செங்கோட்டையன் நீக்கம்.. எடப்பாடி பழனிச்சாமியின் அதிரடியால் பரபரப்பு.. அடுத்து என்ன நடக்கும்?
சென்னை : அதிமுக.,வில் இருந்து விலகியவர்கள் மீண்டும் ஒன்று சேர வேண்டும். அப்படி அவர்கள் ஒன்று சேர்ப்பதற்கான வேலைகளை 10 நாட்களுக்குள் எடப்பாடி பழனிச்சாமி செய்ய வேண்டும் என அதிமுக தலைமைக்கு கெடு விதித்து நேற்று பேட்டி கொடுத்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்.
செங்கோட்டையனின் கருத்திற்கு கூட்டணி கட்சி தலைவர்களும் ஆதரவு தெரிவித்தனர். இதனால் அடுத்து இபிஎஸ் என்ன செய்ய போகிறார் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் ரியாக்ஷன் ஏதும் காட்டாமல் அதிரடி ஆக்ஷன் காட்டி உள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. திண்டுக்கல்லில் இன்று காலை கட்சியின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார் எடப்பாடி பழனிச்சாமி. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, கட்சி தலைமை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் அதிமுக.,வின் அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் செங்கோட்டையனும், அவரது ஆதரவாளர்களும் நீக்கப்படுவதாக அறிவித்துள்ளது.
கட்சி தலைமை தன்னுடைய பொறுப்புக்களை பறித்ததில் எந்த விதமான வருத்தமும் கிடையாது என தெரிவித்துள்ளார் செங்கோட்டையன். கெடுவான் கேடு நினைப்பார். கட்சியில் இருந்து நீக்கியதால் செங்கோட்டையனுக்கு பின்னடைவு கிடையாது, நீக்கியவர்களுக்குத்தான் அது பின்னடைவு. இதை காலம் உணர்த்தும் என அமமுக தலைவர் டிடிவி தினகரனும் பேட்டி அளித்துள்ளார்.
ஏற்கனவே அதிமுக.,வில் இருந்து ஓபிஎஸ், அன்வர் ராஜா உள்ளிட்ட பலர் வெளியேறி விட்டார்கள். அதிமுக-பாஜக கூட்டணியில் இருந்து அமமுக வெளியேறுவதாக அறிவித்து விட்டது. தேமுதிக, பாமக.,வும் கிட்டதட்ட அந்த நிலைப்பாட்டில் தான் இருக்கின்றன. இருந்தாலும் கூட்டணி குறித்து டிசம்பரில் அறிவிப்பதாக தேமுதிக.,வை தொடர்ந்து அமமுக.,வும் தெரிவித்துள்ளது.
கட்சி ஒன்று சேர வேண்டும் என சொன்னதற்காக செங்கோட்டையனை கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கி உள்ளது அதிமுக தலைமை என அக்கட்சிக்கு எதிரான ஒரு தோற்றத்தையே இது உருவாக்கி உள்ளது. செங்கோட்டையன்-எடப்பாடி பழனிச்சாமி இடையேயான உரசலுக்கு அடிப்படை காரணம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் செங்கோட்டையன் கைகாட்டியவருக்கு கட்சியில் பொறுப்பு தர தலைமை மறுத்து விட்டது தான் என சொல்லப்படுகிறது. இது படிப்படியாக வளர்ந்து தான் கட்சி தலைமைக்கு எதிராக பேட்டி அளிக்கும் நிலைக்கு செங்கோட்டையன் வர காணமாக இருந்துள்ளது.
தற்போது செங்கோட்டையன் மறைமுகமாக வலியுறுத்துவது ஓபிஎஸ்.,ஐ கட்சியில் மீண்டும் சேர்க்க வேண்டும் என்பதைத் தான். கட்சியின் சின்னத்தை முடக்கவும், பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டதையும் எதிர்த்து வழக்கு தொடுத்தது, இபிஎஸ் அரசுக்கு எதிராக திமுக சட்டசபையில் கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்கு அளித்தது என கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் செயல்பட்டதாக ஓபிஎஸ்.,ஐ சேர்த்துக் கொள்ள முடியாது என்ற நிலைப்பாட்டில் இருக்கிறார் இபிஎஸ். தற்போது செங்கோட்டையனை அழைத்து, சமரசம் பேசினால், கட்சியில் இருக்கும் மற்றவர்களும் இது போல் தலைமைக்கு எதிராக பேச துவங்கி விட்டால் தேர்தல் நேரத்தில் கட்சிக்கு அது பின்னடைவை ஏற்படுத்தும் என்பதற்காக தான் செங்கோட்டையன் கட்சிப் பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இனி அடுத்து என்னவெல்லாம் நடக்கும் என்ற கவலை அதிமுகவினர் மத்தியில் எழுந்துள்ளது. செங்கோட்டையன், சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோர் ஒன்று சேர்ந்து கை கோர்த்துத் தனி அணியாக செயல்படுவார்களா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் அவர்கள் பக்கம் செல்வார்கள் என்பது சந்தேகம் தான். அதே போல், அமமுக வேண்டுமா, வேண்டாமா என்பதை அதிமுக, பாஜக தான் முடிவு செய்ய வேண்டும் என்றும், எடப்பாடி பழனிச்சாமியை அண்ணன் என்றும் டிடிவி தினகரன் கூறி இருப்பதால் இவர்களை சமாதானப்படுத்தி, மீண்டும் கூட்டணியில் இணைக்க பாஜக முயற்சி செய்ய வாய்ப்புள்ளது. காரணம், அதிமுக உட்கட்சி பூசல் பூதாகரமானால் அது தேர்தலில் திமுக.,வின் வெற்றியை எளிதாக்கி விடும் என பாஜக.,விற்கு நன்கு தெரியும்.