ஸ்டிராங் ஆன எடப்பாடி பழனிச்சாமி.. தனித்து விடப்பட்டாரா கே.ஏ.செங்கோட்டையன்.. என்ன திட்டம்?

Su.tha Arivalagan
Sep 25, 2025,03:58 PM IST

சென்னை: அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட தலைவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று கூறி சமீபத்தில் போர்க்கொடி உயர்த்திய மூத்த தலைவர் கே.ஏ. செங்கோட்டையன் என்ன திட்டத்தில் இருக்கிறார் என்பது குழப்பமாக உள்ளது.


சென்னைக்கு வந்த அவர் நேற்று அரசியல் தலைவர்களை சந்தித்ததாக தகவல் வெளியானது. ஆனால் அதை அவர் மறுத்துள்ளார். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை ஒரு மணி நேரம் சந்தித்ததாக செய்திகள் வந்தன. ஆனால், அதை செங்கோட்டையன் மறுத்துள்ளார். தனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், தனிப்பட்ட விஷயமாகவே சென்னைக்கு வந்ததாக அவர் கூறியுள்ளார். அதிமுக ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். ஜெயலலிதாவின் கனவை நனவாக்க கட்சி தொடர்ந்து நூறு ஆண்டுகள் ஆட்சி செய்ய வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் அவர் தெரிவித்தார்.




அதேசமயம், நண்பர்கள் பலர் தன்னை தொடர்பு கொண்டதாகவும், ஆனால் அவர்களின் பெயர்களை வெளியிட முடியாது என்றும் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


முன்னதாக செங்கோட்டையன் போர்க்கொடியைத் தொடர்ந்து அவரது கட்சிப் பதவிகளைப் பறித்தார் எடப்பாடி பழனிச்சாமி. அதன் பின்னர் டெல்லி சென்ற அவர் அங்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்துப் பேசி விட்டு வந்தார். அதன் பின்னர் செங்கோட்டையன் அமைதியாகி விட்டார். இதனால் அவரது திட்டம் என்ன என்பது குழப்பமாகவே உள்ளது.