துணை ஜனாதிபதி சொன்ன அந்த "தமிழ் பிரதமர்" யாராக இருக்கும்? - அதிகரிக்கும் சுவாரஸ்யம்!

Su.tha Arivalagan
Nov 01, 2026,08:08 AM IST

சென்னை: தமிழ்நாட்டுக்கு வந்திருந்த துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன், தமிழர் ஒருவர் பிரதராக நிச்சயம் வருவார் என்றார். இதனால் யார் அந்த தமிழர், தமிழகத்தை சேர்ந்த யாருக்கு நாட்டின் பிரதமராக வரும் வாய்ப்பு உள்ளது, யாரை மனதில் வைத்து துணை ஜனாதிபதி இந்த வார்த்தையை சொல்லி இருப்பார் என்ற கேள்வி தமிழக அரசியலிலும், தேசிய அரசியலிலும் எழுந்துள்ளது.


பசும்பொன் முத்துராலிங்க தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவில் கலந்து கொள்வதற்காக துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் நேற்று முன்தினம் தமிழ்நாட்டுக்கு வந்திருந்தார். ஆளுநர் அர்லேகர், பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் சென்று முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார். வழக்கமாக தேவர் குருபூஜை விழாவில் தமிழக அரசியல் தலைவர்கள், முதல்வர், அமைச்சர்கள் ஆகியோர் தான் கலந்து கொள்வார்கள். ஆனால் கவர்னர், துணை ஜனாதிபதி ஆகியோர் கலந்து கொள்வது மிக அரிதான ஒன்று. 


பசும்பொன்னில் மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய துணை ஜனாதிபதி, தமிழர் ஒரு நிச்சயம் நாட்டின் பிரதமராக வருவார். குஜராத்தை சேர்ந்த ஒருவர் பிரதமராகும் போது, தமிழகத்தை சேர்ந்த ஒருவரால் ஏன் முடியாது? என தெரிவித்தார்.  இதையடுத்து இது பேசுபொருளாகியுள்ளது. யாரையாவது மனதில் வைத்து துணை ஜனாதிபதி இப்படிப் பேசினாரா என்ற சுவாரஸ்ய எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.


தமிழர் பிரதமராக வருவார் என்று இந்த நேரத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய அவசியம், காரணம் என்ன என்ற ஆர்வமும் அனைவரிடத்திலும் எழுந்துள்ளது. ஏற்கனவே முதல்வர் விஜய்யை பிரதமர் வேட்பாளர் என தவெக.,வினர் கூறி வரும் நிலையில், துணை ஜனாதிபதி, விஜய்யை மனதில் வைத்து தான் சூசகமாக இப்படி ஒரு கருத்தை தெரிவித்துள்ளாரோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.


துணை ஜனாதிபதி, தமிழர் என குறிப்பிட்டுள்ளதால் அது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். முதல்வர் விஜய்யை மனதில் வைத்து தான் அவர் சொல்லி இருப்பார் என சொல்லி விட முடியாது. பாஜக மாநில தலைவராக இருந்து தற்போது புதிதாக வீ தி லீடர்ஸ் என்ற அமைப்பை துவங்கி உள்ள அண்ணாமலையாக அது இருக்கலாம்.. முன்னாள் ஆளுநரான டாக்டர் தமிழிசை செளந்தரராஜனாக இருக்கலாம்.. அல்லது தமிழ்நாடு பாஜக.,வை சேர்ந்த வேறு யாரோ கூட இருக்கலாம்.. அவ்வளவு ஏன், துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணனே ஒரு தமிழர் என்பதால், அவர் குறிப்பிட்ட அந்த தமிழர் அவராகவே கூட இருக்கலாம்.. யார் கண்டார்கள்!




2029 லோக்சபா தேர்தலிலும் வெற்றி பெற்று, மத்தியில் மீண்டும் ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என பாஜக ஏற்கனவே அதற்கான வேலைகளை துவக்கி, அதில் முனைப்பும் காட்டி வருகிறது. நரேந்திர மோடி தான் பிரதமர் வேட்பாளர் என்பதிலும் அந்த கட்சி உறுதியாக உள்ளது. காரணம் அவர் அளவிற்கு செல்வாக்கு மிகுந்த நபர் தேசிய அளவில் பாஜக.,வில் வேறு யாரும் இல்லை என்பது தான். பிரதமர் மோடி, பாஜகவின் பிராண்ட் மட்டுமல்ல, இந்தியாவின் பிராண்டாகவும் சர்வதேச அளவில் உருவெடுத்து விட்டார்.


அப்படி இருக்கும் போது பிரதமர் பதவியை வேறு ஒருவருக்கோ அல்லது வேறு கட்சியை சேர்ந்த ஒருவருக்கோ பாஜக எப்படி விட்டுக் கொடுக்கும்? என்பது ஒரு முக்கியமான விஷயம். இதனால்தான் சி.பி.ராதாகிருஷ்ணனின் பேட்டி பல்வேறு எதிர்பார்ப்புகளையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது.


தமிழர் ஒருவர் பிரதமர் ஆவார் என்ற துணை ஜனாதிபதியின் கருத்தை வாதத்திற்கு எடுத்துக் கொண்டாலும் கூட, பிரதமர் ஆக வேண்டும் என்றால் அந்த நபருக்கு தமிழகத்தை தாண்டி தேசிய அளவிலும் செல்வாக்கு இருக்க வேண்டும். நாட்டில் உள்ள பெரும்பான்மை மக்கள் வாக்களித்தால் மட்டுமே ஒருவர் பிரதமராக முடியும். அப்படி பார்த்தால், மோடிக்கு அடுத்தபடியாக பார்த்தாலும், தமிழகத்தை சேர்ந்தவர் என்று பார்த்தால் நிறையப் பேரைச் சொல்லலாம்.


திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார். காக்ரோஜ் ஜனதாக் கட்சியின் தலைவர் அபிஜித் திப்கேவின் ஆதரவும் ஸ்டாலினுக்கு உண்டு. அண்ணாமலைக்கும் தேசிய அளவில் நல்ல பெயர் உண்டு. விஜய்க்கும் அந்தப் பெயர் இருக்கிறது.  ஆனால் இதில் பாஜகவின் ஆதரவு யாருக்குக் கிடைக்கும் என்பதை வெளிப்படையாக சொல்லி விளக்க வேண்டியதில்லை.


விஜய், சினிமா ஹீரோவாக இருந்து அரசியலுக்கு வந்தவர் என்பதால் மக்களுக்கு நன்கு அறிமுகமானவரும் கூட. தென் மாநிலங்களில் விஜய்க்கு நல்ல பாப்புலாரிட்டி உள்ளது. சமீபத்தில் ஆந்திராவுக்கு அவர் போனபோதும், மங்களூருக்குப் போன போதும் கூட்டம் அலை மோதியதைப் பார்த்தோம். கேரளாவுக்கு அவர் இன்னும் போகவில்லை. அங்கு தமிழ்நாட்டுக்கு இணையான ரசிகர் கூட்டம் அவருக்கு உள்ளது. வட இந்தியாவிலும் கூட விஜய்க்கு நல்ல மாஸ் இருப்பதாக சொல்கிறார்கள் தவெகவினர்.


அதேசமயம், தவெக என்ற புதிய கட்சியை வைத்துள்ள விஜய் பிரதமாக பாஜக எப்படி அனுமதிக்கும் என்பது மில்லியன் டாலர் கேள்வியாகும். ஒருவேளை தவெக.,வுடன் கூட்டணி வைத்து, லோக்சபா தேர்தலை சந்திக்க பாஜக திட்டமிட்டுள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.  


தமிழகத்தில் இருந்து அதிக எம்.பி.,க்களை பெற வேண்டும் என்றால் இன்றைய தேதியில் விஜய்யின் செல்வாக்கு மட்டும் தான் பாஜக.,விற்கு பலன் தரும். தென் மாநிலங்களில் பாஜகவுக்கு அதிக எம்.பிக்கள் தேவை. ஆந்திராவில் வலுவான கூட்டணியை பாஜக வைத்துள்ளது. கர்நாடகத்திலும் அதிக எம்.பிக்களை அறுவடை செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் பாஜக உள்ளது. கேரளாவை எதிர்பார்க்க முடியாது. தெலங்கானா உறுதியாகத் தெரியவில்லை.


தமிழ்நாட்டில் விஜய் மீதான மக்களின் கிரேஸ் இன்னும் குறையவில்லை. எனவே அவருடன் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி வைத்து அதிக தொகுதிகளை அள்ள பாஜக திட்டமிடுகிறதா என்ற கேள்வி எழுகிறது. அதிக எம்பி.,க்களை வென்றால் மட்டும் தான் பெரும்பான்மை பலத்துடன் மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்க முடியும்.


விஜய்யுடன் டீல் வைத்து, "இந்த முறை பிரதமராக எங்களுக்கு ஆதரவு கொடுங்கள்; அடுத்த முறை உங்களை பிரதமராக்குகிறோம்" என்று கூட தவெக உடன் பாஜக பேசுவதற்கு வாய்ப்புள்ளது. ஒருவேளை இது உண்மையாகும் பட்சத்தில், துணை ஜனாதிபதி கூறியது போல் தமிழர் ஒருவர் பிரதமராவார் என்ற வார்த்தையும் நிஜமாகும்.


அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.. இதெல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை என்று கூற முடியாது. ஒரு காலத்தில் மூப்பனார் பெயர் பிரதமர் பதவிக்கு அடிபட்டது. ஆனால் கூட இருந்தவர்களே காலை வாரியதால் அந்த வாய்ப்பு அவரிடமிருந்து நழுவிப் போனதாக அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் அத்தகைய பரபரப்பை கிளப்பி விட்டுள்ளார் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன்.. வேட்டி கட்டிய அல்லது சேலை கட்டிய அந்த தமிழ் பிரதமர் யார்?.. "பதவியேற்கும் வரை" காத்திருப்போம்!