முதல் பேச்சிலேயே தமிழ்நாட்டைத் தொட்ட பாஜக தலைவர் நிதின் நபின்.. திட்டம் என்ன?
- பாவை.பு
சென்னை: பாஜகவின் தேசியத் தலைவராக இதுவரை இருந்து வந்த ஜே.பி.நட்டாவின் பதவி காலம் முடிவடைந்திருந்த நிலையில் புதிய தேசிய தலைவராக 45 வயதேயான நிதின் நபின் ஒருமனதாக தேர்வாகியுள்ளார். இவரது தேர்வு அகில இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
ஜெ.பி.நட்டா 2020 ஆம் ஆண்டு ஜனவரியில், தேசிய தலைவராக நியமிக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் கட்சி விதிப்படி 3 ஆண்டுகள். அதன்படி 2023 இல் இவரின் பதவி காலம் முடிவடைந்த நிலையில், 2024 ஜுன் மாதம் வரை பதவியில் நீடிப்பார் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்திருந்தார். இதற்கு லோக்சபா தேர்தல் காரணமாக கூறப்பட்டாலும், தொடர்ந்து இவரையே இரு முறை தேசிய தலைவர் பொறுப்பில் அமர வைக்க தலைமை விருப்பியதும் ஒரு காரணம். (தேசிய தலைவர் தொடர்ந்து இரு முறை தலைவர் பதவியில் இருக்கலாம்)
தற்போது பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் முறைப்படி புதிய தேசிய தலைவருக்கான தேர்தல் ஜனவரி 20 ஆம் தேதி பிஜேபி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. சென்ற மாதம் பாஜகவின் தேசிய செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிதின் நபின் தேசிய தலைவராக போட்டியின்றி தேர்வாகியுள்ளார். இதற்கு முன் அமித்ஷா பாஜக தேசிய தலைவராக இருந்த போது, ஜே.பி.நட்டா தேசிய செயலாளராக இருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.
கட்சியின் 12 ஆவது தேசிய தலைவராக நிதின் நபினை தேர்வு செய்ய பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜே.பி.நட்டா என மொத்தம் 37 பேர் விருப்ப மனு தாக்கல் செய்திருந்தார்கள். நிதின் நபினை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் அவர் போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.
சரி அது இருக்கட்டும்... யார் இந்த நிதின் நபின்.. இவர் மீது ஏன் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது?
ஒருங்கிணைந்த பீகார் மாநிலத்தில் இடம் பெற்ற ராஞ்சியில் (தற்போது ஜார்கண்ட் மாநிலத் தலைநகராக உள்ளது, ராஞ்சி) 1980 இல் பிறந்தவர் நபின். ஆர்எஸ்எஸ் அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டு அதில் தீவிரமாக செயல்பட்டவர். இவரது தந்தை நவின் கிஷோர் சின்காவும் தீவிர பாஜக தலைவர்தான். அவரது மறைவிற்கு பிறகு, பாட்னா இடைத்தேர்தலில் நின்றதன் மூலம் நபினின் முழுநேர அரசியல் பிரவேசம் ஆரம்பமானது.
தனது 26 வது வயதிலேயே சட்டமன்ற உறுப்பினரான நபின், பங்கிபூர் தொகுதியிலிருந்து தொடர்ச்சியாக 5 முறை சட்டமன்றத்திற்கு சென்றவர். பீகார் அமைச்சரவையில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ள நிதின் நபின், 2006ம் ஆண்டு பாஜக இளைஞர் அணியில் தேசிய செயற்குழு உறுப்பினராகவும், 2010இல் பாஜக இளைஞரணி தேசியபொது செயலாளராகவும், 2016 இல் பீகார் மாநில பாஜக தலைவராகவும், 2023இல் சத்தீஸ்கர் சட்டமன்றத் தேர்தலில் கட்சியின் இணைப் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டார்.
அதுவரை சத்தீஸ்கரில் ஆதிக்கம் செலுத்தி வந்த காங்கிரஸை வீழ்த்தி பாஜக ஆட்சியை பிடித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியதுடன், தொடர்ந்து மக்களவைத் தேர்தலிலும் சத்தீஸ்கரில் உள்ள மொத்தம் 11 இல் 10 இடங்களை பிடித்து அனைவராலும் திரும்பி பார்க்கப்பட்டது. இதற்கு நிதின் நபினின் செயல்பாடுகளும் காரணம் என்ற பேச்சு எழுந்ததால், கட்சித் தலைமை அவருக்கு தேசிய செயலாளர் பதவி கொடுத்து அழகு பார்த்தது. தற்போது தேசியத் தலைவராகவும் அவர் தேர்வாகியுள்ளார்.
பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் தலைமையிலான அமைச்சரவையில் நகர்ப்புற மேம்பாடு மற்றும் வீட்டு வசதி துறை அமைச்சராக உள்ளார் நிதின் நிபின். கட்சியின் அடிமட்ட அமைப்பை வலுப்படுத்தியதில் முக்கிய பங்கு வகித்தவர், கட்சிக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் விசுவாசமாகவும் அறியப்பட்டவர். மிகக்குறைந்த வயதில் தேசிய தலைவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன் அமித்ஷா 49 வயதில் தேசிய தலைவராக நியமிக்கப்பட்டது தான் குறைந்த வயதாக இருந்தது. இதனை தன்னுடைய திறமையாலும், கடின உழைப்பாலும் தனது 45 ஆவது வயதில் முறியடித்துள்ளார்.
பாஜகவைப் பொறுத்தவரை, தேசிய தலைவர் பதவிக்கு, ஒரு மாநிலத்திற்கு ஒருவர் என்ற ரீதியில் தேர்வு செய்து வருகிறது. அதன்படி பீகார் மாநிலத்திலிருந்து நபின் தேர்வாகியுள்ளார்.
பாகவின் தேசியத் தலைவர்கள் வரிசையை எடுத்துப் பார்த்தால் பல மிகச் சிறந்த ஆளுமைகளை அங்கு காண முடியும். முதல் தலைவராக அடல் பிஹாரி வாஜ்பாய் (1980-1986) பதவி வகித்துள்ளார். அவர் மத்தியபிரதேச மாநிலத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டார். இவரைத் தொடர்ந்து எல்.கே அத்வானி 1986-1991,1993-1998, 2004-2005 குஜராத், முரளி மனோகர் ஜோஷி 1991-1993 உத்திரபிரதேசம், குஷாபாவ் தாக்ரே 1998-2000 மத்தியப்பிரதேசம், பங்காரு லட்சுமணன் 2000-2001 தெலுங்கானா, ஜனா கிருஷ்ணமூர்த்தி 2001-2002 தமிழ்நாடு, எம் வெங்கையாநாயுடு 2002-2004 ஆந்திரா, ராஜ்நாத் சிங் 2005-2009,2013-2014 உத்திரபிரதேசம், நிதின்கட்கரி 2009-2013 மஹாராஷ்டிரா, அமித்ஷா 2014-2020 குஜராத், ஜே.பி நட்டா 2020-2026 ஹிமாச்சல்பிரதேசம் என பதவி வகித்துள்ளனர்.
பீகார் மாநிலத்திலிருந்து பாஜக தேசியத் தலைவராகியுள்ள பெருமை நபினுக்குக் கிடைத்துள்ளது. ஒரு அடிமட்ட தொண்டன் கட்சியில் எந்த உயரத்திற்கும் போகலாம் என்பதை சாத்தியமாக்கியுள்ள கட்சியாக பாஜக புதிய வரலாறும் படைத்துள்ளது.
தலைவர் பதவியேற்றவுடன், தனது முதல் பேச்சிலேயே தமிழ்நாட்டை குறிப்பிட்டார் நபின். குறிப்பாக திமுகவை மறைமுகமாக தாக்கி பேசியது அனைவரது கவனத்தையும் திருப்பியுள்ளது. பீகாரைச் சேர்ந்தவராக இருந்தாலும், பிற மாநில விவகாரங்களிலும் இவர் கவனம் செலுத்தி வருவதையே இது உணர்த்துவதாக உள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் நபினின் முதல் பேச்சிலேயே தமிழ்நாடு இடம் பெற்றுள்ளது. குறிப்பாக திருப்பரங்குன்றம் விவகாரத்தைக் குறிப்பிட்டே அவர் பேசியுள்ளார்.
தனது பேச்சில் நபின் கூறுகையில், சமீபத்தில் தமிழ்நாட்டில் ஒரு புனிதமான மலையில் நடைபெற்ற கார்த்திகை தீப விழாவை அவர்கள் எப்படித் தடுக்க முயன்றார்கள் என்பதை ஒட்டுமொத்த நாடே பார்த்தது. இது ஒன்றும் அவர்களுக்கு புதிய நிகழ்வு அல்ல. அவர்கள் வேறு பல விஷயங்களையும் தடுக்க சதி செய்கின்றனர். ஒரு நீதிபதியையே பதவி நீக்கம் செய்ய எதிர்கட்சிகள் எவ்வளவு முயற்சி மேற்கொண்டன என்பதையும் நாடு பார்த்தது.
இது போன்ற தீய சக்திகளை எதிர்கொள்வது மிக முக்கியமான ஒன்று. ராமர் பாலம் இருப்பதை மறுப்பவர்களுக்கும், கார்த்திகை தீப திருவிழாவை எதிர்ப்பவர்களும் பாரத அரசியலில் இடமில்லை என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும் என்றார் நபின்.
விரைவில் தமிழ்நாடு, கேரளம்,அசாம், மேற்கு வங்காளம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைப்பெறவுள்ளது. இந்த மாநிலங்களில் எந்த மாதிரியான சவால்கள் நிறைந்துள்ளது என்பதையும் அறியமுடிகிறது. இதில் பாஜகவுக்கு மிக முக்கியமான மாநிலங்களாக தமிழ்நாடும், மேற்கு வங்காளமும் பார்க்கப்படுகிறது. இங்கு பெரும் வெற்றியை ஈட்டுவதை இலக்காக கொண்டு பாஜக தனது பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது.
5 மாநிலங்களிலும் வெற்றி பெற பாஜக தொண்டர்கள் கடுமையாக உழைத்து வெற்றிக்கு அழைத்து செல்வார்கள் என்றும் நபின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
முன்னதாக பதவியேற்பு விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, கட்சி என்று வரும்போது, நிதின் நபின், நம் அனைவருக்கும் தலைவர். நான் ஒரு அடிமட்ட தொண்டன். அவர் தான் எனக்கு பாஸ். பாஜக வை நிர்வகிப்பது மட்டுமல்லாமல் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைந்து செல்ல வேண்டியதும் அவரின் கடமை என்று கூறியிருந்தார்.
இளம் தலைவராக பொறுப்பேற்றுள்ள நிதின் நபினின் பேச்சு முதல் நாளே கவனம் பெற்றுள்ளதை தொடர்ந்து இவரின் 5 மாநில தேர்தல் நகர்வுகள் எப்படி இருக்கும், முந்தைய தலைவர்களால் சாதிக்க முடியாததை இவர் சாதிப்பாரா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.