ஆகச் சிறந்த அறம்!
- தமிழ்மாமணி இரா. கலைச்செல்வி
அருகில் இருக்கும் போதெல்லாம் , பெற்றோரை,
அலட்சியம் செய்தன உன் கண்கள்!
உயிராய் அவர்கள் உன் எதிரில் உலாவிய போது ,
உன் உதடுகள் பேசின ஏளனச் சொற்கள்
அன்பாய் அவர்களிடம் சில வார்த்தைகள் பேச - உன்
அகந்தை தடுத்து நிறுத்தியது!
இன்றோ அவர்கள் கல்லறை சென்ற பிறகு - உன்
இதயம் உணர்கிறது வெறுமையை.
அவர்களின் கல்லறை முன்னே நீ சிந்தும் கண்ணீர் ,
அழகான கானல் நீராய் வற்றிப் போகிறது!
அவர்கள் இவ்வுலகில் உயிரோடு இருந்த போது ,
அவர்களை முதியோர் இல்லத்தில் சேர்ப்பதும்,
உயிர் பிரிந்த பின் அவர்களின் உயிரற்ற உடலுக்கு,
உயர்ந்த பட்டுத் துணி போர்த்தி அழுவதும்,
அறம் சார்ந்த செயல்கள் அல்ல!
அறிவு சார்ந்த செயல்களும் அல்ல.!
பத்து மாதம் உன்னை சுமந்தவள் அவள் -- தன்
பசி மறந்து உனக்கு ஊட்டியவள்;
வியர்வை சிந்தி வளர்த்தவள் அவள் - உன்னை
விண்ணைத் தொடச் செய்த ஏணி அவள்!
அவள் இருக்கும் வரை இன்முகம் காட்டி போற்றுவதே ,
உன் தலையாய உயர்ந்த கடமை.
அவர்களை இழந்த பிறகு நீ செய்யும் சடங்கை விட ,
அவர்கள் இருக்கும்போது நீ காட்டும் அன்பே ..!
இவ்வுலகில் உனக்கு "ஆகச் சிறந்த அறம்! "
இதுவே உனக்கு ஆகச்சிறந்த பலம்.
(எழுத்தாளர் பற்றி ... சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, தமிழ்நாடு அரசின் தலைமை செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற உயர் அரசு அதிகாரி ஆவார் . அவரின் கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும் , வாசிப்பின் மீதும், தீராக் காதல் கொண்ட அவர், நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒளிபரப்பாகி உள்ளன. கதைகளைத் தவிர, கவிதைகளும், ஆய்வு கட்டுரைகளையும் அதிகம் எழுதி வரும் இவர் உளவியலில் முதுகலை பட்டமும் பெற்றவர் . சாதனைப் பெண், தமிழ் மாமணி, தங்கத்தாரகை, சேவா ரத்னா , கவிஞாயிறு, கவியருவி, கவிச்செம்மல், உழைப்பாளர் திலகம், மகாகவி, செம்மொழி கலைஞர் விருது போன்ற 15 க்கும் மேற்பட்ட விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.)