படம் ஓடி முடிந்த உடனேயே, விருதுகள் சீசனுக்காக தயாராகி வருகிறது சூப்பர் மேன். பல முக்கிய பிரிவுகளில் விருதுகளை அள்ளும் வகையில் விண்ணப்பித்து வருகிறது வார்னர் பிரதர்ஸ்.
ஆஸ்கர் மற்றும் கோல்டன் குளோப்ஸ் விருதுகளில் பல முக்கிய பிரிவுகளில் போட்டியிட சூப்பர்மேன் படம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர் போன்ற பிரிவுகளில் இந்தப் படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஜேம்ஸ் கன்னின் சிறந்த தழுவல் திரைக்கதைக்கும், டேவிட் கோரன்ஸ்வெட், ரேச்சல் ப்ரோஸ்னாஹன், நிக்கோலஸ் ஹவுல்ட் போன்ற நடிகர்களுக்கும் நடிப்பு பிரிவுகளில் விருதுகள் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
சூப்பர்மேன் படம் ஜூலை 11 அன்று வெளியானது. இது இந்த ஆண்டின் அதிக வசூல் செய்த சூப்பர் ஹீரோ படமாக அமைந்தது. தொழில்நுட்ப பிரிவுகளான VFX மற்றும் எடிட்டிங் தவிர்த்து, மற்ற பிரிவுகளிலும் இந்தப் படம் விருதுகளை வெல்லுமா என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
முன்னதாக, கிறிஸ்டோபர் ரீவ் நடித்த சூப்பர்மேன் படமும் 51வது அகாடமி விருதுகளில் சிறந்த படத்தொகுப்பு (Best Film Editing), சிறந்த இசை (Original Score), மற்றும் சிறந்த ஒலி (Best Sound) ஆகிய பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.