பேஷனை நம்பி நடந்த கால்கள்.. இன்று வெற்றியின் நம்பிக்கையான அதிசயம்!

Su.tha Arivalagan
Apr 08, 2026,12:53 PM IST

- தெ.நாராயண லெட்சுமி, B.E


வாழ்க்கை எல்லோருக்கும் ஒரே மாதிரி பாதையை கொடுக்காது. சில நேரங்களில் நாம் விரும்பாத வழியிலும் நடக்க வேண்டிய சூழ்நிலைகள் வரும். ஆனால் மனதில் இருக்கும் கனவை விடாமல் பிடித்து வைத்துக் கொண்டால், ஒருநாள் அது நிச்சயமாக வெற்றியாக மாறும். என் தம்பியின் வாழ்க்கை அதற்கே ஒரு அழகான உதாரணம்.


பள்ளி வாழ்க்கையை முதலில் ஆங்கில வழியில் தொடங்கிய அவன், சில சூழ்நிலைகளால் பின்னர் தமிழ் வழிக்குப் மாற வேண்டியதாகியது. அதனால் ஆங்கிலத்தில் கொஞ்சம் சிரமம் இருந்தாலும், மனம் உடையாமல் தனது படிப்பை தொடர்ந்து முடித்தான். குடும்பத்தின் விருப்பப்படி கல்லூரியில் ஏரோநாட்டிக்கல் துறையை தேர்வு செய்தான். அந்த துறையில் அவனுக்கு அதிக ஆர்வம் இல்லாவிட்டாலும், பெற்றோரின் ஆசையை மதித்து படிப்பை முடித்தான்.


படிப்பு முடிந்த பிறகு அந்த துறையில் வேலை கிடைக்க பல முயற்சிகள் செய்தான். ஆனால் அவன் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அந்த நேரத்தில் அவன் மனதில் இருந்த உண்மையான விருப்பம் ஒன்றுதான் — ஜிம் மற்றும் உடற்பயிற்சி.




அதை ஒரு பொழுதுபோக்காக மட்டும் பார்க்காமல், தனது வாழ்க்கை பாதையாக மாற்றிக்கொண்டான். தினமும் ஜிம்மில் உழைத்து, முதலில் ஜிம் மாஸ்டராக தனது பயணத்தை தொடங்கினான். அந்த நேரத்தில் அவன் காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொண்டு தனது வாழ்க்கையை அழகாக அமைத்துக் கொண்டான்.


அவன் விடாமுயற்சியும் ஆர்வமும் இன்று பெரிய வெற்றியாக மாறியுள்ளது. இன்று அவன் இரண்டு ஜிம்முகளின் உரிமையாளராக வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறான். அதோடு ஒரு பாக்ஸிங் இன்ஸ்டிட்யூட்டையும் நடத்தி வருகிறான். இன்னும் ஒரு புதிய ஜிம்மைத் தொடங்கும் முயற்சியிலும் இருக்கிறான்.


இந்த வெற்றி அவனுக்கு எளிதாக கிடைத்தது அல்ல. அவன் தனது பேஷனை நம்பியதால் கிடைத்த வெற்றி இது.


எனக்கு வாழ்க்கையில் எந்த ஒரு பிரச்சினை வந்தாலும், எங்கள் அப்பாவை போல் என்னை புரிந்து கொண்டு துணையாக நிற்பவன் என் தம்பிதான். சில உறவுகள் ரத்த உறவாக மட்டும் இல்லாமல், மனதின் பலமாகவும் இருக்கும். எனக்கு அப்படிப்பட்ட பலம் என் தம்பி.


அந்த அன்பும் உறவும் இப்படியே வாழ்க்கையின் கடைசி வரை தொடர வேண்டும் என்பதே என் மனமார்ந்த ஆசை.


என் அன்புத் தம்பிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! நீ இன்னும் உயரம் ஏறி, இன்னும் பல கனவுகளை நனவாக்க வேண்டும். உன் வாழ்க்கை வெற்றி கதையாக இன்னும் பலருக்கு ஊக்கமாக மாறட்டும்.


பேஷனை பின்தொடர்ந்தால் வெற்றி நிச்சயம் – பிறந்தநாள் நல் வாழ்த்துகள் என் உடன் பிறப்பே


(தெ. நாராயணலட்சுமி, ஐக்கிய அரபு அமீரகத்தின் ராஸ் அல் கைமாவில் வசித்து வருகிறார்)