அரசியல் ஆலோசகர் பிரஷாத் கிஷோர் விலகலுக்கு.. விஜய்யின் அதிரடி அறிவிப்பே காரணமா?

Su.tha Arivalagan
Jul 05, 2025,05:40 PM IST

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின்  ஆலோசகர் பொறுப்பிலிருந்து பிரபல அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் தற்காலிகமாக விலகுவதாக அறிவித்திருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 


பிரஷாந்த் கிஷோர் விலகலையும், நேற்று தவெக செயற்குழுக் கூட்டத்தில் பாஜகவடன் கூட்டணி கிடையாது என்று அதிரடியாக விஜய் அறிவித்த அறிவிப்பையும் இணைத்து பலர் பேசி வருகின்றனர்.


பீகாரைச் சேர்ந்தவர் பிரசாந்த் கிஷோர். பிரதமர் மோடி முதல் பல்வேறு தலைவர்களுக்கும், கட்சிகளுக்கும் அவர் அரசியல் உத்தி வகுப்பு ஆலோசகராக இருந்துள்ளார். தற்போது தனியாக ஜன் சுராஜ் என்ற கட்சியையும் நடத்தி வருகிறார். பீகார் சட்டமன்றத் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். 




"ஜன் சுராஜ்" என்ற பெயரில் அவர் தொடங்கியுள்ள அரசியல் கட்சியின் சார்பில் பீகாரில் இடைத்தேர்தல்களில் பிரச்சாரம் செய்து வருகிறார். தனது சொந்த மாநில அரசியல் பணிகளில் கவனம் செலுத்த வேண்டியிருப்பதால் தவெக-வின் ஆலோசகராக செயல்பட முடியவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். நவம்பர் மாதத்திற்குப் பிறகு விஜயின் சிறப்பு ஆலோசகராக செயல்படுவது குறித்து முடிவெடுப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்.


இவரது தவெக வருகையும் தற்போது தற்காலிகமாக பிரிவதாக அறிவித்திருப்பதும் பேசு பொருளாகியுள்ளது. தவெக-வின் தேர்தல் பிரிவு பொதுச் செயலாளரான ஆதவ் அர்ஜுனாவின் தலையீடு தவெகவுக்குள் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. ஆதவ் அர்ஜுனா தனது நெருக்கமான நபர்களை கட்சியின் முக்கிய பதவிகளில் நியமித்து வருவதாகவும், அவரது குழுவின் ஆலோசனைகளுக்கே கட்சிக்குள் முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. 


இதனால், பிரசாந்த் கிஷோரின் குழுவின் ஆலோசனைகள் கட்சிக்குள் ஏற்கப்படாத நிலை உருவாகியுள்ளதால் அவர் அதிருப்தியில் இருந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. பிரசாந்த் கிஷோரின் "சிம்பிள் சென்ஸ் அனலிட்டிக்ஸ்" நிறுவனத்தின் சுமார் 30-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் சமீபத்தில் விலகி ஆதவ் அர்ஜுனாவின் "வாய்ஸ் ஆஃப் காமன்ஸ்" நிறுவனத்திற்கு மாறியுள்ளதாகவும் கூறப்படுகிறது.


தவெக 2026 சட்டமன்றத் தேர்தலை தனித்துப் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக பிரசாந்த் கிஷோர் முன்னர் தெரிவித்திருந்தார். இருப்பினும், அதிமுக உள்ளிட்ட சில கட்சிகள் தவெக-வுடன் கூட்டணி அமைக்க ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்பட்டது. இதில் பிரஷாந்த் கிஷோருக்கு முரண்பாடு ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த கூட்டணி குறித்த முடிவுகள் மற்றும் பிரசாந்த் கிஷோரின் "தனித்து போட்டி" என்ற நிலைப்பாட்டிற்கும் இடையே உள்ள வேறுபாடுகளும் அவரது விலகலுக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது.


விலகிச் சென்றுள்ள பிரஷாந்த் கிஷோர் மீண்டும் வருவாரா அல்லது அவர் இல்லாமலேயே தவெக தேர்தலை சந்திக்கப் போகிறதா என்று தெரியவில்லை.