Whatsapp Groups: வாட்ஸ்அப் ஃபேமிலி குரூப் அட்டகாசங்கள்.. ஒரு 'நோ எக்சிட்' காமெடி த்ரில்லர்!
life
mental health
நம்ம ஊர்ல எல்லாரோட வாட்ஸ்அப்லயும் ஒரு 'ஃபேமிலி குரூப்' கண்டிப்பா இருக்கும். அது குரூப் இல்லைங்க... நம்ம பொறுமையை சோதிக்க பஞ்சாயத்து போர்டு அமைச்ச மாதிரி ஒரு இடம்! அதுல நடக்குற அட்ராசிட்டிகளை பத்தி யோசிச்சாலே அல்லு விட்ரும்.
நம்ம 2K கிட்ஸ் அதிகாலை 5 மணிக்குத் தான் தூங்கவே போவாங்க. ஆனா, அதே 5 மணிக்கு ஃபேமிலி குரூப்ல கிளிங் கிளிங் என்று நோட்டிஃபிகேஷன் அலறும். எடுத்துப் பார்த்தா... பனித்துளியோடு இருக்கிற ஏதோ ஒரு ரோஜாப் பூ படம், அதுக்கு மேல மஞ்சள் கலர்ல "இனிய காலை வணக்கம்! இந்த நாள் இனிதாக அமையட்டும்.. வாழ்க வளமுடன்!" அப்படின்னு மின்னும்.
ஒரு நாளா, ரெண்டு நாளா... வருஷக் கணக்கா அதே பூ, அதே விஷ்! இதைப் பார்க்குறப்பவே, "ஏன் பெரியம்மா... இன்னும் சூரியனே வரல, அதுக்குள்ள பூவை எங்கிருந்து புடிச்சீங்க?" அப்படின்னு கேட்கத் தோன்றும்.
அடுத்து வர்றது தான் அல்டிமேட் காமெடி! "இரவில் வெங்காயத்தை தலையணைக்கு அடியில் வைத்தால் அணுசக்தி கதிர்வீச்சு குறையும்" அப்படிங்குற மாதிரி "வாட்ஸ்அப் பல்கலைக்கழக விஞ்ஞானத் தகவல்கள்" வெள்ளமாய் பாயும்.
யாரோ ஒருத்தர் சும்மா டைப் பண்ணி அனுப்புனதை, நம்ம சித்தப்பாக்கள், பெரியப்பாக்கள், மாமாக்கள், தாத்தாக்கள் உண்மையான 'அறிவியல் ஆராய்ச்சி' ரேஞ்சுக்கு நம்பி, "அனைவரும் தவறாமல் பின்பற்றவும்" அப்படின்னு ஒரு கட்டளையோடு பார்வேர்ட் பண்ணுவாங்க.
அத்தோடு நிற்காமல், உண்மையான தமிழனாக இருந்தால் பத்து பேருக்கு ஷேர் செய்யுங்கள் என்றும் உரிமையோடு சொல்லிச் செல்வார்கள்.
இந்த குரூப் அட்மின் பெரியப்பாக்கள் இருக்காங்களே... அடடடா.. அவங்கதான் அந்த குரூப்போட அன்-அஃபிஷியல் ஹிட்லர்.
யாருக்காவது ஹேப்பி பர்த்டே சொன்னா, எல்லாரும் வரிசையா 50 'Wish you many more happy returns of the day' அனுப்பணும். தப்பாம மெசேஜை 'Seen' பண்ணனும் (படிக்கலனா அடுத்த முறை நேர்ல பார்க்கும்போது பஞ்சாயத்து கூட்டுவாங்க!). "நான் மெசேஜ் அனுப்புனா பாக்கக் கூட மாட்டேங்குற.. துரை அவ்வளவு பிசியோ" என்று நக்கல் நையாண்டியுடன் வச்சு செய்வார்கள்.
இவங்களோட இந்த பெரிய மெசேஜ்களுக்குப் பதிலா 2K கிட்ஸ் என்ன பண்ணுவாங்க? அவங்களுக்கு டைப் பண்ணக்கூட சோம்பேறித்தனம்.. ஆனாலும் பதில் போட்டாகணுமே.. என்ன செய்வது.. அவங்க கைல இருக்கிற ஆயுதத்தை எடுத்து பதிலடி கொடுப்பார்கள்.
குரூப்பில் உள்ள ஏதாவது ஒரு பெரியப்பா அல்லது சித்தப்பா, ஒரு நீளமான தத்துவ மெசேஜை கஷ்டப்பட்டு தம் கட்டி போட்டு அனுப்புவாரு. அதுக்கு நம்ம 2K கிட் உடனே...
வடிவேலு அமைதியா தலையாட்டுற மாதிரி ஒரு GIF, அப்படி இல்லைனா, ஒரு Thumbs Up Emoji, ரொம்ப கடுப்பானா, Ok mama, perippa, chitappu" அப்படின்னு ஒரு ஒற்றை வார்த்தை!
அதைப்பார்த்து அட்மின் பெரியப்பா, "இப்பொழுதெல்லாம் சின்னப் பசங்களுக்கு மரியாதையே இல்ல"* அப்படின்னு புலம்ப ஆரம்பிச்சிடுவாரு.
பேமிலி குரூப்பில் பாலிட்டிக்ஸும் பல்லைக் காட்டும்.. ஆளுக்கு ஒரு கட்சியில் இருப்பாங்கள். ஏதாவது ஒரு வாந்தி வதந்தியைத் தூக்கிக் கொண்டு வந்து குரூப்பில் போட்டு கலகத்தை ஏற்படுத்தி விடுவார்கள். அந்த அக்கப்போரும் இருக்கும்.
இந்த குரூப்ல இருந்து யாரும் 'Left' ஆகவும் முடியாது .. மெசேஜை 'Read' பண்ணாம இருக்கவும் முடியாது. லெப்ட் ஆனா, யாராச்சும் ஒருத்தர் திரும்பக் கொண்டு சேர்த்து விட்டுருவாங்க.
என்னதான் இவங்களோட அட்ராசிட்டி தாங்க முடியலனாலும், தூரத்துல இருக்கிற சொந்தங்களை ஒரே இடத்துல வச்சிருக்கிறதும், அப்பப்போ நாம கலாய்க்க ஒரு ஸ்பாட் தருவதும் இந்த ஃபேமிலி குரூப் தான். அதனால, இந்த குரூப்பில் "நோட்டிஃபிகேஷனை 'Mute' பண்ணி வைப்போம்... வாழ்க்கையை ஜாலியா நகர்த்துவோம்!"