வாழ்க்கை என்றால் என்ன.. அதை அழகாக வாழ்வது எப்படி?
- வே.தங்கப்பிரியா
பொதுவாக ஒருவர் வாழ்க்கையை தனக்காக மட்டுமே வாழ வேண்டும். எப்போது நாம் மற்றவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வாழ ஆரம்பிக்கிறோமோ அப்போதே நம் வாழ்க்கையை தொலைத்து விட்டோம் என்று அர்த்தம். நம் வாழ்க்கையில் வரும் ஒவ்வொரு நொடியையும் ரசித்து வாழ வேண்டும். நம் மனசாட்சி போல் சரியான பாதையை தேர்ந்தெடுத்து வாழ்ந்தால் மட்டுமே மகிழ்ச்சியாக வாழலாம்.
குழந்தை பருவத்தில் நம் வாழ்வை எதிர்கொள்வது என்பது எளிது. அந்த குழந்தையின் மகிழ்ச்சிக்கு கண்டிப்பாக அதன் தாய், தந்தை என்பது மிகவும் அவசியமான உறவாகும்.
மாணவப் பருவம் என்பது நாம் சரியாக இருக்கும் வரை மகிழ்ச்சியாக வாழலாம். ஒரு மாணவன் (அ) மாணவி நேர்மையாக வாழ வேண்டும். எந்த ஒரு சூழ்நிலை வந்தாலும் உண்மையை மட்டுமே பேச வேண்டும். கல்வி கற்பது என்பது இந்த பருவத்தின் முன்னேற்ற வழியாகும்.
ஒருவர் வாழ்வில் அவர்கள் வாழ்க்கையை மாற்றப் போகும் முக்கியமான பருவம் இது.இதில் ஆணோ (அ) பெண்ணோ ஒருவரை ஒருவர் கண்டிப்பாக புரிந்து கொண்டு மணம் முடிக்க வேண்டும். அப்படி புரிந்து கொள்ளாமல் மணம் முடித்தால் நாம் ஏன் வாழ்கிறோம்? எதற்காக வாழ்கிறோம்? என்பதே புரியாமல் போய்விடும். எனக்கு பிடித்த ஒருவரை திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கையே சொர்க்கமாக மாறிவிடும்.
வயது முதிரும்போது வாழ்க்கையின் போக்கு முற்றிலும் திசை மாறும். இதை எதிர்பார்த்து நாமும் அதன் போக்கில் போக முனைய வேண்டும். இல்லாவிட்டால் தடுமாற்றமே மிஞ்சி நிற்கும். இந்தப் பருவத்தில் மிகவும் முக்கியமானது நோயின்றி வாழ்வது ஆகும்.
"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்"
செல்வம் குறைவாக இருந்தால் கூட நாம் நிம்மதியாக வாழ்ந்து விடலாம். நோய் வந்துவிட்டால் நம் வாழ்வின் மீது நமக்கு இருக்கும் ரசனை குறைந்துவிடும். மருந்தில்லா வாழ்விற்கு இயற்கையான உணவு, ஆழ்ந்த உறக்கம், சுயநலமற்ற தூய்மையான மனம் இவை இருந்தால் இந்தப் பருவத்தில் மகிழ்ச்சியாக வாழலாம்.
கடைசிக்காலம்.. இந்த பருவம் நம் வாழ்வில் நாம் வாழ்ந்ததற்கான அடையாளத்தை கொடுக்கும். அதாவது நாம் பூமியை விட்டு பிரியும் காலம். நம் வாழ்க்கையை முழுமையாக மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டு மரணம் என்ற ஒன்று வரும்போது அதையும் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் நம்மிடம் இருக்கும்.
"வாழ்க்கை என்பது தேர்வு போல இதில் நாம் முழு மகிழ்ச்சியுடன் வாழ்வதே சதம் குறைந்த மகிழ்ச்சியுடன் வாழ்ந்தால் தேர்ச்சி பெறவில்லை மற்றவர்களின் எண்ணம் போல் நாம் வாழ்ந்தால் தேர்வில் பூஜ்ஜியம் என்ற ஒரு மதிப்பே இல்லாத மதிப்பெண் பெற்றது போல வாழ்கிறோம் என்று அர்த்தம்".
"நாம் வாழும் இந்த நொடியை நாம் நினைத்தது போல மகிழ்ச்சியாக வாழ வேண்டும்".
(வே. தங்கப்பிரியா, விருதுநகர் மாவட்டம் கல்லூரணியைச் சேர்ந்தவர். கதை, கவிதைகள், கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் கொண்ட இளம் எழுத்தாளர், தென் தமிழில் தொடர்ந்து எழுதும் இளம் படைப்பாளர்)