அமித்ஷா தமிழகம் வந்தது இதுக்கு தானா.. நயினார் சொன்னதை யாராவது கவனிச்சீங்களா?

Su.tha Arivalagan
Jan 06, 2026,01:22 PM IST

சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்திருந்தார். பாஜக.,சார்பில் நடத்தப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொண்டார். இந்தப் பயணத்திற்கு வேறு காரணம் பாஜக சார்பில் கூறப்பட்டாலும் கூட உண்மையில் வேறு காரணத்திற்காகவே அவர் வந்ததாக சொல்கிறார்கள்.


அவர் கூட்டணி கட்சிகளை ஒன்றிணைக்க தான் தமிழகம் வந்ததாக சொல்லப்பட்டது. இதுவரை தேசிய ஜனநாயக கூட்டணியில் மற்ற கட்சிகளை இணைப்பதில் முன்னேற்றம் ஏதும் ஏற்படாததால் அதை இறுதி செய்யத் தான் அவர் வந்ததாகவும் சொல்லப்பட்டது. 


பிறகு அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை இரு முறை சந்தித்ததால் தொகுதி பங்கீடு குறித்து பேசத்தான் அமித்ஷா தமிழகம் வந்ததாக சொல்லப்பட்டது. அது மட்டுமல்ல, அமித்ஷா இரண்டு நாட்கள் தமிழகத்தில் இருந்தும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஒருமுறை கூட சென்று அவரை பார்க்காததால் கூட்டணிக்குள் ஏதோ குழப்பம் ஏற்பட்டுள்ளது என்றும் தகவல்கள் பரவின. ஆனால் இது எதுவுமே உண்மை இல்லை. 




அமித்ஷா தமிழகம் வந்த காரணத்தை புதுக்கோட்டையில் நடந்த பாஜக பொதுக் கூட்டத்தில் அவரும், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுமே வெளிப்படையாக சொல்லி விட்டனர்.


இந்த கூட்டத்தில் அமித்ஷா, திமுக அரசு பற்றி பல விமர்சனங்களை முன் வைத்தார். அவற்றில் மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது, தனது மகன் உதயநிதி ஸ்டாலினை தமிழகத்தின் முதல்வராக்க வேண்டும் என ஸ்டாலின் நினைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அதை கனவிலும் நடக்க விட மாட்டோம். வாரிசு அரசியலை ஒழிப்போம். திமுக.,வை வீழ்த்துவோம். தமிழகத்தில் இந்துக்கள் ஒடுக்கப்படுகிறார்கள். தீபம் ஏற்றுவதற்கும், சிலைகளை கரைப்பதற்கும் கூட அவர்களுக்கு உரிமை மறுக்கப்படுகிறது என குறிப்பிட்டார். 


கூட்டத்தில் அமித்ஷா பேசியதை விட நயினார் நாகேந்திரன் பேசிய விஷயம் தான் ஹைலைட்டே. அவர் பேசுகையில், கரூர் சம்பவத்தில் செந்தில் பாலாஜியை காப்பாற்றுவதற்காக தான் முதல்வர் அவசரமாக இரவோடு இரவாக கரூர் சென்றார். செந்தில் பாலாஜியை காப்பாற்றுவதற்காக தான் 41 பேரின் உடல்களும் அவசர அவசரமாக எரிக்கப்பட்டன. கரூரில் 41 பேர் உயிரிந்த சம்பவத்திற்கு செந்தில் பாலாஜி தான் காரணம் என பகிரங்கமாக குற்றம்சாட்டுகிறேன் என பேசினார்.


கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை ஏறக்குறைய இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. தவெக நிர்வாகிகள் உள்ளிட்டோர் அனைத்து தரப்பினரிடமும் விசாரணை நிறைவடைந்துள்ள நிலையில் பல முக்கிய தகவல்கள் சிபிஐ.,க்கு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் அடுத்த கட்டமாக பொங்கலுக்கு முன்பு விஜய்யை டில்லிக்கு அழைத்து விசாரிக்கவும் சிபிஐ திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதுவரை கரூர் சம்பவத்திற்கு போலீசாரின் அலட்சியம் தான் காரணம். அரசு போதிய பாதுகாப்பு வழங்கவில்லை என குற்றம்சாட்டி வந்த பாஜக., தற்போது பகிரங்கரமாக செந்தில் பாலாஜியை குறிப்பிட்டு குற்றம்சாட்டி உள்ளது.


மத்திய ஆளும் கட்சியாக இருக்கக் கூடிய தேசிய கட்சியான பாஜக.,வின் மாநில தலைவராக இருக்கக் கூடிய நயினார் நாகேந்திரன், மத்திய உள்துறை அமைச்சரை மேடையில் வைத்துக் கொண்டு இப்படி பகிரங்கமாக செந்தில் பாலாஜியின் பெயரை சொல்லி குற்றம்சாட்டி உள்ளது மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அமித்ஷா, நயினார் நாகேந்திரன் இருவர் பேசியதுமே திமுக.,விற்கு வெளிப்படையாக விடுக்கப்பட்ட எச்சரிக்கை என்றே பார்க்கப்படுகிறது. திமுக.,விற்கு எச்சரிக்கை விடுத்து, கலக்கத்தை ஏற்படுத்துவதற்காக அமித்ஷா தமிழகம் வந்திருப்பாரோ என்று கூட அரசியல் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது