எம்மை குளிர்விக்க வந்தவளே....!

Su.tha Arivalagan
Jun 18, 2026,03:51 PM IST

- அ.வென்சி ராஜ்


எம்மை குளிர்விக்க வந்தவளே....


கதிரவனின் கோபம் தணிக்க காற்றோடு வந்தாயோ....

எரிபிழம்பின்  வெப்பம் குறைக்க கருமேகத்தோடு வந்தாயோ...


மழை மகள் நீ வருவதைக் கூற இடி முழக்கம் செய்தாயோ..

நீர் தோரணம் போதாது என்று  மின்னல் தோரணம் தந்தாயோ...


புவிமகளை குளிர்விக்க பறந்தோடி வந்தாயோ..


நீ...

துளித்துளியாய் வந்தாலே துள்ளித்தான் குதித்திடுவேன்..


பெரு மழையாய் வந்ததனால் ஒதுங்கி நின்று ரசிக்கின்றேன்..


கோடை மழையே..

எம்மை 

குளிர்விக்க வந்தவளே...

நிலம் நனைத்து சென்றவளே..




இடி மின்னலோடு நீ ஆரவாரம் செய்வதனால்..

இதமாய் உன்னை ரசிப்பது கொஞ்சம் குறைந்து தான் போகிறதோ...


எது எப்படியோ...


வந்த வேலையை  வாகாய் செய்துவிட்டு தான் போயேன்...


வெப்பம் குறைந்த மகிழ்வில் வாயடைத்து போய் நிற்கின்றேன்..

வந்த உனை  வரவேற்பதா...?

பெரு மகிழ்வில் கரம் ஏந்தவா என்று.....!


(அ. வென்சி ராஜ்... இவர் திருவாரூர் பகுதியைச் சேர்ந்தவர். பண்ணைவிளாகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். இவர் பட்டிமன்ற பேச்சாளராகவும், தன்னம்பிக்கை பேச்சாளராகவும், சமூக செயல்பாட்டாளராகவும் அறியப்படுகிறார். திருவாரூர் தமிழ்ச்சங்கம், தமிழ்நாடு புலவர் பேரவை, இந்தியன் ரெட் கிராஸ் ஆகியவற்றில் வாழ்நாள் உறுப்பினராக உள்ளார். செஞ்சிலுவை சங்கத்தில் கொரடாச்சேரி இணை கண்வீனியராகவும், திருவாரூர் இன்னர்வீல் சங்கத்தில் உறுப்பினராகவும், ஹெல்ப் லைன் டிரஸ்ட் என்னும் ரத்ததான அமைப்பில் தலைமை ஆலோசகராகவும் பயணம் செய்கிறார்)