கோவையில் பெய்து வரும் தொடர் மழை..சிறுவாணி அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு.. 40 அடியை நெருங்குகிறது..
கோயம்புத்தூர்: தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து, கோயம்புத்தூர் மாவட்டத்தில் கன முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது. இதனால் சிறுவாணி அணையின் நீர்மட்டம் விரைவில் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்து வருவதால் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதே சமயத்தில் வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டல காரணமாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது.
குறிப்பாக கோவை, நீலகிரி, மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் அப்பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் மற்றும் அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.தொடர்ந்து இன்றும் நீலகிரி, கோயம்புத்தூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தேனி, ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் கோவையில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக அங்குள்ள சிறுவாணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் சிறுவாணி அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.அதன்படி, நேற்று அணையின் நீர்மட்டம் 34.80 அடியாக இருந்த நிலையில், தற்போது 37.10 அடியாக உயர்ந்துள்ளது.
அணையின் கொள்ளளவு 44.61 அடியாக இருக்கும் நிலையில், நீர் பிடிப்பு பகுதியில் மழை நீடித்தால் அணை விரைவில் முழு கொள்ளளவு எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அப்பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.