மனிதர்களுக்குத்தான் மன அழுத்தம்... வாஸ்தவம்தான்.. அது என்ன காற்றுக்கு அழுத்தம்?
- சொ. மங்களேஸ்வரி
மனிதர்களுக்குத்தான் மன அழுத்தம். அது என்ன காற்றுக்கு அழுத்தம்? அதனால் ஏற்படும் தாழ்வு பகுதி என்றால் என்ன? வாருங்கள் பார்க்கலாம். இயற்கையை நாம் ரசிப்பதற்கு பல காரணங்கள் இருப்பினும் மரங்களின் நிழலில் காற்று வாங்குவதற்கு நேரம் செலவிடுவதைப் பலர் பழக்கமாகக் கொண்டுள்ளனர். கடற்கரைக்குச் சென்றும் காற்று வாங்குவதை வாடிக்கையாகக் கொண்ட மக்களும் இருக்கின்றனர்.
காற்று என்பது புவியின் வளிமண்டலத்தில் 78% நைட்ரஜன் மற்றும் 21% ஆக்ஸிஜன் என்ற விகிதத்தில் கலந்த கலவை ஆகும். இது வளிமண்டல அழுத்த வேறுபாடுகளால் ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நகரும். புவியில் வளிமங்கள் பெருமளவில் வளிமண்டலத்தில் நகரும் பொழுது காற்று எனப்படுகின்றது. கடினமான சூழ்நிலைகள், சவால்கள் அல்லது அச்சுறுத்தல்களுக்கு உடல் மற்றும் மனம் அழிக்கும் இயல்பான எதிர்வினை தான் மன அழுத்தம். இந்த நிலையில் உடலில் ஒரு பதற்றம் ஏற்பட்டு உடல் கார்டிசோல் மற்றும் அட்ரினலின் போன்ற ஹார்மோன்களை வெளியிடுகிறது.
ஆதலால் தூக்கமின்மை, தலைவலி, இதயத்துடிப்பின் வேக அதிகரிப்பு, கவனக் குறைவு போன்றவை ஏற்படுகின்றது. ஆனால் காற்றில் என்ன ஆகிறது?
காற்றழுத்த தாழ்வு பகுதி என்பது சுற்றியுள்ள பகுதிகளை விட, வளிமண்டல அழுத்தம் குறைவாக உள்ள ஒரு பகுதியாகும். கடற்பரப்பில் வெப்பநிலை உயர்வால் காற்று வெப்பமடைந்து மேலே எழும்பும்போது வெற்றிடம் உருவாகின்றது. அதாவது குறைந்த காற்றழுத்தம் ஏற்படுகின்றது. அந்த வெற்றிடத்தை நிரப்ப சுற்றியுள்ள அதிக காற்றழுத்த பகுதிகளிலிருந்து குளிர்ந்த காற்று, குறைந்த அழுத்தப் பகுதியை நோக்கி வேகமாகச் சுழன்று, கடிகாரச் சுற்றுக்கு எதிராக (ஆன்டி கிளாக் வைஸ்)வீசுகின்றது. இது மேகமூட்டம், பலத்த காற்று மற்றும் மழையை உருவாக்குகிறது. சில சமயங்களில் புயல்களும் உருவாகின்றது.
கிட்டத்தட்ட மனதில் அழுத்தம் ஏற்படும் பொழுது மூளை சூடாகி, நம் குணம் ஆக்ரோஷமாக மாறுவது போலத்தான் காற்றின் இயல்பும் மாறுகிறது. ஆக்ரோஷமடைந்த மனம் கத்தும், அழும், சுறுசுறுப்பிழந்து செயலிழந்த தன்மையும் அடையும். அல்லது கோபத்தின் உச்சிக்கே சென்று உணர்ச்சியைக் கொப்பளிக்கும். அதுபோல காற்றழுத்த தாழ்வுப் பகுதியும் மேகமூட்டம் மழை ஆகியவற்றை உருவாக்குவதோடு புயலையும் உருவாக்கி விடுகிறது. சில சமயங்களில் செயலிழந்தும் அதன் போக்கில் நிதானமாக வீசத் தொடங்கி விடுகிறது. மன அழுத்தம் மனிதனின் நிம்மதியைக் குலைப்பது போலவே, காற்றழுத்த தாழ்வு பகுதியும் வானிலை மாறுபாட்டை ஏற்படுத்தி, நம் செயல்பாட்டைத் தடை செய்யும் காலநிலை மாற்றமாக வெளிப்படுகிறது.
இன்று வங்கக் கடலிலிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி இப்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று இருப்பதாக சென்னை வானிலை மையம் சொல்லி இருக்கின்றது. பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள இந்தியப் பெருங்கடல் பகுதியும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியும் மேலடுக்கு அழுத்தம் காரணமாக காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று இருக்கின்றது. ஆதலால் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
மன அழுத்தம் இருக்கும் பொழுது கண்கள் கண்ணீரை வெளி விட்டு, அந்த அழுத்தத்தைக் குறைத்து நம்மை விடுவிப்பது போல, மழை மூலம் தன்னை விடுவித்துக் கொள்ளட்டும் காற்று.
(சொ.மங்களேஸ்வரி, ஆங்கில பட்டதாரி ஆசிரியை, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, கோவில்பட்டி, தூத்துக்குடி மாவட்டம்)