சன் பாத் எடுக்கும்போது.. டிரம்ப் வயிற்றில் டிரோன் விட்டுத் தாக்குவோம்.. ஈரான் திடீர் எச்சரிக்கை
டெஹ்ரான்: ஈரான் - அமெரிக்கா இடையிலான நீண்ட கால பகை எப்போது முடிவுக்கு வரும் என்று தெரியவில்லை. ஆனால் இப்போதும் கூட நீரு பூத்த நெருப்பு போல அதை புகைந்து கொண்டுதான் உள்ளது. ஈரானும், அமெரிக்காவும் நார்வே நாட்டில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ள நிலையில் ஈரான் சுப்ரீம் கமாண்டர் கமேனியின் ஆலோசகர் ஒரு புதிய குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார்.
ஈரானுக்கு செய்யக் கூடாததை செய்து விட்டார் டிரம்ப். இதனால் அவரால் நிம்மதியாக சன் பாத் கூட எடுக்க முடியாத நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம். அவர் சூரியக் குளியல் எடுக்கும்போது சின்னதாக ஒரு டிரோனை ஏவி அவரது வயிற்றைத் தாக்கி அவரை காலி செய்ய எங்களுக்கு ரொம்ப நேரமாகாது என்று கமேனியின் ஆலோசகரான முகம்மது ஜாவத் லாரிஜானி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டொனால்ட் டிரம்ப் புளோரிடாவில் உள்ள தனது மார்-எ-லாகோ மாளிகையில் சூரியக் குளியல் மேற்கொள்ளும் போது, ஈரான் அவரைத் தாக்கக்கூடும் என்றும் அவர் சூசகமாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விரிவாக கூறுகையில், டிரம்ப் தற்போது மார்-எ-லாகோவில் சூரியக் குளியல் செய்ய முடியாத அளவுக்கு ஒரு காரியத்தைச் செய்துவிட்டார் (ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலைக் குறிப்பிடுகிறார்). அவர் அங்கு வயிற்றில் சூரிய ஒளி படும்படி படுத்திருக்கும்போது, ஒரு சிறிய ட்ரோன் அவரது தொப்புளைத் தாக்கக்கூடும். இது மிகவும் எளிமையானது என்று கூறியுள்ளார் லாரிஜானி.
ஈரானுக்கும்- அமெரிக்காவுக்கான பகை என்பது நீண்ட காலமாக நிலவி வருவது. 2020 இல், ஈரானிய மேஜர் ஜெனரல் காசிம் சுலைமானியை அமெரிக்க ட்ரோன் தாக்குதலில் கொல்ல டிரம்ப் உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரான் சுப்ரீம் கமாண்டரின் ஆலோசகர் விடுத்துள்ள இந்த எச்சரிக்கை குறித்து டிவி பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அதிபர் டிரம்ப்பிடம் கேட்கப்பட்டது. அதைக் கேட்டதும் டிரம்ப் சிரித்தார். கடைசியாக நீங்க எப்போது சன் பாத் எடுத்தீங்க என்று செய்தியாளர் கேட்டபோது, நீண்ட காலமாகிவிட்டது. எனக்குத் தெரியவில்லை, ஒருவேளை நான் ஏழு வயது இருக்கும்போது இருந்திருக்கலாம். எனக்கு அதில் அவ்வளவு ஆர்வம் இல்லை. இது ஒரு அச்சுறுத்தல் என்று நினைக்கிறேன். உண்மையில் இது ஒரு அச்சுறுத்தல் இல்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன், ஆனால் ஒருவேளை இருக்கலாம் என்றும் டிரம்ப் தெரிவித்தார்.
இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையேயான 12 நாள் போரில் அமெரிக்கா தலையிட்டு, ஈரானின் அணுசக்தி மற்றும் ராணுவத் தளங்கள் மீது குண்டுவீசி தாக்கியது. ஆனால் இந்தத் தாக்குதலால் ஈரான் அணு சக்தி மையங்களுக்குப் பாதிப்பு ஏற்படவில்லை என்று அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அதை டிரம்ப் கடுமையாக கண்டித்திருந்தார் என்பது நினைவிருக்கலாம். இதற்கு ஈரான் தரப்பில் கடுமையான பதிலடி கொடுக்கத் தயாராகி வந்த நிலையில்தான், டிரம்ப் தலையிட்டு போர் நிறுத்தத்தை ஏற்படுத்தினார்.
ஈரானின் அணுசக்தி தளங்கள் மீதான அமெரிக்க குண்டுவீச்சுகள் அவற்றை "முற்றிலும் அழித்துவிட்டன" என்று டிரம்ப் மீண்டும் மீண்டும் கூறி வருகிறார். இருப்பினும், சில நிபுணர்கள், சேதம் போதுமானதாக இல்லை என்றும், தாக்குதல்களுக்கு முன்னர் ஈரான் தனது செறிவூட்டப்பட்ட யுரேனியக் கையிருப்புகளை ரகசியமாக வேறு இடத்திற்கு மாற்றியிருக்கலாம் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.