தாய் எட்டடி பாய்ந்தால்; பிள்ளை பதினாரடி பாயுமாம்! (பழமொழியும் உண்மை பொருளும்)

Su.tha Arivalagan
Dec 25, 2025,10:11 AM IST

- ஆ.வ.உமாதேவி


தாய் எட்டடி பாய்ந்தால்; பிள்ளை பதினாரடி பாயுமாம்!


இந்தப் பழமொழியை பயன்படுத்தும் போது பொதுவாக நாம் கொள்ளும் பொருள் என்னவெனில், தாயின் திறமையை விட பிள்ளையின் திறமை இரு மடங்காக இருக்கும். அல்லது பிள்ளைகள் தங்கள் பெற்றோரை விட அதிக சாதுர்யத்துடனும் ஆற்றலுடனும் செயல்படுவார்கள் என்பதாகும். அதாவது பிள்ளைகள் எப்போதும் தங்கள் பெற்றோரை விட மேம்பட்டவர்களாக இருப்பார்கள் என்று பொருள் கொள்கிறோம். 


இவை, நடைமுறையில் சாத்தியமா என்று பார்க்கும்போது சில நேரங்களில் இல்லை என்ற பதிலே கிடைக்கிறது. சாமர்த்தியசாலியான தாய்க்கு, அப்பாவியான மகள் குடிகாரத் தந்தைக்கு, நற்குணங்கள் கொண்ட மகன் கடை முதலாளியின் பேராசைக்கு இணங்காமல், நேர்மையாக வியாபாரம் செய்யும் பணியாள்.... இப்படி பலரையும் நம்மால் பார்க்க முடிகிறது. ஆகவே, இப்ப பழமொழி இதற்காக சொல்லப்பட்டது அன்று என்று தெளிவாகத் தெரிகிறது. 




நம் முன்னோர்கள் வாழை /  தென்னை மர நடவு குறித்து சொல்லவே இப்ப பழமொழியை சொல்லி இருக்கிறார்கள். வாழை மரத்தை தாய் மரம் என்று சொல்வார்கள். அந்த தாய் மரத்தை நடவு செய்யும்போது எட்டு அடிக்கு ஒன்று என்ற கணக்குப்படி நடுவர். தாய்மரம் குலை தள்ளும்போது அதன் அருகில் பக்கக்கன்று ஒன்று வளரத் தொடங்கும். அப்போது தாய் மரத்தை வெட்டும்போது பக்கத்தில் உள்ள மரமோ, கன்றோ பாதிக்கா வண்ணம் இருக்கவே எட்டு அடிக்கு ஒன்று வீதம் நடப்பட, நம் முன்னோர்கள் சொன்ன நடவு முறை. 


இதே போல, தென்னையின் இளம் உயிரியை தென்னம் பிள்ளை என்று கூறுவர். இது பூமிக்கு கீழே அதிக பரப்பு வேர்  ஊன்றுவதாலும், இதன் நீண்ட ஓலை நுனிகள் ஒன்றை ஒன்று தொடாதவாறு இருக்கவும் தென்னையை நடும்போது 16 அடி இடைவெளி விட்டு நட வேண்டும் என்பதை உணர்த்தவும் சொல்லப்பட்டதே,


தாய் எட்டடி பாய்ந்தால்; 

பிள்ளை பதினாரடி பாயுமாம்! என்ற பழமொழி.


தற்காலத்தில் நாம் சாதனை புரியும் பிள்ளைகளை பாராட்டவும், முன்னோர்களை மிஞ்சும் வகையில் செயல்படும் சந்ததியினரை குறிப்பிடவும் இப் பழமொழியை பயன்படுத்துவதில் தவறு ஒன்றும் இல்லை. 


(ஆ.வ. உமாதேவி, இடைநிலை ஆசிரியர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம், முருக்கம்பட்டு காலனியைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியி்ல் பணியாற்றுகிறார்)