வெள்ளிக்கிழமை இரவு.. "நான் தான் கெத்து!".. Weekend புத்துணர்ச்சி கலாட்டாக்கள்!
வெள்ளிக்கிழமை மாலை 5:00 மணிக்கு பிறக்கும் அந்த புத்துணர்ச்சி இருக்கிறதே... அது ஒரு தனி அலைவரிசை!
அப்பாடா, இந்த வாரம் முடிஞ்சது! என்ற சந்தோஷத்தில், மூளையில் டோபமைன் வெள்ளமாய் பாயும். ஆனால், அதே ஞாயிற்றுக்கிழமை மாலை 6:00 மணிக்கு மேல்? அய்யோ, நாளைக்கு மறுபடியும் அலாரம் வைக்கணுமா? என்ற பயத்தில் ரத்த அழுத்தமே ஏறிவிடும்.
வெள்ளி மாலையின் சுவாரஸ்யமான பிளான்களுக்கும், ஞாயிறு இரவின் பயங்கரமான யதார்த்தத்திற்கும் இடையிலான அந்த வார இறுதி வாழ்வியல் தத்துவம் இருக்கு பாருங்க.. காலம் காலமாக உடைக்கப்படாத சுவாரஸ்யம் அது.
வெள்ளிக்கிழமை ஆபீஸ் நேரம் முடிந்ததும் அல்லது லேப்டாப்பை மூடப்போகும் அந்த கணத்தில், மனதில் ஒரு சினிமா ஹீரோ ரேஞ்சுக்கு மாஸ் என்ட்ரி நடக்கும்.
"இந்த வீக்கெண்ட் செம மாஸ்! சனிக்கிழமை காலையில 6 மணிக்கு எழுந்து வாக்கிங் போறோம், அப்புறம் நிலுவையில் இருக்கிற 3 படங்களைப் பாக்குறோம், அந்தப் புத்தகத்தை படிச்சு முடிக்கிறோம், வீடு முழுக்க கிளீன் பண்றோம், ஞாயிற்றுக்கிழமை புது ரெசிபி சமைக்கிறோம்!"
"இனி என்னை யாராலும் தடுக்க முடியாது! இந்த 48 மணி நேரமும் என்னோட ராஜ்ஜியம் தான்!"
இரவு 12 மணி வரை ரீல்ஸ் பார்த்துக்கொண்டே, "நாளைக்கு லேட்டா எழுந்தா என்ன... சாட்டர்டேதானே!" என்ற கெத்தோடு தூங்கப்போகும் அந்த நொடி தான் வாரத்தின் பொன்னான தருணம்.
சனிக்கிழமையும் வரும்.. 6 மணிக்கு அலாரமும் அடிக்கும்.. ஆனால் எழுந்திரிக்க மாட்டோம். கையைத் தடவி அலாரமை ஆஃப் செய்துவிட்டு அலட்சியமாகத் தூங்கி எழும்போது மணி 10!
பரவாலை... வாரம் முழுக்க உழைச்சிருக்கோம், சின்னதா ஒரு ரெஸ்ட் தேவைதான். மதியத்துக்கு மேல பிளானை ஸ்டார்ட் பண்ணலாம்னு மனசுக்குள்ள சமாதானம் சொல்லிக்குவோம்.
ஒரு வழியா ஒரு படம் பார்த்து, நல்லா சாப்பிட்டு முடிக்கும் போது மனசுக்குள்ள லேசா ஒரு குரல் நம்மைப் பிறாண்டும்.. நாளைக்கு முழு நாளும் ஃப்ரீயாத்தான் இருக்கு, ஞாயிற்றுக்கிழமை பார்த்துக்கலாமே என்று அந்தக் குரல் நம்மிடம் சன்னமாக சொல்லும்போது ஆமால்ல.. அப்படியே செய்யலாமே என்று நாமும் நைஸாக சனிக்கிழமை பிளானை சத்தம் போடாமல், அடுத்த நாளுக்கு ஒத்திவைப்போம்
இப்படியாக ஒரு வழியாக நாம சண்டை கிண்டை எதுவும் போடாமல், சமத்தாக சன்டேக்கு வந்து சேருவோம். ஞாயிறு காலை எழும்போது அப்ப பார்த்து, மனதின் மூளையில் ஒரு சிறிய மணி அடிக்கும். "தம்பி... இன்னைக்கு ஒரு நாள் தான் பாக்கி!"
இருந்தாலும், "இன்னும் 12 மணி நேரம் கைவசம் இருக்கு, இன்னைக்கு சாதிச்சுடலாம்" என்று காபி குடித்துக்கொண்டே பிளான் போடுவோம். ஆனால், நேரம் நம்மைக் கேட்காமலே 'புல்லட்' வேகத்தில் பறக்கத் தொடங்கும்.
ஞாயிறு மாலையும் வந்து சேரும். சூரியன் மறையும் அந்த மாலை நேரம் தான் வாரத்தின் மிகவும் ஆபத்தான தருணம்! அந்தச் சமயத்தில் வீசும் தென்றல் காற்றில் கூட ஒருவித சோகம் கலந்திருப்பது போலத் தோன்றும்.
அய்யோ! வீக்கெண்ட் முடியப்போகுதா? நான் பிளான் பண்ணதுல 10% கூட பண்ணலையே! நாளைக்கு என்னென்ன மீட்டிங் இருக்கு? எந்தெந்த மெயிலுக்கு ரிப்ளை பண்ணனும்?" என ஆபீஸ் நினைவுகள் மெல்ல தலைதூக்கும்.
வெள்ளிக்கிழமை 10/10 எனர்ஜியோடு இருந்த நபர், இப்போது பெட்ஷீட்டை தலை வரை போர்த்திக்கொண்டு, "ஏன் தான் இந்த திங்கள்கிழமை இப்படி சீக்கிரமா வருதோ!" என்று புலம்பத் தொடங்குவார்.
இப்படியாக, வெள்ளிக்கிழமை போடும் பிளான்கள் எதுவும் நடக்கவில்லை என்றாலும், ஞாயிறு இரவு 'சண்டே ஈவ்னிங் ப்ளூஸ்' (Sunday Evening Blues) வந்து பயமுறுத்தினாலும் அடுத்த வெள்ளிக்கிழமை கண்டிப்பா கெத்து காட்டுறோம் அப்படின்னு கொஞ்சம் கூட வெட்கமோ கூச்சமோ இல்லாமல், நம்பிக்கையோடு மறுபடியும் அலாரம் வைப்போம் பாருங்க.. அங்கதாங்க நாம நிக்கிறோம்.. இதை விட வேற என்னங்க வேணும் ஒரு மனுசனுக்கு!