சென்னை மக்களே உஷார்...36 மணி நேரம் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

Su.tha Arivalagan
May 03, 2025,11:13 AM IST

சென்னை :  சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) வேலைகள் காரணமாக, இன்று (மே 03) காலை முதல் 36 மணி நேரம் குடிநீர் விநியோகம் தடைபடும். இன்று காலை 8 மணி முதல் நாளை இரவு 8 மணி வரை தண்ணீர் வராது. எனவே, தேவையான தண்ணீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். மெட்ரோ வாட்டர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


CMRL, அண்ணா நகர் பகுதியில் பைப்லைன் இணைப்பு வேலை செய்ய உள்ளனர். இதனால், கீழ்ப்பாக்கம் தண்ணீர் விநியோக நிலையத்திலிருந்து தண்ணீர் சப்ளை தடைபடும். சென்னையின் ஐந்து மண்டலங்களில் இது பாதிப்பை ஏற்படுத்தும்.




எந்தெந்த ஏரியாவில் தண்ணீர் வராது என்நதை பார்ப்போம். மண்டலம் 4-ல், தண்டையார்பேட்டை பாதிக்கப்படும். ராயபுரம் மண்டலத்தில், புரசைவாக்கம், பெரியமேடு, சௌகார்பேட்டை, எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை ஆகிய பகுதிகளில் தண்ணீர் வராது. திரு.வி.க. நகர் (மண்டலம் 6), அண்ணா நகர் (மண்டலம் 8), தேனாம்பேட்டை (மண்டலம் 9) ஆகிய மண்டலங்களில் ஓட்டேரி, அயனாவரம், பெரம்பூர், செம்பியம், கீழ்ப்பாக்கம், வில்லிவாக்கம், கெல்லிஸ் மற்றும் திருவல்லிக்கேணி ஆகிய இடங்களில் குடிநீர் கிடைக்காது.


மெட்ரோ வாட்டர் நிர்வாகம் இது குறித்து கூறுகையில், "குடிநீர் இணைப்பு இல்லாத மற்றும் குறைந்த அழுத்தத்தில் தண்ணீர் வரும் பகுதிகளில் டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் வழங்கப்படும். வழக்கம்போல் எந்த தடையும் இல்லாமல் தண்ணீர் விநியோகம் முறையாக நடைபெறும்" என்று தெரிவித்துள்ளனர்.


அவசர தேவைக்கு டேங்கர் லாரி மூலம் தண்ணீர் வேண்டும் என்றால், மெட்ரோ வாட்டர் இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். "குடிநீர் விநியோகம் தடைபட்டாலும், டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் தங்கு தடையின்றி கிடைக்கும்" என்று மெட்ரோ வாட்டர் உறுதியளித்துள்ளது. ஆகையால், பொதுமக்கள் யாரும் பயப்பட வேண்டாம். தேவையான அளவு தண்ணீரை மட்டும் சேமித்து வைத்து பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.