ஹர ஓம் நமசிவாய.. திருவண்ணாமலையில் கிரிவலம் செய்வதால் என்ன நன்மை?
- ஸ்வர்ணலட்சுமி
திருவண்ணாமலை கிரிவலம்... சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னி தலம் இது. அண்ணாமலையார் கோவில் தமிழ்நாட்டில் உள்ள ஒரு மிக பிரசித்தி பெற்ற சிவன் கோயில் ஆகும். இக்கோவில் சுமார் 1100 ஆண்டுகள் பழமை உடையதாகும். இக்கோவிலில் ஒன்பது கோபுரங்கள் அமைந்துள்ளன. ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் மலையின் உச்சியில் தீபம் ஏற்றப்படுவது மக்கள் மற்றும் சிவ பக்தர்களுக்கு மிகப்பெரிய ஆன்மீக நிகழ்வாகும்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் தல வரலாறு:
பிரம்மனுக்கும் விஷ்ணுவுக்கும் தங்களுள் யார் பெரியவர் என்ற போட்டி எழுந்தபோது சிவபெருமான் அவர்களுக்கு இடையூறாக நெருப்பு மலையாக தோன்றினார்.இந்த லிங்கோத் பவ வடிவமே திருவண்ணாமலை அண்ணாமலையார் என்று நம்பப்படுகிறது.
சிவபெருமான் லிங்கோத் பவராக தோன்றியதாகவும், அக்னி மலை வடிவத்தில் காட்சியளித்ததாகவும் கூறப்படுகிறது.
பல நூற்றாண்டுகள் பழமையான இக்கோவில் பல்வேறு மன்னர்களால் விரிவாக்கப்பட்டதாகவும், சோழர்கள், பல்லவர்கள், மற்றும் விஜயநகர பேரரசர்கள் காலங்களில் இக்கோயில் கட்டியதாகவும் கூறப்படுகிறது. இக்கோவிலின் ஆரம்ப கட்டப் பணிகளை சோழர்கள் மேற்கொண்டனர் என்றும், விரிவாக்க பணிகளை பல்லவர்கள் மேற்கொண்டனர் என்றும், தற்போதைய நிலையில் பல பகுதிகள் விஜயநகர பேரரசர்களால் கட்டப்பட்டவை என்றும் கூறப்படுகிறது.
திருவண்ணாமலை கிரிவலம் :
சிவபெருமானின் திருவிளையாடல் காரணமாக கிரிவலம் தொடங்கியது என்று ஒரு புராணக்கதை கூறுகிறது. முதன் முதலில் பார்வதி தேவி கிரிவலத்தை தொடங்கினார் என்றும், சிவபெருமான் "திருவண்ணாமலை" எனும் ஜோதி வடிவேல் தோன்றி, பின் அண்ணாமலையாக நின்றதாக கூறப்படுகிறது.
கிரிவலம் - பலன்கள் :
திருவண்ணாமலை கிரிவலம் அண்ணாமலையார் மலையை சுற்றி 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாதையில் பக்தர்கள் பக்தி சிரத்தையுடன் நடந்து செல்லும் புனித யாத்திரை யாகும்.ஒவ்வொரு பௌர்ணமி நாளிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலை கிரிவலம் செய்வது வழக்கம். 'கிரி 'என்றால் மலை மற்றும் 'வலம்' என்றால் சுற்றுதல் என்பதாகும்.ஒரு புனித இடத்தை சுற்றி வலம் வருவதே கிரிவலம் ஆகும். கிரிவலம் செய்வதினால் மன அமைதி,ஆன்மீக வளர்ச்சி, மற்றும் பாவங்கள் நீங்க உதவும் என்று நம்பப்படுகிறது.கிரிவலம் செல்லும் பொழுது 'ஓம் நமசிவாய "என்னும் பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே நிதானமாக நடந்து செல்வது சிறப்பு.
பௌர்ணமி நாளில் கிரிவலம் செய்வது திருவண்ணாமலையில் முக்கியமான நிகழ்வாக கருதப்படுகிறது. பௌர்ணமி நிலவின் ஒளி புனித மலையின் மீது பட்டு தெரிவதால் இந்த நாளில் கிரிவலம் செல்வது சிவபெருமானின் அருளை முழுமையாக பெற்று தரும் என்று நம்பப்படுகிறது. கார்த்திகை மாதம் பௌர்ணமி நாளில் பார்வதி தேவி கிரிவலம் செய்து சிவபெருமானின் உடலில் சரி பாதி பெற்று அர்த்தநாரீஸ்வரர் வடிவம் கொண்டார். அதனால் பெரும் மகிழ்ச்சி அடைந்த பார்வதி தேவி சிவபெருமான் தனக்கு அருள் புரிந்ததைப் போலவே கிரிவலம் செய்யும் அனைத்து உயிர்களுக்கும் அருள் வழங்க வேண்டும் என்று வேண்டினாள்.பார்வதி தேவியின் கோரிக்கைக்கு அண்ணாமலையார் சம்மதித்தார். கிரிவலம் செல்பவர்கள் கிழக்கு கோபுரத்திற்கு அருகில் துவங்கி அதே இடத்திலேயே நிறைவு செய்ய வேண்டும். சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு கிரிவலம் துவங்கி சூரிய உதயத்திற்குள் நிறைவு செய்வதினால் ஆன்மீக அதிர்வலைகள் அதிகம் கிடைக்கப்பெறலாம்.
பௌர்ணமி கிரிவலம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை மாதம்தோறும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. தொடர்ந்து ஒவ்வொரு மாதமும்,ஒவ்வொரு வருடமும் கிரிவலம் செல்வதை பலர் வழக்கமாக வைத்துள்ளனர். கைலாய மலைக்கு இணையாக கூறப்படும் திருவண்ணாமலை யில் சிவபெருமானே மலையாக வீற்றிருப்பதனால் கிரிவலம் செய்வதனால் சிவனையே வலம் வருவதற்கு சமம்,என்று நாளுக்கு நாள் கிரிவலம் செய்யும் பக்தர்கள் கூட்டம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.
கிரிவலம் சென்றால் பாவங்கள்,துன்பங்கள் நீங்கி சிவபெருமானின் அருளால் அனைத்து செல்வங்களும், வளங்களும், நலங்களும் கிடைப்பது உறுதி. கிரிவலம் செய்வதனால் தெய்வத்தை வலம் வந்து வழிபடுவதாகவும், மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் நீங்கி, தெய்வத்தின் அருளை பெறுவதாகவும் நம்பப்படுகிறது.
கிரிவலம் செல்வோருக்கும்,செல்ல இயலாதவர்களுக்கும் அண்ணாமலையார் திருவருள் பெற்று நல்வாழ்வு வாழ்வோமாக.
மேலும் இன்று பிறந்தநாள் மற்றும் திருமண நாள் கொண்டாடும் அனைவருக்கும் தென் தமிழ் சார்பாக வாழ்த்துக்கள். இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன்.எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.