பயங்கரவாதம் தொடர்ந்தால் ஆபரேஷன் சிந்தூர் மீண்டும் துவங்கப்படும் : ராஜ்நாத் சிங் திட்டவட்டம்

Su.tha Arivalagan
Sep 17, 2025,04:51 PM IST

டெல்லி: இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத செயல்களில் பாகிஸ்தான் தொடர்ந்து ஈடுபட்டால் மீண்டும் ஆபரேஷன் சிந்தூர் கையில் எடுக்கப்படும் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.


சமீபத்தில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தளபதி ஒருவரின் பேச்சு அடங்கிய வீடியோ வெளியானது. அதில் இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் தீவிரவாதிகளுக்குக் கடும் பாதிப்பு ஏற்பட்டதாக அவர் கூறியிருந்தார். 


இதை மேற்கோள் காட்டிப் பேசிய அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்திய ராணுவத்தின் வீரத்தையும், தைரியத்தையும் பாராட்டுகிறேன். ஆபரேஷன் சிந்துர் நடவடிக்கையின் மூலம் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புக்கு ஏற்பட்ட அழிவை அவர்களது தளபதியே ஒப்புக்கொண்டார். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் இந்தியாவின் பலம் மேலும் அதிகரித்துள்ளது. எந்த சக்தியாலும் இந்தியாவின் இறையாண்மையை சவால் செய்ய முடியாது என்றார் அவர்.




ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியின்போது மேலும் அவர் கூறுகையில், இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர் நிறுத்தம் ஒப்பந்தம் ஏற்பட்டதில் மூன்றாம் தரப்புக்கு எந்த பங்கும் இல்லை. தீவிரவாத சம்பவம் மீண்டும் நடந்தால், ஆபரேஷன் சிந்துர் மீண்டும் தொடங்கும் என்றும் அவர் எச்சரித்தார்.


முன்னதாக ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தளபதி மசூத் இல்யாஸ் காஷ்மீரி ஒரு வீடியோவில், ஆபரேஷன் சிந்துர் தாக்குதலில் மசூத் அசாரின் குடும்ப உறுப்பினர்கள் சிதறிப் போனதாக ஒப்புக்கொண்டார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது