ஏகாதசி விரதத்தை விட கோடி மடங்கு பலன் தரும் அபூர்வ காலம் விஷ்ணுபதி புண்ணிய காலம்!

Su.tha Arivalagan
Aug 17, 2026,11:56 AM IST

- ஸ்வர்ணலட்சுமி


ஏகாதசி விரதத்தை விட கோடி மடங்கு பலன் தரும் அபூர்வ காலம் விஷ்ணுபதி புண்ணிய காலம். பராபவ  வருடம் 20 26 ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி திங்கட்கிழமையான இன்று விஷ்ணுபதி புண்ணிய காலம் அனுஷ்டிக்கப்படுகிறது. ஒரு வருடத்தில் நான்கு முறை மட்டுமே கிடைக்கும் இந்த அபூர்வ காலத்தை பயன்படுத்தி நம் வாழ்க்கையில் உள்ள  தடைகள் நீங்கி  வளமான வாழ்வு பெறுவது உறுதி.


ஒவ்வொரு ஆண்டும் சூரியன் ஸ்திர ராசிகளில் - ரிஷபம், சிம்மம்,விருச்சிகம், கும்பம் நுழையும் நான்கு நாட்களில் விஷ்ணுபதி புண்ணிய காலம் அமைகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு ஆகஸ்ட் 17ஆம் தேதியே சூரியன் சிம்ம ராசியில் நுழைகிறது. பொதுவாக ஆவணி ஒன்றாம் நாள் இது நடைபெறும்.இந்த ஆண்டு ஆடி மாதம் 32 ஆம் தேதியே ( இன்று) விஷ்ணுபதி புண்ணியகாலம் அமையப்பெற்றுள்ளது.


புராணம்:




நரசிம்ம அவதாரம் எடுத்து இரணியனை வதம் செய்த மகாவிஷ்ணு, மகாலட்சுமி தாயாரால் சாந்தமடைந்து லக்ஷ்மி நரசிம்மராக அருள்பாளித்த புனித நேரமே இந்த விஷ்ணுபதி புண்ணிய காலம் ஆகும்.இந்த அபூர்வமான நேரத்தில் வைகுண்டத்தின் கதவுகள் திறந்திருப்பதாக ஐதீகம். எனவே இந்த விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் வைக்கும் வேண்டுதல்கள் கட்டாயம் நிறைவேறும் என்பது நம்பிக்கை.


மகாபாரதத்தில் யுத்தத்தின் போது அர்ஜுனனுக்கு காலத்தின் முக்கியத்துவத்தை கிருஷ்ணர் உணர்த்தினார்.

"காலமே நான்" என்று கூறிய கிருஷ்ண பரமாத்மா சூரியனின் இயக்கத்தை வைத்தே புண்ணிய காலங்களை கணித்தார்.விஷ்ணுபதி நேரத்தில் செய்யப்படும் தர்மம் போர்க்களத்தில் அர்ஜுனன் பெற்ற தெளிவைப் போல நம் வாழ்வின்  குழப்பங்கள் நீங்கி   நேர் வழியாக வளமான வாழ்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை.


2026 ஆம் ஆண்டிற்கான விஷ்ணுபதி புண்ணிய கால தேதிகள் மற்றும் நேரம் :


பிப்ரவரி 13,  2026 மாசி மாதம். ( நிறைவு). சூரியன் கும்ப ராசியில் நுழையும் நேரம்.


மே 15 , 20 26 வைகாசி மாதம் சூரியன் ரிஷப ராசியில்  நுழையும் நேரம். (நிறைவு).


ஆகஸ்ட் 17, 20 26 சூரியன் சிம்ம ராசியில் நுழையும் நேரம்.


நவம்பர் 16 ,  2026 கார்த்திகை மாதம் சூரியன் விருச்சிக ராசியில் நுழையும் நேரம்.


விஷ்ணுபதி புண்ணிய கால நேரம் 3 மணி நேரம் 36 நிமிடங்கள் ஆகும். 


நேரம்: அதிகாலை 05 :10 AM மணி முதல் காலை 08 :46 மணி வரை .இந்த குறுகிய காலத்தில் செய்யப்படும் தியானம்  ஜபம், தானம் மற்றும் வேண்டுதல்கள் ஆயிரம் மடங்கு அதிக பலனை தரும் என்பது ஐதீகம்.  


விஷ்ணுபதி புண்ணிய கால வழிபாட்டு முறைகளும் நன்மைகளும் :


விஷ்ணு ஆலயத்தில் கருவறையை 27 முறை வலம் வந்து, ஒவ்வொரு சுற்றுக்கும் ஒரு மலர் சமர்ப்பித்து வலம் வர வேண்டும். மஞ்சள் நிற ஆடைகள்,வெல்லம் கலந்த இனிப்பு அல்லது அன்னதானம் செய்வது சிறப்பு. "ஓம் நமோ நாராயணா" அல்லது விஷ்ணு மந்திரங்கள் 108 முறை, விஷ்ணு சஹஸ்ரநாமம்  படிப்பது அதீத  சிறப்பு.


பலன்: விஷ்ணுபதி புண்ணிய கால வழிபாடுகள் செய்வதனால் வாழ்க்கையில் உள்ள தீராத கடன், வறுமை நீங்கி,ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் நீங்கி, குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். செல்வச் செழிப்பு உருவாகும்.

 

எளிய பூஜை முறை:


ஆலயங்களுக்குச் சென்று வழிபட இயலாதவர்கள் வீட்டிலேயே பெருமாள் படத்திற்கு, உருவச் சிலைக்கோ துளசி மாலைகள் அணிவித்து, நைவேத்தியம் படைத்து, பெருமாளை மனதார நினைத்து, பக்தி சிரத்தையுடன் பெருமாள் மந்திரம் படிப்பது சிறப்பு.


மேலும் இதுபோன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள். தென்தமிழுடன். எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.