Tamil Nadu Assembly Elections 2026: "ஹீரோ"வை எப்போது களம் இறக்கப் போகிறது திமுக?

Su.tha Arivalagan
Mar 11, 2026,11:33 AM IST

சென்னை: திமுகவின் தேர்தல் அறிக்கையை கதாநாயகன் என்று சொல்வார் மறைந்த கலைஞர் கருணாநிதி. அந்த அளவுக்கு திமுக தேர்தல் பலராலும் எதிர்பார்க்கப்படும். இந்தத் தேர்தலிலும் திமுகவின் தேர்தல் அறிக்கையை பலரும் எதிர்பார்த்துள்ளனர். அதில் என்னென்ன சர்ப்ரைஸ் இருக்கும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.


தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. ஒவ்வொரு கட்சியும் தங்கள் வியூகங்களை வகுத்து வரும் நிலையில், ஆளுங்கட்சியான திமுகவின் தேர்தல் அறிக்கை எப்போது வெளியாகும் என்பதே இப்போதைய ஹாட் டாபிக்.


பொதுவாக, தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட பிறகே பிரதான கட்சிகள் தங்கள் வாக்குறுதிகளை வெளியிடுவது வழக்கம். திமுக தரப்பில் தேர்தல் அறிக்கைப் பணிகள் தீவரமாக நடந்து வருகின்றன. இதற்காக கனிமொழி கருணாநிதி தலைமையில் குழு அமைக்கப்பட்டு ஆலோசனைகளும் பெறப்பட்டுள்ளன. தற்போது தேர்தல் அறிக்கையை இறுதி செய்யும் பணி நடந்து வருவதாக தெரிகிறது.




கடந்த தேர்தலைப் போலவே, இந்த முறையும் தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாகச் சென்று மக்களின் தேவைகளைக் கேட்டறிந்த பிறகே அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது.  தேர்தல் அறிக்கையில் மக்களைக் கவரும் வகையிலான  பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


குறிப்பாக, ஏற்கனவே நடைமுறையில் உள்ள மகளிர் உரிமைத் தொகை, காலை உணவுத் திட்டம் போன்றவற்றின் அடுத்தகட்ட அறிவிப்புகள் இதில் இடம்பெற வாய்ப்புள்ளது. வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவோர் நலன் சார்ந்த புதிய வாக்குறுதிகள் இந்த முறை அதிக கவனம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் திமுகவின் தேர்தல் அறிக்கை பிரம்மாண்டமான முறையில் வெளியிடப்பட வாய்ப்புள்ளது. இந்த முறை வாக்குறுதிகளை மிகக் கவனமாக கொடுக்க திமுக தீர்மானித்துள்ளதாம். ஒவ்வொரு வாக்குறுதியையும் நிதிநிலை அறிக்கைக்கு ஏற்பச் செயல்படுத்த முடியுமா என ஆய்வு செய்த பிறகே இறுதி செய்யும் எனத் தெரிகிறது. கடந்த முறை அளித்த வாக்குறுதிகளில் சிலவற்றை திமுக நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்ததால் இந்த முறை செயல்படுத்த முடிபவற்றை மட்டுமே சொல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.