பாகிஸ்தான் நம்மை அழிக்க நினைப்பதற்குள்.. பாதி பாகிஸ்தான் காலி.. இந்தியாவின் பலம் இதுதான்!

Su.tha Arivalagan
Aug 12, 2025,04:29 PM IST

டெல்லி: பாதி உலகை அழிப்போம், இந்தியாவை அழிப்போம்.. அவ்வளவு அணு ஆயுதங்கள் எங்களிடம் இருக்கு என்று மிரட்டல் விடுத்துள்ளார் பாகிஸ்தான் ராணுவத் தளபதி. ஆனால் இந்தியாவின் அணு ஆயுத  பலம், பாகிஸ்தானை முழுமையாக காலி செய்யும் அளவுக்கு இருப்பதையும் நாம் மறந்து விடக் கூடாது.


SIPRI (Stockholm International Peace Research Institute) நிறுவனத்தின் 2025 ஆம் ஆண்டின் கணக்கீட்டின்படி, இந்தியாவின் அணு ஆயுதங்களின் எண்ணிக்கை சுமார் 180 ஆகும். இது கடந்த ஆண்டை விட சற்று அதிகம்.


இந்தியாவின் அணுசக்தி கொள்கை "குறைந்தபட்ச நம்பகமான அணு ஆயுதத் தடுப்பு" மற்றும் "முதலில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த மாட்டோம்" (No First Use - NFU) என்ற கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்துள்ளது. இதன் பொருள், இந்தியா அணு ஆயுதங்களைப் போரில் முதலில் பயன்படுத்தாது. ஆனால், ஒருவேளை எதிரி நாடுகள் உயிரியல் அல்லது ரசாயன ஆயுதங்களைக் கொண்டு பெரிய தாக்குதல் நடத்தினால், அதற்குப் பதிலடியாக அணு ஆயுதங்களைப் பயன்படுத்த இந்தியாவுக்கு உரிமை உண்டு.




இந்தியாவின் அணு ஆயுதங்கள், இந்தியப் பகுதி அல்லது இந்தியப் படைகளின் மீது அணு ஆயுதத் தாக்குதல் நடத்தப்பட்டால், அதற்குப் பதிலடியாக, எதிரிக்கு மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தும் வகையில் மட்டுமே பயன்படுத்தப்படும்.


அணுசக்தித் தாக்குதலுக்கு அனுமதி அளிக்கும் இறுதி அதிகாரம், அணுசக்தி கட்டளை ஆணையத்தின் தலைவரான பிரதமரிடம் உள்ளது.


இந்தியா, தரை, வான் மற்றும் கடல் என மூன்று வழிகளிலும் அணு ஆயுதங்களைத் தாக்கும் திறனைப் பெற்றுள்ளது. இதன் மூலம், எதிரிகள் ஒரு தளத்தை அழித்தாலும், மற்ற தளங்களில் இருந்து பதிலடி கொடுக்க முடியும்.


இந்தியாவின் தரைவழி அணுசக்தி ஆயுதங்களில் முக்கியமானது அக்னி ஏவுகணைத் தொடர். அக்னி-5 என்பது இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த ஏவுகணை. இது 5,000 கி.மீ.க்கும் அதிகமான தாக்குதல் எல்லை கொண்டது. இது ஒரு வாகனத்தில் எடுத்துச் செல்லக்கூடிய (மொபைல் யூனிட்) ஏவுகணை என்பதால், எதிரிகளால் இதைக் கண்டறிந்து தாக்குவது கடினம். இது பல குண்டுகளைச் சுமந்து செல்லும் திறன் கொண்டது, அதாவது ஒரே ஏவுகணையில் இருந்து பல இலக்குகளை குறி வைத்துத் தாக்கிஅழிக்க முடியும்.


அக்னி தொடரில் அக்னி-1 (700 கி.மீ.), அக்னி-2 (2,000-3,500 கி.மீ.), அக்னி-4 (4,000 கி.மீ.) போன்ற மற்ற ஏவுகணைகளும் உள்ளன.


இந்தியாவின் வான்வழி அணுசக்தி திறன், மிராஜ் 2000, ஜாகுவார் மற்றும் ரஃபேல் போன்ற போர் விமானங்களில் உள்ளது. இந்த விமானங்கள் அணு ஆயுதங்களைச் சுமந்து சென்று வீசும் திறன் கொண்டவை.


இந்தியக் கடற்படையும் மிக வலிமையானது. நீர்மூழ்கிக் கப்பல்கள் எளிதில் கண்டறியப்பட முடியாதவை என்பதால், கடல்வழி அணு ஆயுதப் படை ஒரு நம்பகமான இரண்டாம் தாக்குதலுக்கு மிகவும் முக்கியம்.


இந்தியாவின் கடல்வழி அணு ஆயுதப் படைக்கு ஐ.என்.எஸ். அரிஹந்த் மற்றும் ஐ.என்.எஸ். அரிகாட் போன்ற அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த நீர்மூழ்கிக் கப்பல்களில், கே-15 (750 கி.மீ.) மற்றும் அதிக சக்தி வாய்ந்த கே-4 (3,500 கி.மீ.) போன்ற நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகள் பொருத்தப்பட்டுள்ளன.


பாகிஸ்தானுக்கு சற்றும் குறையாத வகையில், இன்னும் சொல்தவானால் பாகிஸ்தானை விட வலிமையான அணு ஆயுத சக்தி நம்மிடம் உள்ளது குறிப்பிடத்தக்கது.