8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?

Su.tha Arivalagan
Jan 24, 2026,02:14 PM IST

சென்னை: மறைந்த தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் அக்கட்சியை ஆரம்பித்த பின்னர் சந்தித்த முதல் தேர்தல் 2006 சட்டசபைத் தேர்தல். அத்தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட தேமுதிக ஒரு இடத்தில் மட்டும் வென்று, 8.33 சதவீத வாக்குகளைப் பெற்றது. ஆனால் இன்று அக்கட்சியைத் தேடிப் பார்க்கும் நிலையில்தான் உள்ளது. ஆனாலும் கூட்டணியில் சேர  கட்சித் தலைவர் பிரேமலதா விஜயகாந்த் கடினமான நிபந்தனைகளை விதிப்பதாக கூறுகிறார்கள்.


பிரேமலதா விஜயகாந்த் பிடிவாதமாக இருப்பதால்தான் அவரது கட்சியுடன் கூட்டணி அமைவதில் சிக்கல் நீடிப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.


விஜயகாந்த் கட்சி ஆரம்பித்து சொன்ன முதல் அறிவிப்பே மக்களுடன் மட்டுமே கூட்டணி. வேறு யாருடனும் கூட்டணி அமைக்க மாட்டேன் என்றுதான் சொன்னார். சொன்னபடியே முதல் இரு தேர்தல்களையும் கூட்டணியே இல்லாமல்தான் சந்தித்தார். அதாவது 2006 சட்டசபைத் தேர்தல், 2009 நாடாளுமன்றத் தேர்தல், ஆகிய இரு தேர்தல்களிலும் கூட்டணியே இல்லாமல் தனித்தே போட்டியிட்டார் விஜயகாந்த். இதில் 2006 தேர்தலில் அக்கட்சிக்கு 8.33 சதவீத வாக்குகள் கிடைத்தன. மாநிலக் கட்சியாகவும் தேமுதிக அங்கீகாரம் பெற்று அசத்தியது. 2009 தேர்தலில் 0.75 சதவீத வாக்குகளை தேமுதிக பெற்றது.




அந்த இரு தேர்தல்களிலும் தேமுதிக பெருவாரியான திமுக மற்றும் அதிமுக வாக்குகளைப் பிரித்ததால் இரு கட்சிகளும் விஜயகாந்த்தை மடக்க முயற்சிகளில் இறங்கின. முதலில் இதற்கு மசியாமல்தான் இருந்தார் விஜயகாந்த். ஆனால் இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை.. கூட்டணி முடிவுக்கு விஜயகாந்த்தும் சம்மதித்தார். இரு தரப்புடனும் தேமுதிக பேசியது. இதனால்தான் பழம் நழுவி வருகிறது. விரைவில் பாலில் விழும் என்று மறைந்த திமுக தலைவர் கலைஞரும் கூட செய்தியாளர்களிடம் கூறியிருந்தார். 


ஆனால் தேமுதிக அதிமுக பக்கம் போக முடிவெடுத்து விட்டது. 2011 சட்டசபைத் தேர்தலில் அதிமுக தேமுதிக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தேமுதிகவுக்கு 29 சட்டசபைத் தொகுதிகளில் வெற்றி கிடைத்தன. எதிர்க்கட்சித் தலைவரானார் விஜயகாந்த். திமுக 3வது இடத்தையே பெற்றது. ஆனால் அதன் பிறகுதான் விஜயகாந்த்தின் சரிவு தொடங்கியது. அவரது செயல்பாடுகள் மற்றும் அதிமுகவுடன் ஏற்பட்ட மோதல் ஆகியவை அவரையும் அவரது கட்சியையும் பலவீனப்படுத்த ஆரம்பித்தன. 


அதைத் தொடர்ந்து வந்த எந்தத் தேர்தலிலும் தேமுதிகவுக்கு வெற்றி கிடைக்கவில்லை. அதாவது ஒரு இடத்தில் கூட தேமுதிகவால் வெல்ல முடியாமல் போய் விட்டது. விஜயகாந்த் தலைமையில் மொத்தம் 7 தேர்தல்களை (சட்டசபை மற்றும் நாடாளுமன்றம்) தேமுதிக சந்தித்தது. அதில் முதல் இரு தேர்தல்களில் வாக்குகளை மட்டுமே பிரித்தது. மற்ற 5 தேர்தல்களில் 2011 மட்டுமே லாபகரமாக அமைந்தது. மற்ற 4 தேர்தல்களும் படு தோல்வியே கிடைத்தது.


8.33 சதவீத வாக்குகளுடன் தொடங்கிய தேமுதிகவின் வரலாறு இன்று, 0.17 சதவீதம் என்ற அளவில் வந்து நிற்கிறது. இது 2024 லோக்சபா தேர்தலில் அக்கட்சிக்கு கிடைத்த வாக்குகள் ஆகும். இதுதான் தேமுதிகவின் தற்போதைய பலம். இந்த நிலையில்தான் வருகிற சட்டசபைத் தேர்தலை விஜயகாந்த் இல்லாத நிலையில் சந்திக்கப் போகிறது தேமுதிக. யாருடன் கூட்டணி என்பதில்தான் அக்கட்சி தொடர்ந்து தடுமாறிக் கொண்டுள்ளது.


திமுக தரப்பிலும், அதிமுக தரப்பிலும் தேமுதிக பேசி வருவதாக சொல்கிறார்கள். இருவரிடமும் தங்களது கோரிக்கையை தெளிவாக வைத்து விட்டதாம் தேமுதிக. கண்டிப்பாக ஒரு ராஜ்யசபா சீட் தேவை. மேலும் சட்டசபைத் தேர்தலுக்கு இத்தனை சீட் தேவை என்று தேமுதிக தெரிவித்துள்ளதாம். ராஜ்யசபா சீட் பிரச்சினை கிடையாது.. ஆனால் சட்டசபை சீட்டுகள்தான் அதிகமாக இருப்பதாக இரு தரப்புமே தயங்குவதாக சொல்லப்படுகிறது.


இவ்வளவு சீட் கொடுக்கும் அளவுக்கு உங்களுக்கு வாக்கு வங்கி இல்லையே என்று தேமுதிக தரப்புக்கு சொல்லப்பட்டுள்ளதாம். ஆனால் அதை பிரேமலதா ஏற்க மறுப்பதாக சொல்கிறார்கள். தமிழ்நாடு முழுவதும் தேமுதிகவுக்கு நிலையான ஆதரவு வட்டம் உள்ளது. விஜயகாந்த் மரணத்தால் ஏற்பட்டுள்ள அனுதாபமும் தற்போது சேர்ந்துள்ளது என்று தேமுதிக தரப்பில் எடுத்துச் சொல்லப்படுகிறதாம்.


விஜயகாந்த் மீதான அனுதாபம் இருந்திருந்தால், விருதுநகர் தொகுதியில் அவரது மகன் விஜயப் பிரபாகரன் வென்றிருக்க வேண்டுமே என்ற கேள்வி எழுகிறது. இப்படிப் பல குழப்பங்கள் நிலவி வருவதால் தேமுதிக எந்தக் கூட்டணிக்குப் போகும் என்ற கேள்வியும் பதில் இல்லாமல் நீண்டு வருகிறது. ஆனால் விரைவில் இதுதொடர்பான முடிவு தெரிய வரும் என்று சொல்லப்படுகிறது.


தேமுதிக எனது பிள்ளை.. அதை எங்கு கட்டிக் கொடுக்க வேண்டும் என்று எனக்கு நன்றாகவே தெரியும் என்று பிரேமலதா விஜயகாந்த்  கூறியுள்ளார். அதை வைத்துப் பார்க்கும்போது ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருகின்றன.. விரைவில் முடிவு தெரியும் என்று எதிர்பார்க்கலாம்.