ரஜினிகாந்த்தை திருப்திப்படுத்தப் போவது யார்.. தலைவர் 173 எதிர்காலம் என்னாகும்?
சென்னை: ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்க கமல்ஹாசன் தயாரிக்கப் போகும் தலைவர் 173 படம் குறித்த குழப்பம் நீடிக்கிறது. அப்படத்தை இயக்கப் போவது யார் என்ற பெரும் சஸ்பென்ஸ் நீடித்து வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து உருவாக்கும் புதிய படம் தலைவர் 173. இப்படத்தின் இயக்குநராக சுந்தர். சி அறிவிக்கப்பட்டார். இதனால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் திடீரென சுந்தர்.சி அதிலிருந்து விலகி விட்டார். இதனால் பெரும் பரபரப்பானது. ரஜினிக்கு கதை பிடிக்கவில்லை என்பதால் சுந்தர்.சி விலகி விட்டதாக தகவல்கள் வெளியாகின.
அடுத்த இயக்குநர் யார் என்று கமல்ஹாசனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, எல்லோரிடமும் கதை கேட்டு வருகிறோம். எங்களது ஹீரோவுக்கு கதை பிடிக்கும் வரை கதை கேட்போம். அது முக்கியம் என்று கூறியிருந்தார். அதன்படி தற்போது பலரிடமும் கதை கேட்கப்பட்டு வருவதாக தெரிகிறது.
இருப்பினும் இதுவரை புதிய இயக்குநர் யார் என்பது தெரியவில்லை. சிலருடைய பெயர்கள் அடிபடுகின்றன. குறிப்பாக இளம் இயக்குநர்கள் இருவரின் பெயர் அடிபடுகிறது. ஆனால் உறுதியாக எதுவும் தெரியவில்லை. மூத்த இயக்குநர்கள் யாருடைய பெயரும் பரிசீலனையில் இருப்பதாக தெரியவில்லை. புதியவர்களைக் கொண்டு இயக்கலாம் என்ற யோசனையில் ரஜினியும், கமலும் இருப்பதாக தெரிகிறது. விரைவில் இதுகுறித்து தெளிவு ஏற்படும்.
ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் 'ஜெயிலர் 2' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் 2026 ஆம் ஆண்டின் மத்தியில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தலைவர் 173 படம், ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு ஒரு பெரிய விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பது என்பது தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. இந்தப் படத்தின் இயக்குநர் யார் என்ற அறிவிப்புக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.