நாகரீகம் எங்கே செல்கிறது?
- க. யாஸ்மின் சிராஜூதீன்
ஒழுக்கம் மனித இனத்தின் அனைத்து செயல்களுக்கும் அடிப்படை என்பது அனைவரும் அறிந்ததே... தொடக்கப்பள்ளியில் கால் வைக்கும் பிஞ்சு மனதில் முதலில் பதிவதும் இதுவே.
நம் தமிழர் பண்பாட்டின் ஆணிவேராக இருப்பதும் இதுவே... இன்று காதலர் தினம் கொண்டாடுகிறோம்.. தினங்கள் பல கொண்டாடப் பட்டாலும் காதலர் தினம் இளசுகளின் இதயப் பூர்வமான தினமாக உள்ளது.. பழங்கால மனிதன் ஆடை தயாரிப்பு இல்லாத காலங்களில் இலை தழைகளை வைத்து ஆடையாக உடுத்திக்கொண்டான். இன்றோ நாகரீகம் என்ற பெயரில் நகரங்களில் பெண்கள் அணியும் ஆடைகள் அரைகுறையாகவே உள்ளது.. பார்ப்பதற்கே மனம் வரவில்லை. மனம் வலிக்கிறது. ஏன் இந்த நிலை என்று..
தொன்றுதொட்டு அக்காலம் முதல் காதல் உலகில் வலம் வருகிறது. அன்று காவியக் காதல். இன்றோ நாகரீகக்காதல். நாம் அனைவரும் பார்க்க முடிகிறது. பொது இடங்களில், பேருந்துகளில், யார் இருந்தால் நமக்கென்ன என்ற மனோபாவத்தில் அவர்கள் செய்யும் காதல் சேட்டைகள் .. அவர்களின் பெற்றோர்கள் எவ்வளவு நம்பிக்கையில் படிக்கவும் வேலை பார்க்கவும் அனுப்பி உள்ளார்கள் அதை தவறாக பயன்படுத்துவது தகுமா ...
இதையெல்லாம் பார்க்கும் போது ஒரு தாயாகவும் ஆசிரியர் ஆகவும் மிகவும் மனவேதனை தான் மிஞ்சுகிறது.. காதலைக் கொண்டாட வேண்டியதுதான்.. சந்தோஷமாகவே கொண்டாடலாம்.. அதற்கான தகுதியையும் வளர்த்துக் கொண்டு, நாகரீகமாக, அந்தக் காதலுக்கே கெளரவம் சேர்க்கும் வகையில், யாரும் முகம் சுளிக்காத வகையில் அந்த காதல் கொண்டாட்டம் இருந்தால் நல்லதுதானே!
சுதந்திரம் என்பது சும்மா ஒன்றும் கிடைத்து விடவில்லை. பல தியாகிகளின் உயிர் மூச்சை இழந்துதான் கிடைத்தது. அனைத்து விதமான சுதந்திரமும் நமக்கு கிடைத்துள்ளது. அதை சிறந்த முறையில் பயன்படுத்தி பயனடையவேண்டாமா.
நாரீகம் நம்மை உயர்ந்த வேண்டும். படுகுழியில் தள்ளிவிடக்கூடாது.. என் அன்பிற்கினிய இளந்தலைமுறைகளே நாட்டின் தூண்களே விழித்திடுங்கள், கலாச்சாரமும் பண்பாடும் நம் உயரியசொத்து. ஒழுக்கம் வாழவைக்கும் உயர் பண்பு உன்னை உயர்த்தும். ஈன்றபொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்டதாய்.
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)