தானத்தில் சிறந்த தானம்!

Su.tha Arivalagan
Jan 28, 2026,03:33 PM IST

- தமிழ்மாமணி இரா.கலைச்செல்வி


தானத்தில் சிறந்த சீர்மிகு தானம் இது .

தன் உறுப்பைத் தந்து  உதவுவது.!


மறைந்த பின்னரும் வாழ்வதற்கு - இது

மண்ணுலகில் மக்கள் தந்த வரமிது..!


மனிதம் போற்றும் மாண்பிது - நீ

மரணத்தை வெல்லும் வழி இது..!


முடிந்து போனது வாழ்வென்று -  நீ

முடிவை எண்ணிக் கலங்காதே!




காலம் உன்னை அழைத்தாலும் - நீ

கலங்கி நின்று போகாதே..!


விடைபெற்றுப் போகும் வேளையிலும் - நீ

விதையாய் மாற வழியுண்டு..!


உறுப்பைத் தந்து உயிர்வாழு - நீ

உலகை விட்டுப் பிரியாதே..!


இறந்த பின்னும் உன் இதயம் ,

இன்னொரு உயிரில் துடித்திடலாம்.!


உறங்கப் போகும் கண்களை - பிறர்

உலகைப் பார்க்கத் தந்திடலாம்!


உதிரம் தந்து பிறஉயிர் காப்பவர் போல் -

உன் உறுப்பைத் தந்து உயிர்  காத்திடலாம்..!


மண்ணுக்குள் மடியும்  உடல் உறுப்பினை ,

மனிதன் உயிர் வாழ கொடுத்திடலாம்..!


கண்ணீர் சிந்தும் குடும்பத்தில் - நீ

புன்னகை பூக்கச் செய்திடலாம்!


மரணத்திற்குப் பின்பும் வாழ்வதற்கு- இங்கே 

உன்னத தானம்  தானம் உறுப்பு தானமே ..!


வாழும் போதே முடிவெடுப்போம் - நாம்

வள்ளல் ஆகிப் நிலைத்திடுவோம்..!


(எழுத்தாளர் பற்றி ... சிவகங்கையைச் சேர்ந்த  எழுத்தாளர் இரா.  கலைச்செல்வி, தமிழ்நாடு அரசின் தலைமை செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற உயர் அரசு அதிகாரி ஆவார் . அவரின் கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும் , வாசிப்பின் மீதும், தீராக்  காதல் கொண்ட அவர்,  நீண்ட  காலமாக  எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒளிபரப்பாகி உள்ளன. கதைகளைத் தவிர,  கவிதைகளும், ஆய்வு கட்டுரைகளையும் அதிகம் எழுதி வரும் இவர் உளவியலில் முதுகலை பட்டமும் பெற்றவர் . சாதனைப் பெண், தமிழ் மாமணி, தங்கத்தாரகை,  சேவா ரத்னா , கவிஞாயிறு,  கவியருவி, கவிச்செம்மல்,  உழைப்பாளர் திலகம், மகாகவி, செம்மொழி கலைஞர் விருது ‌ போன்ற 15 ‌க்கும் மேற்பட்ட  விருதுகளையும் அவர்  பெற்றுள்ளார்.)