ஓபிஎஸ், தினகரன், செங்கோட்டையன், சசிகலா நால்வர் கூட்டணியால் யாருக்கு பலம்.. யாருக்கு பலவீனம்?
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ளது. இந்த நிலையில், அதிமுகவில் இருந்து பிரிந்த ஓபிஎஸ், தினகரன், செங்கோட்டையன், சசிகலா நால்வர் கூட்டணி சேர்ந்துள்ளனர். இவர்கள் கூட்டணியால் யாருக்கும் பலம்? யாருக்கு பலவீனம்? என்பது குறித்த ஒரு அலசல் பார்வை தான் இது.
அரசியலில் சரியான நேரத்தில் ஒருவர் எடுக்கும் முடிவு தான் அவரது அரசியல் எதிர்காலத்தையே நிர்ணயிக்கும் என்பார்கள். அப்படி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக செங்கோட்டையன் குரல் எழுப்ப வேண்டும் என்றால் கூவத்தூரில் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்க வேண்டும், கட்சியின் பொதுச் செயலாளராக்க வேண்டும் என சசிகலா தரப்பினர் முடிவு எடுத்த போதே எழுப்பி இருக்க வேண்டும்.
அப்போது செய்ய தவறி இருந்தாலும், இபிஎஸ் அணி-ஓபிஎஸ் அணி என அதிமுக இரண்டு அணிகளாக பிளவுபட்டு கிடந்து, உச்சகட்ட மோதல் நடந்து கொண்டிருந்த போது, இப்போது தேர்தல் ஆணையத்திடம் அளித்த இரட்டை இலை தொடர்பான கடிதத்தை செங்கோட்டையன் அன்று அளித்திருந்தால் அதிமுக.,வின் தலையெழுத்தே மாறி இருக்கும். செங்கோட்டையனுக்கு இருக்கும் முக்கியத்துவமும் கூடி இருக்கும். ஆனால் இவை இரண்டையுமே செங்கோட்டையன் காலம் கடந்த பிறகு செய்துள்ளார்.
ஓபிஎஸ், டிடிவி தினகரன் அணியில் செங்கோட்டையன் சென்று சேர்ந்துள்ள நிலையில் ஓபிஎஸ் அணியில் இருந்த எம்எல்ஏ.,வான மனோஜ் பாண்டியன் திமுக.,வில் சென்று இணைந்துள்ளார். அடுத்ததாக மீதமுள்ள மற்றொரு எம்எல்ஏ.,வான வைத்தியலிங்கமும் விரைவில் சென்று திமுக.,வில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் இவர்கள் இருவரும் அதிமுக.,விற்கு திரும்பி வந்தால் அவரை கட்சியில் சேர்த்துக் கொள்ளலாம் என்ற முடிவில் தான் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. செங்கோட்டையனின் வரவால் நால்வர் அணி கலகலத்து தான் போய் உள்ளது.
ஓபிஎஸ், தினகரன், செங்கோட்டையன், சசிகலா இருக்கும் நால்வர் அணிக்கு வேட்பாளர்களை போட்டு, தனியாக சின்னம் வாங்கி, தனியாக கூட்டணி வைத்து தேர்தலில் களம் காணும் அளவிற்கு செல்வாக்கு கிடையாது. ஒரு வேளை தவெக பக்கம் சென்றால், தற்போதுள்ள சூழலில் விஜய் அதை ஏற்பாரா என்பது சந்தேகம் தான். அப்படியே இவர்களை கூட்டணியில் இணைத்தால் யாரால், யார் ஆதாயம் அடைவார்கள் என்பது மிகப் பெரிய கேள்வி தான். அதனால் இவர்கள் தேஜ., கூட்டணியில் இணைந்து, தாமரை சின்னத்தில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகளே அதிகம்.
நவம்பர் 14ம் தேதி பீகார் சட்டசபை தேர்தல் முடிந்து, முடிவுகள் வெளியான பிறகு, தமிழக அரசியல் களத்தில் பாஜக முழுமையாக கவனம் செலுத்த துவங்கும். அப்போது நால்வர் அணியை தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைக்கும் வேலையில் பாஜக மிக தீவிரமாக ஈடுபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.